உங்கள் வீட்டின் அழைப்பு மணி எப்படி சத்தமிடும்? தற்பொழுது தான் விதம் விதமாகக் கிடைக்கிறதே. எங்கள் வீட்டில் கீச்சிடும் குருவி போன்ற ஒசை!
அது சரி. சிலர் இந்த அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினால், வீட்டினுள் இருப்பவர் வந்து திறக்கும் வரை பொறுமையாக இருக்க மாட்டார்கள். சும்மா ஒரு தரம் அல்ல, விட்டு விட்டு இரண்டு மூன்று முறை கூட அடிப்பார்கள். வேறு சிலரோ வீட்டினுள் இருப்பவர் வந்து கதவைத் திறந்த பின் தான் அடிப்பதையே நிறுத்துவார்கள்!
அதுமட்டுமல்ல கதவை விட்டுத் தள்ளி நிற்கவும் மாட்டார்கள்.கதவின் கண்ணாடித் துவாரம் வழியே பார்த்தால் பயந்து விடுவோம். முகம் மிக அருகில் பூதக்கண்ணாடியில் அகோரமாய்த் தெரியுமே.
எனது நண்பர் ஒருவர். மகா கெட்டிக்காரர். அரசியல், விஞ்ஞானம், நுண்கலைகள், திரைப்படங்கள் எனப் பலவற்றைப் பற்றித் தெரிந்து வைத்து இருந்தார். நானோ தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றியெல்லாம் கேட்டால், பாமரருக்கும் எளிதாகப் புரியும்படி சொல்வார். மொத்தத்தில் அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். ஆனால் சில சமயங்களில் அவர் நடந்து கொள்வது விநோதமாக இருக்கும்.
ஒருமுறை அவருடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிஸிபேலாபாத் எனும் சாம்பார் சாதத்தைத் தட்டில் எடுத்துக் கொண்டு மற்ற சில நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தோம். மனுஷன் இந்த முருங்கைக் காயை சாப்பிட்ட விதம் இருக்கிறதே,எழுதுவதற்கே சங்கடமாக இருக்கிறது.முதலில் வாயில் ஒரு முனையை வைத்து ஏதோ ஸ்ட்ராவைப் போல உறிஞ்சினார். பின்னர் கரும்பு தின்பவர் போலக் கடித்துக் கடித்து சக்கையை எடுத்தார். ஆமாம், தட்டிலேயே கூடு கட்டினார்.
இது போல் நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்பவர்களை நீங்களும் பல இடங்களில் பார்த்து இருப்பீர்கள். சாப்பிடும் பொழுது வாயிலே ஒரு சிறு கல்லோ, பழக் கொட்டையோ வந்து விட்டால் போதும். தட்டிலேயே வாஷ் பேசினில் துப்புவது போலத் துப்புவார்கள். குழல் ஊதுவது போல விரல்களை மடித்து வாய் அருகே வைத்துச் சத்தமில்லாமல் துப்பி எடுக்கணுமில்லையா?
வேறு சிலரோ இன்னமும் மோசம். நம்முடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே காது மூக்கு சுத்திகரிப்பில் தீவிரமாக ஈடுபடுவார்கள்!
டைட்டானிக் படத்தில் கதாநாயகனைப் பணக்கார வில்லன் விருந்திற்கு அழைத்து , கோப்பை அருகே வைக்கப்பட்டிருந்த மூன்று விதமான கரண்டிகளில் எதை எடுத்து சூப் குடிப்பது எனக் குழம்ப வைத்து வேடிக்கை பார்ப்பது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் இந்த டேபிள் மானர்ஸ் எனப்படும் சாப்பாட்டு மேஜையில் காட்டப்படும் நாகரீகம் மட்டும் இருந்தால் போதுமா?
பலருக்கு இந்த லிஃப்ட் நாகரீகமும் தெரிவதில்லை. உள்ளே இருப்பவர் வெளியே வருமுன் நுழைய முற்பட்டால் எப்படி? நாம் நமது தளத்திற்கு வேண்டிய பொத்தானை அமுக்கும் பொழுது அங்கு இருப்பவர்களையும் கேட்டு அமுக்க வேண்டுமல்லவா?
இந்தத் தற்பெருமை பேசுவதும் பண்பாடில்லை அல்லவா? ஆஸ்கார் வாங்கிய பின் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று அர்ப்பணித்த ஏ.ஆர்.ரஹ்மான், தன் வெற்றி ரகசியத்தைச் சொல்வதைக் கேளுங்கள். `வெற்றி அடைவதற்கு பணிவாக நடந்து கொள்வதோடு, புகழோ அல்லது பணக்கர்வமோ தலைக்கு ஏறிவிடாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்’ என்கிறார் அவர்!
`நான், எனது, என்னால்’ என்பது போன்ற பேச்சுக்களைக் கேட்பது யாருக்கும் எரிச்சலைக் கொடுக்கும் இல்லையா?' அடக்கமில்லாதவன் பேச்சு சிறப்பாக இருக்கவே முடியாது’ என்கிறார் சீனத் தத்துவஞானி கன்பியூஸியஸ். அது சரி. ஏங்க, கையோ, காலோ, கண்ணோ, காதோ, வாயோ, நாக்கோ அவைகளாகவா அப்படி நடந்து கொள்கின்றன? அவை மனம் சொல்கிறபடி தானே கேட்டுச் செய்கின்றன?
மனம் ஒரு குரங்கு எனும் பழைய திரைப்படப் பாடல் இதனை அழகாக விவரிக்கின்றது.`மனம் கலையின் பெயராலே காமவலை வீசும், காசு வருமென்றால் மானம் விலை பேசும், நிலையில் நிற்காமல் கிளை தோறும் தாவும்...'
சில மெத்தப் படித்தவர்கள் கூட இந்த மாதிரியாக நடந்து கொள்வதைப் பார்த்து இருப்பீர்கள்.காரணம்? அவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள்! படிப்பு வேறு, பண்பாடு வேறு அல்லவா? நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டுமென்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.அல்லது நாகரீகமாக நடந்து கொள்வது எப்படி என்பதே அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்!
அல்லது அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லையா? தாம் பார்ப்பது, பேசுவது, கேட்பது போன்றவற்றை ஒழுங்கு படுத்திக் கொள்ள முடியவில்லையா? ஆனால் அவற்றில்தானே ஒருவரின் நடைமுறை வாழ்க்கை இருக்கிறது? நாகரீகம் ,பண்பாடு இருக்கிறது, தெரிகிறது, பார்க்கப் படுகிறது?
இது குறித்து சாணக்கியர் சொல்வதைப் பாருங்கள். `பண்பாடுதான் புலன்களின் அடக்கத்திற்கான ஆணிவேர் ’ என்கிறார். அதாவது, நாகரீகமான நடத்தையே புலன்களை அடக்குவதற்கான தொடக்கமாம். என்ன, யதார்த்தமான உண்மை தானே?
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
31 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago