போராட்டங்களால் முடங்கும் பொருளாதாரம்

By நீரை மகேந்திரன்

இந்தியா மிகப் பெரிய பன்மைத்துவம் கொண்ட நாடு என்பதை நாம் அறிவோம். ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பல இன மக்கள் தனித்தனி நாடுகளாக பிரிந்திருக்கையில், இந்தியாவில் இந்த ஒருங்கிணைவு ஆச்சர்யமானது. ஆனால் நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வரும் அரசியல் குழப்பங்கள் உருவாக்கும் போராட்டங்களால் இந்தியாவின் இந்த அடிப்படையே ஆட்டம் காண்பதையும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக இனம், மொழி, சாதி, கலாசாரம், அரசியல் சார்பு என நாட்டை திரும்பிப் பார்க்க வைக்கும் போராட்டங்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. இதனால் உருவாகும் அசாதாரண சூழல் தொழில் துறையினரை அச்சம் கொள்ள வைத்துள்ளது. நாட்டின் ஏதாவது ஒரு திசையில் தினசரி கலவரம், தொழில்முடக்கம், வேலை இழப்பு என இந்தியா தவித்துக் கொண்டிருக்கிறது. அதன் நிகழ்நேர பிரச்சினைகள்தான் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரிய போராட்டம், நாடு தழுவிய அளவில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கான போராட்டமும்.

இதேபோன்று நாட்டின் பல பகுதிகளில், பல்வேறு காரணங்களால் ஏற்படும் தொடர்ச்சியான போராட்டங்கள் மிகப் பெரிய அளவில் தொழில்துறை இழப்புகளை உருவாக்கி வருகின்றன. கடந்த ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கூர்காலாந்து தனி மாநில போராட்டம் ஆறு மாதங்களாக தேயிலை உற்பத்தியை முடக்கியது. இரண்டு பருவ தேயிலை பறிப்பில் ஏற்பட்ட பாதிப்பினால், பல ஆயிரம் மக்களுக்கான வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டது. சுமார் 2,000 கோடி ரூபாய் வரை தேயிலை வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட்டது என்று டார்ஜிலிங் தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு குறிப்பிட்டது.

குஜராத்தில் சர்தார் சமூகத்துக்கு தனி இட ஒதுக்கீடு கோரி பத்து நாட்களுக்கு மேல் அந்த மாநிலம் முடக்கப்பட்டது. அதன் பின்னர் தங்களுக்கான பாதுகாப்பு கோரி தலித் மக்களும் கடந்த ஆண்டில் சில நாட்கள் அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். ஹரியாணாவில் ஜாட் சமூகத்தினரின் கலவரம், ஹரியாணா மாநிலத்தை மட்டுமல்லாமல் டெல்லி என்சிஆர் பிராந்தியத்தையே முடக்கியது. இந்த போராட்டத்தினால் வட இந்தியாவில் ரூ.34,000 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக இந்திய தொழில் வர்த்தக சபை அறிக்கை குறிப்பிடுகிறது. தனி தெலங்கான மாநில போராட்டத்தினால் ஹைதராபாத் நகரத்தில் ஒரு நாளுக்கு ரூ.35 கோடி வரை வர்த்தக இழப்பு இருந்ததாக விவரங்கள் கூறுகின்றன.

காவிரி நீரை பங்கிடுவதற்கான விவகாரத்தைப் பொறுத்தவரையில் பல பத்தாண்டுகளாகவே சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பான போராட்டங்களால் இதுவரை ரூ.25,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசேம் அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டில் இது தொடர்பான விவகாரத்தில் பெங்களூரு நகரம் முடக்கப்பட்டது. தற்போது சென்னை முடங்கியுள்ளது.

தமிழகத்தில் 20 ஆயிரம் போராட்டம்

2015-ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் 20,450 போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 13,000 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த இரண்டு மாநிலங்களும் பெருவாரியாக விவசாயிகளைக் கொண்ட மாநிலங்கள். தவிர கேரளாவில் 3,370 போராட்டங்களும், மேற்கு வங்க மாநிலத்தில் 3,100 போராட்டங்களும் நடைபெற்றுள்ளன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

தவிர கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் நடந்த பல வேலை நிறுத்தங்கள் காரணமாக 11.73 லட்சம் மனித உழைப்பு நாட்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டைவிட இது 44 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக கடந்த ஆண்டில் 57 சதவீத உற்பத்தி முடக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அசோசேம் கூறுகிறது.

2017-ம் ஆண்டில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 5.74 லட்சம் மனித உழைப்பு நாட்கள் வீணாகியுள்ளன. கேரளாவில் 1.37 லட்சம் மனித நாட்களும், குஜராத்தில் 1 லட்சம் மனித உழைப்பு நாட்களும் முடக்கப்பட்டன. குறிப்பாக 2014-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை 73.42 லட்சம் மனித உழைப்பு நாட்கள் முடக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சியில் தாக்கம்

இந்தியாவில் தொழில் தொடங்குமாறு உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக இதற்காக அந்நிய முதலீட்டு வரம்புகளிலும் பல தளர்வுகளைக் கொண்டு வந்தது. தொடர்ச்சியாக பினாமி சொத்துகள் தடுப்பு சட்டம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அறியப்படுகிறது. உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) உள்ளிட்ட பல அமைப்புகள் இதனை அறிவித்துள்ளன. குறிப்பாக உலக வங்கி வெளியிடும், எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இதுவரை இல்லாத வகையில் சிறந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா வந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஆண்டில் 30% வளர்ச்சி அடைந்துள்ளன.

தவிர அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இந்தியாவின் தர மதிப்பை மாற்றியமைத்து வருகின்றன. மூடிஸ் தர மதிப்பிட்டு நிறுவனம், 2004-க்கு பிறகு முதல் முறையாக இந்தியாவின் பொருளாதார மதிப்பீட்டை அதிகரித்தது.

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் குறுகிய கால இழப்புகளை தொழில்துறை சந்தித்தாலும், இது சீர்திருத்தம் என்கிற வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் தாக்கம் நடப்பு நிதியாண்டு வளர்ச்சியிலும் எதிரொலித்தது. ஆனால் வரும் ஆண்டுகளில் சிறந்த பலனைத் தரும் என்று தொழில் அமைப்புகள் கூறிவருகின்றன. அதேநேரத்தில் 2018-ம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதத்தை பொறுத்தவரையில் எந்த தரக் குறியீடு அமைப்புகளும் நிலையான வளர்ச்சி விகிதத்தை அறிவிக்கவில்லை. மூடீஸ் நிறுவனம் 7.5 சதவீதம் என்றால், 7.1 சதவீதமாக இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் கணிக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 6.5 % வளர்ச்சி இருக்கும் என்றே இவை இரண்டும் கணித்திருக்கின்றன.

இந்த நிலையில்தான் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், இன, மொழி, கலாசார உரிமை ரீதியிலான தொடர்ச்சியான அரசியல் போராட்டங்களால் தொழில்துறை பாதிப்புகளை சந்தித்து வருகிறது. முதலீடுகள் முடங்கும் அபாயம் உள்ளது. புதிய முதலீடுகள் வரும்பாதையில் தேக்கம் உருவாகிறது. தொழில் உற்பத்தி இழப்புகள், வேலைவாய்ப்பு முடக்கத்தால் இந்தியாவின் முகம் மாறிக் கொண்டிருக்கிறது.இதில் யார் மீது தவறு என்பதைவிட உரிய தீர்வுகளை எட்டுவதில் அரசியல் குழப்பங்கள் நீடிக்கிறது என்பதே உண்மை.

காவிரி நீர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்பும் மத்திய அரசு உரிய முடிவை மேற்கொள்ளவில்லை. இதற்கு காரணம் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அரசின் குழப்பங்கள், அரசியல் கணக்குகள் என எல்லாவற்றுக்கும் ஆள்பவர்கள் ஒருபக்கமாக நடந்து கொள்வார்கள் எனில் அதற்கான விலையை கொடுப்பது என்னவோ தொழில்துறையினர்தான். பொருளாதாரம் வளர்ந்தாலும், வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும் போராட்டங்களை சமாளிப்பதும் வரும் காலங்களில் அரசுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

-maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்