ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி... 15
இன்று இந்தியாவில் வேளாண் துறை சார்ந்து சிறிதும் பெரிதுமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. அத்துறையில் நிலவும் அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் அவை செயல்படுகின்றன. ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’ (my Harvest farms) அத்தகைய நிறுவனங்களில் ஒன்று.
அதீத வேதிப்பொருட்களின் பயன்பாடு காரணமாக, நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் உட்பட வேளாண் உணவுகள் நஞ்சாக மாறிவருவது சர்வதேச அளவில் தீவிரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட உணவுகளை வாங்க மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வந்தாலும், போதிய வருமானம் இல்லாமல் விவசாயிகள் திணறிவரும் நிலையில், அவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய தயக்கம் காட்டும் சூழல் நிலவுகிறது.
இத்தகைய ஒரு சூழலில், விவசாயிகளை இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஊக்குவித்து, அவர்கள் விளைவிக்கும் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து, நேரடியாக மக்களுக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’.
» வணிகவழி வேளாண் சுற்றுலா 9: தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலா
» சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த இருவர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கடிதம்
பொறியியல் பட்டதாரிகளான அர்ச்சனாவும் அவரது கணவர் ஸ்டாலினும் இணைந்து 2018-ம் ஆண்டு ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினர். திருவள்ளூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 300-க்கு மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை விவசாயம் செய்து, முதற்கட்டமாக சென்னையில் விநியோகிக்கின்றனர்.
இந்த ஸ்டார்ட்அப் வழியாக, தமிழ்நாட்டில் இளம் பெண் தொழில்முனைவோர்களில் கவனிக்கப்படுபவராக திகழ்கிறார் அர்ச்சனா ஸ்டாலின். சென்னையை தாண்டி தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கும் தங்கள் செயல்பாட்டை விரிவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் அர்ச்சனா ஸ்டாலினிடம், அவரது ஸ்டார்ட் அப் பயணம் குறித்து உரையாடினேன்.
இன்று நீங்கள் ஒரு தொழில்முனைவர். பள்ளிப் பருவத்தில் என்னவாக வேண்டும் என விரும்பினீர்கள்? - ஐஏஎஸ் ஆவதுதான் என்னுடைய கனவாக இருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் நான் பெற்ற மதிப்பெண்ணுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்திருக்கும். ஆனால், அந்த சமயத்தில் மருத்துவத்துக்கு நுழைவுத் தேர்வு இருந்தது. அதில் சொற்ப மதிப்பெண்ணில் எனக்கு சீட் கிடைக்காமல் போனது.
இதனால், பொறியியல் நோக்கி நகர முடிவுசெய்தேன். கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜியோஇன்பர்மேட்டிக்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். வெளிநாடு சென்று அத்துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது என்னுடைய புதிய இலக்காக மாறியது.
கல்லூரி முடித்த 3 ஆண்டுகளிலேயே சொந்தமாக தொழில் தொடங்கி விட்டீர்கள். ஆய்வுப் பணியை இலக்காகக் கொண்டு பயணித்த உங்களுக்குள் எப்போது தொழில்முனைவு சிந்தனை வந்தது? - மிகவும் தற்செயலானதுதான் அது. கல்லூரியில் படிக்கும்போது சகமாணவர் ஸ்டாலினுக்கும் எனக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் சமூகம் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்கள். மூன்றாம் ஆண்டு படிக்கையில் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தோம்.
மக்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை செய்வதுதான் எங்கள் பணி. இதற்காக பல்வேறு ஊர்களுக்குப் பயணித்து மக்களுடன் உரையாடினோம். அப்போதுதான் எனக்குள் இருந்த தலைமைத்துவத்தையும் தொழில்முனைவு சிந்தனையையும் நான் அடையாளம் கண்டேன்.
கல்லூரி முடித்தவுடன் நானும் ஸ்டாலினும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டோம். என் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறினேன். இதனிடையே டிசிஎஸ் நிறுவனத்தில், நான் பட்டம் பெற்ற ஜியோ இன்பர் மேட்டிக்ஸ் பிரிவிலேயே வேலை கிடைத்தது.
அத்துறையில் வெளியே நிறைய தொழில் வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து, நானும் ஸ்டாலினும் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தோம். ஸ்டாலினின் சொந்த ஊரான விருது நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஜியோஇன்பர்மேட்டிக்ஸ் சார்ந்து சிறிய அளவில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தோம்.
வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த சூழலில், நிலையான வருமானம் தரக்கூடிய நல்ல வேலையில் சேர்வதைத்தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். நீங்கள் எந்த நம்பிக்கையில் வேலையை விட்டுவிட்டு நிறுவனம் ஆரம்பித்தீர்கள்? - எங்களுக்கு அந்த சமயம் பெரிய இலக்குகள் இல்லை. எதையும் முயன்று பார்ப்போம் என்ற மனநிலையே இருந்தது, வருமானம் குறித்து பெரிய அளவில் கவலைப்படவில்லை.
எங்கள் திறன் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. தவிர, காந்தியின் கொள்கையில் ஈர்க்கப்பட்டிருந்த நாங்கள், எங்கள் தேவைகளை மிகவும் குறைத்திருந்தோம். எதனால் பெரிய அளவில் பணத் தேவை எங்களுக்கு இல்லை. இதனால், நிறுவனம் தொடங்கும் முடிவு சவாலானதாக இல்லை.
இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் எண்ணம் எப்போது உதயமானது? அந்த ஐடியாவை எப்படி செயல்படுத்தினீர்கள்? - சில காரணங்களால் எங்கள் ஜியோஇன்பர் மேட்டிக்ஸ் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தது. தொடர்ந்து நிறுவனத்தை நடத்த முடியாமல் போனது. வெவ்வேறு வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. இந்தச் சூழலில் ‘ஜாக்ரிதி யாத்ரா’ (Jagriti yatra) அமைப்பு மூலம் 2014-ல் அகில இந்திய அளவில் கிராமங்களுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அது என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இந்திய அளவில் உணவு என்பது பிரச்சினையாக இருப்பதை, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுக்கு பெரும் தேவை இருப்பதை அந்தப் பயணத்தில் உணர்ந்தேன். தொடக்கமாக விருதுநகரில் எங்கள் வீட்டு மாடியிலேயே சிறு தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவித்தோம். இதன் தொடர்ச்சியாக பெரிய அளவில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடிவெடுத்தோம். அப்படி உதயமானதுதான் ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’.
நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் பேசி, அவர்கள் நிலத்தில் இயற்கை முறையில் பயிரிடச் செய்தோம். அதை நாங்களே கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கினோம். ஒவ்வொரு வாரமும் அந்த வாரம் அறுவடை செய்யப்படும் காய்கறிகளின் பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி விடுவோம். அவர்கள் தேர்வு செய்யும் காய்கறிகளை முறையாக விநியோகித்து விடுவோம்.
எந்த விவசாயி தோட்டத்தில் காய்கறி விளைவிக்கப்பட்டது என்பது உட்பட விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியும். படிப்படியாக, மக்கள் எங்களைத் தேடிவரத் தொடங்கினர்.2018-ம் ஆண்டு 18 வாடிக்கையாளர்களுடன் மை ஹார்வஸ்ட் ஃபார்ம் தொடங்கியது. இன்று சென்னையில் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளோம்.
இயற்கை விவசாயம் மூலம் அதிக உற்பத்தி மேற்கொள்ள முடியாது என்பது பரவலாக முன்வைக்கப்படும் ஒரு வாதம். இத்தகைய சூழலில், உலகின் 800 கோடி மக்களுக்கு இயற்கை விவசாயம் மூலம் உணவு அளிப்பது எந்த அளவுக்கு சாத்தியம்? - நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு நாம் உண்ணும் உணவே அடிப்படை காரணமாக இருக்கிறது. நஞ்சில்லா உணவை பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. ஆனால், இன்று உலக அளவில் இயற்கை விவசாயத்தின் பங்கு வெறும் 2 சதவீதம்தான். இந்தச் சூழலில், நாம் உடனடியாக, இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் மாற முடியாது. அது எளிதில் சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, அது பெரும் நெருக்கடிக்கு நம்மைத் தள்ளும் என்பதற்கு இலங்கை ஒரு சமீபத்திய உதாரணம்.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரையில், நாம் 100 சதவீதம் இயற்கை விவசாயம் என்பதை இலக்காக் கொண்டு பயணிக்க முடியாது, முடிந்த வரை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும். முதலில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், விவசாயம் சார்ந்து மக்களிடம் புரிதல் ஏற்படுத்துவது.
நமக்கு வருடத்தில் அனைத்து நாட்களிலும் ஆப்பிள் கிடைக்கிறது. ஆனால், ஆப்பிள் விளைவது 4 மாதங்கள் மட்டுமே. நம்மிடம் வருவது எல்லாம் 10 மாதங்கள் பதப்படுத்தப்பட்டவை. நாம் அன்றாடம் உண்ணும் பல பழங்கள், காய்கறிகள் இவ்வாறு பதப்படுத்தப்பட்டே நம்மை வந்தடைகின்றன.
எனவே, அந்தந்தப் பருவநிலைக்கு விளையும் காய்கறிகள், பழங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். எளிமையாகச் சொல்லப்போனால், நம் நுகர்வை முறைப்படுத்த வேண்டும். இதுவே மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.
இயற்கை விவசாயம் குறித்து சிந்திப்பதற்கு முன்பாக நம்முடைய வேளாண் துறையில் நிலவும் அடிப்படை சிக்கலைத் தீர்ப்பது அவசியம். விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் நம் நாட்டில் மட்டும்தான் நிகழ்கிறது. வளர்ந்த நாடுகளில் வேளாண்மை என்பது லாபம் ஈட்டும் தொழில்.
ஏன் நம்மால் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முடியவில்லை? வேளாண் துறையை நாம் புதிய கண்ணோட்டத்தில் அணுக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். வேளாண் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஸ்டார்ட்அப் அணுகுமுறை மூலம் குறிப்பிடத்தக்க தீர்வை எட்ட முடியும் என்று நம்புகிறேன்.
- riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago