அமேசான் வேலையா.. அலறும் ஊழியர்கள்..

By எஸ்.ரவீந்திரன்

சமீபத்தில் பெர்லின் வந்தார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஸ். உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர். சொத்து மதிப்பு 11,200 கோடி டாலர். அவரின் அமேசான் நிறுவனத்தை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் அமேசான் பிரபலம். சிறந்த புதிய கண்டுபிடிப்புக்கான விருது வாங்க கடந்த வாரம் பெர்லின் வந்தார் ஜெப். அவருக்கு எதிராக அமேசான் ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். எதற்காக இந்தப் போராட்டம்?

அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் உண்டு. மொத்தம் 5 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு லாபம் மட்டுமே 300 கோடி டாலர். ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளமும் அதிகம்தான். அமேசான் கிளைகள் இருக்கும் நாடுகளில் குறைந்தபட்சமாக என்ன சம்பளம் வழங்க வேண்டுமோ அதை வழங்கி வருகிறது. ஆனாலும் 50 ரூபாய் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு, 100 ரூபாய்க்கு வேலை வாங்கி விடுவதாக நிறுவனம் மீது ஊழியர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

பிரிட்டனில் ஸ்டாப்போர்டுஷயரில் இருக்கிறது அமேசான் நிறுவனத்தின் குடோன். இங்குதான் வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்ட கோடிக்கணக்கான பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பிரிட்டனின் சன் பத்திரிகையில் பணியாற்றும் ஜேம்ஸ் பிளட்வொர்த் என்ற நிருபர் ஒரு வாரம் இந்த குடோனில் வேலை பார்த்தார். ஊழியர்களின் பணிச்சுமை குறித்து கட்டுரை எழுதுவதுதான் அவரது நோக்கம். பஸ்களிலும் கார்களிலும் ஊழியர்கள் சாரை சாரையாக வருகிறார்கள்.

காலையில் 7.30-க்கு வேலை ஆரம்பிக்கிறது. மாலை 6 மணிக்கு முடிகிறது. 9 விநாடிக்கு ஒரு பொருளை ஒவ்வொரு ஊழியரும் பேக் செய்ய வேண்டும். மணிக்கு 300 பொருட்கள். அந்த வேகத்தில் செய்தால்தான் ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிவரி செய்ய முடியும். இந்த எண்ணிக்கை குறைந்தால், விசாரணை நடக்கும். இந்த பதட்டத்திலேயே ஊழியர்கள் ஓடி ஓடி வேலை பார்க்கிறார்கள். ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்க முடிவதில்லை. மேல் மாடியில் இருப்பவர்கள் 4 மாடி இறங்கி ஓய்வறைக்கு வர வேண்டும். அங்கு சென்றால் திரும்பி வர நேரமாகி விடும் என்பதால், கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீர் கழிக்கிறார்கள்.

வேலை முடிந்ததும் அதை பாத்ரூமில் கொண்டு போய் கொட்டி விட்டு வீட்டுக்குப் போகிறார்கள். வேலை நேரத்தில் தண்ணீர குடித்தால், பாத்ரூம் போக வேண்டியிருக்கும் என்பதால் ஊழியர்கள் தண்ணீரும் குடிப்பதில்லை. அந்த அளவுக்கு வேலை டென்ஷன் என கூறியிருக்கிறார்.

இவர் தனது ஒரு வார வேலை அனுபவத்தை புத்தகமாக எழுதியிருக்கிறார். அதில், `அமேசான் நிறுவனத்தில் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களின் நிலைமை மிகவும் மோசம். எந்த நேரத்தில் வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கழிவறைக்குச் சென்றால், அதனால் பிரச்சினை ஏற்படுமோ என்ற பயத்தில் அங்கு செல்வதில்லை. மறைவாக நின்று, பாட்டிலில் சிறுநீர் கழிக்கிறார்கள்..' எனக் கூறியிருக்கிறார்.

பிரிட்டனின் தொழிலாளர் உரிமை அமைப்பு, அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் 500 ஊழியர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அத்தனை பேருமே, ஏறக்குறைய அடிமை போல் தான் வேலை பார்க்கிறோம் எனக் கூறியிருக்கிறார்கள். நிறுவனம் சொல்லும் நேரத்துக்குள் பணியை முடிக்க முடிவதில்லை. அந்த அளவுக்கு நெருக்கடி இருக்கிறது. உடல்நிலை சரியில்லை என விடுமுறை எடுத்தால், மோசமாக நடத்துகிறார்கள் என 55 சதவீத ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள்.

பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர் ஆடம் லிட்லர் ரகசிய கேமராவுடன் அமேசான் குடோனில் வேலை பார்த்திருக்கிறார். `குடோனின் பரப்பளவு ஏறக்குறைய 8 லட்சம் சதுர அடி. ஒவ்வொரு ஊழியரின் கையிலும் ஒரு ஸ்கேனர் இருக்கும். அதில் எடுக்க வேண்டிய பொருளின் பெயர் இருக்கும். அதோடு எத்தனை விநாடிக்குள் அதை எடுக்க வேண்டும் என்ற விவரமும் இருக்கும். அதை கையில் வைத்துக் கொண்டு அந்தப் பொருளைத் தேடி எடுத்து டிராலியில் போட வேண்டும்.

மாற்றி எடுத்தால் ஸ்கேனர் அலறும். ஒரு ஷிப்ட் 10 மணி நேரம். இடையில் 2 முறை 15 நிமிட நேரம் ஓய்வு. உணவு இடைவேளை 30 நிமிடம். பணி நேரத்தில் ஊழியர்கள் யாரும் உட்காரக் கூடாது. நின்று கொண்டேதான் வேலை பார்க்க வேண்டும். உட்கார்ந்தால் வேலை காலி. இதனால் ஒரு நாளில் ஒருமுறையாவது யாராவது மயங்கி விழுவார்கள். ஆம்புலன்ஸ் வரும். தூக்கிக் கொண்டுபோகும். அப்போது கூட மற்ற ஊழியர்களுக்கு அதை கவனிக்க நேரம் இருக்காது என கூறியிருக்கிறார் ஆடம்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் உலகம் முழுவதிலும் இருந்து ஆர்டர்கள் குவியும். அந்த நேரத்தில் தற்காலிக ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் அமேசான் தேர்வு செய்யும். இருந்தாலும் அத்தனை ஊழியர்களும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டியிருக்கும். விடுமுறை இருக்காது. விடுமுறை நாட்களில் கண்டிப்பாக ஓவர் டைம் பார்க்க வேண்டியது இருக்கும் என்கிறார் முன்னாள் ஊழியர் ஒருவர்.

AMAZONCOM-GERMANY_ ஜெப் பிஸோஸுக்கு எதிராக பதாகை ஏந்தி போராடும் அமேசான் ஊழியர் right

`வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருளைத் தேடிக் கண்டுபிடித்து தரும் பணியில் இருக்கும் ஊழியர்கள் தினமும் தங்கள் 10 மணி நேர ஷிப்டில் 15 மைல் தூரம் வரை நடக்க வேண்டியிருக்குமாம். காரணம். ஒவ்வொரு பொருளும் வேறு வேறு இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு குடோனும் 10 அல்லது 15 கால்பந்து மைதானம் அளவுக்கு பெரியதாக இருக்கும். மேலும் அனைத்துப் பொருட்களும் எடுக்கும் உயரத்தில் இருக்கும் என்றும் சொல்ல முடியாது.

ஏணியில் ஏறி எடுக்க வேண்டும். இப்படி பல அவஸ்தைகள். இவர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை இருக்கும். ஆனால் ஐந்தாவது நாளும் கண்டிப்பாக ஓவர்டைம் பார்க்க வேண்டும் என்ற உத்தரவு வரும். மறுக்க முடியாது. மறுத்தால் வேலைக்கு ஆபத்து வந்து விடும். அதை சொல்லவும் மாட்டார்கள். மறுநாள் வேலைக்கு வரும்போது, ஐ.டி. கார்டை ஸ்வைப் செய்தால் அது வேலை செய்யாது. அப்போதுதான் தமக்கு வேலை பறிபோனதே தெரியவரும்' என இங்கிலாந்தின் ஹப்பிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆனால் அத்தனை குற்றச்சாட்டையும் அமேசான் மறுத்துள்ளது. ஊழியர்கள் அனைவருக்கும் குடிநீர், டாய்லெட் என அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறோம். ஒவ்வொரு தளத்திலும் டாய்லெட் வசதி இருக்கிறது. அமெரிக்காவில் வேலை பார்க்க சிறந்த நிறுவனங்களில் முதல் இடத்திலும் இங்கிலாந்து நிறுவனங்களில் 7-வது இடத்திலும் இருக்கிறோம். ஊழியர்களுக்கு சிறந்த பணிச்சூழலை வழங்க அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறோம் என அமேசான் கூறியுள்ளது.

-ravindran.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்