ஏர் இந்தியாவின் எதிர்காலம்?

By வாசு கார்த்தி

சா

ம,பேத, தான, தண்டம் என அனைத்து நடவடிக்கைகளை எடுத்தும் ஏர் இந்தியா லாபப் பாதைக்குத் திரும்பவில்லை. கடைசியாக சரணாகதி அடைவதுபோல பங்கு விலக்கலையும் அறிவித்தது மத்திய அரசு. ஏர் இந்தியா பங்குகளை விற்பது சரியா தவறா என்பதையெல்லாம் தாண்டி நிறுவனத்தை எப்படியாவது காப்பாற்றலாம் என்னும் முடிவுக்கு வந்ததை அடுத்து தனியாருக்கு விற்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு சீக்கிரம் ஏர் இந்தியாவுக்கு புதிய உரிமையாளர்கள் கிடைப்பதற்கான சூழல் இருப்பது போல தெரியவில்லை. பங்கு விலக்கல் அறிவிப்புக்கு முன்பு, `ஏர் இந்தியா பங்குகளை விலக்கிக்கொள்ளும் பட்சத்தில் அதனை வாங்க தயாராக இருக்கிறோம்’ என்று அறிவித்த நிறுவனங்கள் தற்போது போட்டியில் இருந்து விலக தொடங்கி இருக்கின்றன.

இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கும் அளவுக்கான பெரிய நிறுவனம் இல்லை என கூறிவிட்டது. டாடா குழுமம் குறித்த அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகவில்லை. விருப்பம் இல்லை என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. போட்டியில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை என்னும் செய்திகளும் வெளியாகி வருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காண்பித்திருந்தாலும் அவை எந்த நிறுவனங்கள், என்ன காரணம் என்று பார்ப்பதற்கு முன்பு இந்த நிறுவனங்கள் போட்டியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

விலகக் காரணம் என்ன?

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு நோக்கம் இருக்கும். ஆனால் ஏர் இந்தியா பங்கு விலக்கலுக்கு மத்திய அரசு விதித்திருந்த நிபந்தனைகளே பிற நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முடிவிலிருந்து விலகிக் கொள்ள காரணம் என கூறப்படுகிறது. உதாரணத்துக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு ஏர் இந்தியாவின் வெளிநாட்டு போக்குவரத்தை கைப்பற்றுவது மட்டுமே குறிக்கோள். ஆனால் மத்திய அரசு நிறுவனத்தை பிரிக்காமல் மொத்தமாக ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை வாங்க வேண்டும் என கூறியிருக்கிறது. உள்நாட்டில் கணிசமான சந்தையை வைத்திருக்கும் இண்டிகோ, உள்நாட்டு போக்குவரத்தையும் வாங்குவதினால் ஆதாயம் ஏதும் இருக்காது எனக் கருதுகிறது.

இது தவிர, மத்திய அரசு வெளியிட்டுள்ள பல விதிமுறைகள் மற்றும் ஏர் இந்தியாவின் நிலைமையும் வாங்கும் நிறுவனத்துக்கு சாதகமாக இருக்கவில்லை. முதலாவது முக்கியமான பிரச்சினை ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனத்துக்கு கிடைக்க இருக்கும் கடன் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை என்ன செய்வது என்னும் யோசனைதான். தற்போதைக்கு 11,214 நிரந்தர பணியாளர்கள் இருக்கிறார்கள். பங்கு விலக்கலுக்கு முன்பு வழங்கப்படாமல் இருக்கும் நிலுவை சம்பளம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

76 சதவீத பங்குகள்தான் வாங்கும் நிறுவனத்துக்கு கிடைக்கும். மீதமுள்ள பங்குகள் அரசின் வசம் இருக்கும். அரசின் பங்கு இருக்கும் வரை இதனை தனி நிறுவனமாகவே நடத்த வேண்டி இருக்கும். அதாவது ஏற்கெனவே இருக்கும் நிறுவனத்துடன் இணைக்க முடியாது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு நிறுவனத்தை நடத்த வேண்டும், ஏர் இந்தியாவை பட்டியலிட வேண்டும் என்னும் விதிமுறைகள் நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த சுமையுடன் நிறுவனத்தை வாங்குபவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடு செய்தால்தான் நிறுவனத்தை மீட்க முடியும் என்பது மிகப்பெரிய ரிஸ்க் என நிறுவனங்கள் நினைக்கின்றன. கேபிஎம்ஜி நிறுவனத்தின் ஆம்பர் துபே கூறும்போது மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்தும்பட்சத்தில் குறைந்தபட்சம் 4 விமான நிறுவனங்கள் போட்டியிடும் வாய்ப்பு உருவாகும் என கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆனால் விமான போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள், விதி முறைகளில் எந்தவிதமான மாற்றமும் செய்ய முடியாது என்னும் மன நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி, ஏர் இந்தியாவை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக விமான நிறுவனங்கள் மறைமுக அழுத்தம் கொடுக்கின்றன என்று விமர்சனம் செய்திருக்கிறார். தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இருக்கும் நிறுவனங்கள் எவை அதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்பதற்கு முன்பு ஏர் இந்தியாவை விற்பதற்கான சூழல் ஏன் உருவானது என்பது குறித்த சிறிய பிளாஷ்பேக்.

கடனுக்கு என்ன காரணம்?

2005-ம் ஆண்டு ஏர் இந்தியாவின் ஆண்டு வருமானம் ரூ.7,000 கோடி. ஆனால் 68 விமானங்களை ரூ.50,000 கோடிக்கு வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒர் ஆண்டுக்கு பிறகு இந்தியன் ஏர்லைன்ஸ் 43 விமானங்களை வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2007) இந்த இரு விமான நிறுவனங்களை இணைப்பதற்கு அப்போதைய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஃபிரபுல் படேல் நடவடிக்கை எடுத்தார். சில நாட்களுக்கு முன்பு, நிறுவனங்கள் இணைப்பு என்பது தனிப்பட்ட முடிவு அல்ல, அரசின் கூட்டு முடிவு என படேல் கூறியிருந்தார்.

இதன் பிறகு 2012-ம் ஆண்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜய் சிங், இரு விமான நிறுவனங்களை இணைத்தது மிகப்பெரிய தவறு . அதே சமயத்தில் இவற்றை மீண்டும் பிரிப்பதும் மிகப்பெரிய பயனில்லாத பணியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியாவை மீட்பதற்கு ரூ.30,000 கோடி அளவுக்கு நிதி வழங்கப்பட்டது. புதிய நிர்வாக இயக்குநர் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் எந்த நடவடிக்கையும் ஏர் இந்தியாவை மீட்கவில்லை. தற்போது ஏர் இந்தியாவின் கடன் ரூ.50,000 கோடிக்கு மேல் இருக்கிறது. இதில் பாதிக்கு மேல் விமானங்களை வாங்கியதற்கான கடனாகும். இதனை தொடர்ந்து இந்த பங்குகளை விற்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அடுத்த வாய்ப்புகள் என்ன?

உள்நாட்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டினாலும் வெளிநாட்டு நிறுவனங்களான லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்திருக்கின்றன. இந்திய நிறுவனங்கள் தயங்கினாலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்ட காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் விமான சந்தையில் 44 சதவீதம் ஏர் இந்தியா வசம் இருக்கிறது. இந்த சந்தையை உடனடியாக கைப்பற்ற முடியும். மேலும் இந்தியாவின் உள்நாட்டு சந்தையிலும் ஏர் இந்தியாவுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக உள்நாட்டு சந்தையில் தடம்பதிக்க முடியும். சர்வதேச அளவில் 2,500-க்கும் மேற்பட்ட விமான வழித்தடங்கள் உள்ளன. தவிர அனைத்து விமான நிலையங்களிலும் முழு கட்டமைப்புடன் ஏர் இந்தியா இருக்கிறது. இவர்களுக்கு ஒரே பிரச்சினை கடன் மற்றும் பணியாளர்கள்.

தற்போதைய நிரந்தர பணியாளர்களில் 37.6 சதவீத நபர்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் வெளியேற இருப்பதால் பணியாளர்களை குறைக்க முடியும் என்னும் நம்பிக்கை மற்றும் கடன் இருந்தாலும் செயல்பாட்டு அளவில் லாபம் ஈட்டி வரும் நிறுவனம் என்பதால் மேம்படுத்த முடியும் என வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன.

மே 14-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு இறுதி நாள். மே 28-ம் தேதி தகுதி வாய்ந்த நிறுவனங்கள் அறிவிக்கப்படும். தற்போதைய விதிமுறைகளுடன் ஏர் இந்தியா பங்குகள் விற்கப்படுமா அல்லது விதிமுறைகள் தளர்த்தப்படுமா? இன்னும் நான்கு வாரங்களில் ஏர் இந்தியாவின் எதிர்காலம் தெளிவாகிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்