15-வது நிதிக்குழு எதிர்நோக்கும் சவால்கள்?

By செல்வ புவியரசன்

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே வரி வருவாய்ப் பகிர்வையும் இந்தியாவின் தொகுப்பு நிதியிலிருந்து மாநிலங்களுக்குக் கொடுக்கும் மானியங்களின் அளவையும் நிதிக்குழுவே தீர்மானிக்கிறது. எனவே நிதிக்குழு எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் மாநில அரசுகளின் பொருளாதார நிலையிலும் நடவடிக்கைகளிலும் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

என்.கே. சிங் தலைமையில் தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் 15-வது நிதிக்குழு, 2020-2025 ஆண்டுகளுக்கான முடிவுகளை எடுக்கும். ஆனால், இதற்கு முன்பிருந்த 14 நிதிக் குழுக்களைக் காட்டிலும் நோக்கத்திலும் செயல்பாடுகளிலும் நிறைய சவால்களை இக்குழு எதிர்நோக்கியிருக்கிறது.

தென்னகத்தின் எதிர்ப்புக் குரல்

கர்நாடக முதல்வர் சித்தராமையா, 15-வது நிதிக்குழுவின் செயல்திட்ட வரையறைகளை விமர்சித்திருப்பதோடு அதைக் கடுமையாக எதிர்க்கவேண்டும் என்று தென்னிந்திய முதல்வர்களுக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும்கூட அழைப்பு விடுத்திருக்கிறார். சித்தராமையாவின் கோரிக்கைகளில் முக்கியமானது, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு இடையில் வரிவருவாய் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்பது.

மக்கள் தொகையின் அடிப்படையில் வருவாய்ப் பகிர்வு, தென்னிந்திய மாநிலங்களுக்கு மேலும் கூடுதலான வருவாயைப் பெற்றுத்தரும். ஆனால், 15-வது நிதிக்குழு 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பின்பற்றாமல், 1971-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படியே மதிப்பிடும் பணிகளைச் செய்கிறது என்பது சித்தராமையாவின் குற்றச்சாட்டு.

நிதிக்குழு தனது மதிப்பிடலில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பின்பற்றினால், அதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றம் ஏற்படலாம். தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மாற்றம் ஏற்படலாம். இப்படி செய்தால் தனக்கு வாய்ப்பாக இருக்கும் தொகுதிகளை இழக்க நேரலாம் என்று பாஜக கருதுகிறது என்றும் அதனாலேயே புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நிதிக்குழு பின்பற்றத் தயங்குகிறது என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில அரசுகள், வரி வருவாயைப் பகிர்ந்துகொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் அது தங்களின் மீது காட்டும் கருணையல்ல என்றும் வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றன. சந்திரபாபு நாயுடு, தென்மாநிலங்களிலிருந்து வரிகளை வசூலித்து, வட இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்கிறார்கள் என்று விமர்சித்திருக்கிறார்.

கேரள நிதியமைச்சர் தாமஸ் இசாக், இது தொடர்பாக வரும் ஏப்ரல் 10-ல் தென்னிந்திய நிதியமைச்சர்களின் மாநாடு ஒன்றையும் கூட்டியிருக்கிறார். இப்படி நேரடி அரசியல் குற்றச்சாட்டுகளைத்தாண்டி, பொருளாதார ரீதியாகவும் நிதிக்குழுவின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கின்றன.

இலக்கு ஆண்டு?

இதுவரையிலான நிதிக் குழுக்கள், மதிப்பிடலுக்கு `பேஸ் இயர்’ எனப்படும் அடிப்படை ஆண்டாக முந்தைய ஆண்டுகளில் ஒன்றினைத் தேர்வு செய்தன. அடிப்படை ஆண்டு முறையானது அந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி, பண வீக்கம், வருவாய் ஆகியவற்றைக் துல்லியமாக கணக்கிட்டு திட்டமிடுவதற்கு உதவியாக அமைந்திருந்தது. ஆனால், தற்போதையை நிதிக்குழு அதற்கு மாற்றாக `டெர்மினல் இயர்’ எனப்படும் இலக்கு ஆண்டு முறையைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது.

2015-2020 ஆண்டுகளை மதிப்பிடுவதற்கு நியமிக்கப்பட்ட 14-வது நிதிக்குழு, 2014-15-ம் நிதியாண்டைத்தான் தனது அடிப்படை ஆண்டாகத் தேர்வு செய்துகொண்டது. ஆனால், 2020-2025 ஆண்டுகளுக்கான 15-வது நிதிக்குழு மதிப்பீட்டுக்கு 2024-25ம் ஆண்டினை அடிப்படை ஆண்டாக முடிவு செய்திருக்கிறது. நடந்து முடிந்த நிதி ஆண்டுக்கு பதிலாக, இனி வர இருக்கும் நிதி ஆண்டை ஆதாரமாக கொண்டு கணிப்புகளின் அடிப்படையில் நிதி பகிர்வை திட்டமிடுவது எப்படி சரியாக இருக்கக்கூடும் என்னும் கேள்விகளும் எழுந்திருக்கிறது.

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் என்னவாகும்?

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், 2020, மார்ச் 31 வரைக்கும் பின்பற்றப்பட வேண்டும். அக்குழுவின் பரிந்துரையின்படி 42% வரி வருவாய் மாநிலங்களுக்கிடையில் பங்கிட்டுக் கொள்ளப்பட வேண்டும். 15-வது நிதிக்குழு பரிந்துரைகள் அதற்குப் பிறகுதான் செயல்பாட்டுக்கு வரும். ஆனால் 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலமான 2015-2020 ஆண்டுகளில் மத்திய அரசின் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பதை 15-வது நிதிக்குழு கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

நிதிக்குழுவின் பரிந்துரைகள் இனிவரும் ஆண்டுகளுக்கானவை என்பதால் ஒவ்வொரு நிதிக்குழுவும் தொடர் சங்கிலிகளைப் போல பின்தொடரவேண்டியது அவசியம். ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிதிக்குழு முந்தைய நிதிக் குழுக்களிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு நிற்கிறது.

புதிய இந்தியா 2022?

புதிய இந்தியா 2022 என்ற இலக்கின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் மத்திய அரசின் திட்டங்களை மதிப்பிடும் பொறுப்பும் 15-வது திட்டக்குழுவுக்கு இருக்கிறது. புதிய இந்தியாவுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டங்களை மதிப்பிடும் பணியும் திட்டக்குழுவுக்கு இருக்கிறது. ஆனால் இந்த மதிப்பிடலின்போது, ஏற்கெனவே இருந்த திட்டங்களை இடையிலே நிறுத்திவிட்டு வேறுபெயரில் அதே திட்டங்களைத் தொடங்கியதை திட்டக்குழு கணக்கிலெடுத்துக்கொள்ளுமா, அதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிப் பொறுப்பும் கவனத்துக்கு வருமா என்பதெல்லாம் தெரியவில்லை.

மிக முக்கியமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் துறைகளில் விவசாயம், பொது சுகாதாரம், வீட்டு வசதி என்று பெரும்பாலான துறைகள் மாநில அரசின் வசமே உள்ளன. கல்வி, மின்சாரம், வனப் பாதுகாப்பு ஆகிய துறைகள் பொதுப்பட்டியலில் இருந்தாலும் இத்திட்டங்கள் பெருமளவு மாநில அரசின் வாயிலாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாஜக அரசின் அரசியல் கொள்கைத் திட்டமாகவே செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்திற்கான செலவுகள் மத்திய அரசின் கணக்கில் கொள்ளப்படுமா, மாநில அரசின் கணக்கில் கொள்ளப்படுமா என்பதெல்லாம் பற்றி எந்தத் தெளிவும் இல்லை.

ஜிஎஸ்டிக்கு இழப்பீடு

நடைமுறைக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையால், மத்திய மாநில அரசுகளின் வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் நிதிக்குழு ஆராயவேண்டும். முக்கியமாக, ஜிஎஸ்டி முறையால் வரிவருவாய் இழப்பைச் சந்தித்துள்ள மாநிலங்களுக்கு அதற்குரிய இழப்பீட்டை அடுத்துவரும் ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கவேண்டும். அத்தகைய நிர்ணயம் மாநில அரசுகளின் இழப்புக்கு நியாயம் செய்வதாகவும் இருக்கவேண்டும்.

இதற்கு முன்பிருந்த நிதிக் குழுக்களைக் காட்டிலும் 15-வது நிதிக்குழுவின் மீது மாநில அரசுகளிடமிருந்து கடுமையான விமர்சனக் கணைகள் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், இழப்பீடுகள் கொடுப்பதற்குப் பதிலாக, ஜிஎஸ்டி அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதையே மத்திய அரசு விரும்பும் என்பதால் அந்தச் சுமை நிதிக்குழுவின் மீது அழுத்தாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.

மாநிலங்களின் நிதிப்பொறுப்பு

இந்தச் சவால்களையெல்லாம் தாண்டி, மாநிலங்கள் ஒவ்வொன்றும் வருவாய்ப் பற்றாகுறையில்லாத வகையில் வரவு-செலவுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற தனது நீண்ட கால இலக்கை உறுதிப்படுத்திவிடவும் தவியாய்த் தவிக்கிறது. நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவுத் திட்ட மேலாண்மைச் சட்டம் 2003-ஐ அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

அதற்கான கால வரம்பை ஒவ்வொரு மாநிலங்களும் சட்டத்திருத்தங்கள் மூலமாக நீட்டித்துக்கொண்டே வருகின்றன. வரிவருவாய்ப் பற்றாக்குறையே இல்லாமல் மாநிலங்கள் பட்ஜெட் போட்டால், வருவாய்ப் பற்றாக்குறைக்காக மானியங்களை நிர்ணயிக்கும் வேலையே நிதிக்குழுவுக்கு இருக்காது. நடக்கிற வேலையா இது?

-puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்