பே
ருந்து கட்டணம் இல்லாமல் நடுவழியில் தவித்தவர்கள், மருந்து வாங்க பணமில்லாததால் இறந்த குழந்தை, பாதியில் நின்ற திருமண ஏற்பாடு, சிறு வியாபாரிகளை ஒரே நாளில் கையேந்த வைத்தது என பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய காயங்கள் இன்னமும் மக்கள் மனதிலிருந்து ஆறவில்லை. புழக்கத்தில் இருந்த 86 சதவீத பணத்தை ஒரே கையெழுத்தில் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் மக்கள் பணத்துக்காக நாட்கணக்கில் காத்துக் கிடந்தனர். 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி என்றதுமே பலருக்கும் இந்த நினைவுகள் வந்து நெஞ்சில் மோதலாம். அந்த பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத இந்த பதினைந்து மாதங்களில் மீண்டும் அப்படியான ஒரு நிலை உருவாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பல நகரங்களில் பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் பணமில்லாமல் மூடிக் கிடக்கின்றன. அறிவிக்கப்படாத பணத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் ஒருமுறை பால்பவுடர் வாங்க பணமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மக்களின் பணத்தேவைகளை சரியாகக் கணிக்கவில்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். பணமதிப்பு நீக்கத்தால் மக்கள் மின்னணு பரிவர்த்தனைக்கு மாறுவார்கள் என்கிற இலக்கு தோல்வியடைந்த நிலையில், பணத் தட்டுப்பாட்டால் அதை உருவாக்க முனைவதாக ஒருசில தகவல்கள் வெளிவந்துள்ளன.
உண்மையில் இவை மட்டும்தான் காரணமா... என்னதான் நடக்கிறது இந்தியாவின் பணப் புழக்கத்தில்.? என்னதான் செய்கிறது அரசு?
பணத் தேவை அதிகரிப்பு
மக்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் அளவு கடந்த மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் ரூ.1.4 லட்சம் கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் இதே காலத்தில் 1.1 லட்சம் கோடி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பணமதிப்பு நீக்கம் காரணமாக பணம் எடுக்கும் விவரங்களை ஒப்பிட முடியாது. அதுபோல டெபாசிட்களை பொறுத்தவரை மார்ச் மாத நிலவரப்படி 6.7 சதவீதமாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இது 15.3 சதவீதமாக இருந்தது. மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் விகிதம் குறைந்துள்ளதுடன், பணம் எடுக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.
பற்றாக்குறை புழக்கம்
வளர்ச்சி அதிகமாக இருப்பதால் மக்களிடம் இருக்கும் பணத்தின் அளவு ரூ.19.4 லட்சம் கோடியாக இருக்கிறது. ஆனால் பணப் புழக்க மதிப்போ ரூ.17.5 கோடியாக இருக்கிறது. இதனால் உருவாகும் பற்றாக்குறை காரணமாகத்தான் பணத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது என்கிறது எஸ்பிஐ அறிக்கை. ஆனால் இந்த பற்றாக்குறை தொகை ரூ.1.9 லட்சம் கோடிதான். அதிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் ரூ.70,000 கோடி அளவுக்கு பணத்தட்டுப்பாடு இருக்கும் என்கிறது எஸ்பிஐ ஆய்வு.
ஏடிஎம் இயந்திர குழப்பம்
பணமதிப்பு நீக்கத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திங்களில் பணம் அடுக்கும் பெட்டியிலிருந்து, மென்பொருட்கள் வரை மாற்ற வேண்டும். பணமதிப்பு நீக்க காலத்தில் இந்த கட்டமைப்புக்கு வங்கிகள் ரூ.3,800 கோடி வரை செலவு செய்தன. 200 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்ட பிறகு ஏடிஎம் சேவை வழங்கும் நிறுவனங்கள் இயந்திரங்களின் கட்டமைப்பை மாற்றவில்லை. ஏற்கெனவே ரூ.3,800 கோடி நஷ்டம் என்பதால் மீண்டும் இதற்காக வங்கிகள் செலவிடவில்லை.
அச்சடிப்பு நிறுத்தம்
ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது 44 சதவீதம் குறைந்துள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. நாசிக் ரூபாய் நோட்டு அச்சகத்தில் 500 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை 2017- ம் ஆண்டு நவம்பரிலிருந்து நிறுத்தியுள்ளனர். ரூ.200, ரூ.100, ரூ.20 நோட்டுகளையும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிறுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. 2017-18-ம் ஆண்டுக்கான 500 ரூபாய் அச்சடிப்பு அளவு முடிந்துவிட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதர ரூபாய் நோட்டுகள் புதிய வடிவமைப்பில் கொண்டு வரும் திட்டம் உள்ளதால் அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அளிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.
ஆர்பிஐ கட்டுப்பாடுகள்
வங்கிகளின் பணத் தேவைக்கும் ஆர்பிஐ அளிப்புக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. ஒரு மாதத்திற்கு வங்கிகளுக்கு 40,000 கோடி முதல் 45,000 கோடி வரை தேவைப்படுகிறது. ஆனால் ஆர்பிஐ 20,000 கோடிதான் அளிக்கிறது. மக்களின் பணத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி பேடிஎம் போன்ற தனியார் செயலி நிறுவனங்கள் வளர்கின்றன.
தேர்தல் பதுக்கல்
கர்நாடக மாநில தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக அதிக அளவு 2,000 ரூபாயை அரசியல் கட்சியினர் பதுக்கியுள்ளனர் என்கிற கருத்தும் நிலவுகிறது. ஆனால் எப்போதுமே இந்தியாவின் ஏதாவது ஒரு மாநில தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல மாநில தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடந்தபோதும் இந்தியா முழுவதும் பணத் தட்டுப்பாடு உருவானதில்லை.
2000 ரூபாய் நோட்டு
நாட்டின் உயர் மதிப்பிலான பணம்தான் பதுக்கலுக்கு பயன்படுகிறது என 1000 ரூபாய் நோட்டை தடை செய்தது அரசு. ஆனால் அதற்கு பதிலாக உயர்மதிப்பாக 2000 ரூபாய் நோட்டை கொண்டுவந்தது. “இந்த பணம் அதிக மதிப்பு கொண்டதால் மக்கள் கையில் சாதாரணமாக அதிகம் புழங்கவில்லை. அதனால் தினசரி பரிமாற்றத்துக்கு பயன்பட்ட நோட்டாகவும் இல்லை. ஆனால் அதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது” என்கிறார் எம்பேஸ் பேமண்ட் சிஸ்டத்தின் ரவி ராஜகோபாலன். மொத்த பணமதிப்பில் 52.2 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் பணப் பதுக்கல்காரர்களுக்கு முன்பைவிடவும் புதிய உயர்பணமதிப்பு நோட்டுகள் வசதியாக உருவானது.
இந்த நிலையில்தான் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வழக்கம்போல இந்த குழப்பத்தை வீணான வதந்தி என மறுதலித்துள்ளதுடன், பணத் தேவை அதிகரித்துள்ளதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என்கிறார். பணத் தேவைகள் அதிகரித்துவரும் நிலையில் புதிய வடிவமைப்புக்காக ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது ஏன் நிறுத்தப்பட வேண்டும்? மக்களின் பணத் தேவைகளை ஏன் முன்கூட்டியே கணிக்கவில்லை என கேள்வி எழுகிறது. ரிசர்வ் வங்கியும், அரசும் வங்கிகளை தவறாக வழி நடத்துகின்றன என முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறும் குற்றசாட்டுகளை புறம் தள்ள முடியாது.
பணமதிப்பு நீக்கம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், “பணமதிப்பு நீக்கம் திட்டமிடாமல் செயல்படுத்திய ஒன்று. அதனால் கிடைத்த பயன்கள் மிகவும் குறைவு. வரலாறுக்கு வேண்டுமானால் பயன்படும்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
பணமதிப்பு நீக்கத்தால் மின்னணு வர்த்தகம் அதிகரிக்கும் என்றனர். பணத் தேவை அதிகரித்துள்ளது. பணத்தட்டுப்பாடும் நிலவுகிறது. 1,000 ரூபாய் கறுப்பு பணம் ஒழியும் என்றனர். இப்போதோ 2,000 ரூபாயாக பதுக்கப்படுகிறது. பணமதிப்பு நீக்கம் போல, இந்த முறையும் தலையைச் சொறிய கொள்ளிக் கட்டையை எடுத்தால் நிர்வாக திறமையற்ற அரசு என நொந்து கொள்வதைத் தவிர வழியில்லை.
-maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago