வேலையில்லா இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது

By நீரை மகேந்திரன்

``வே

லையிழப்பு பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி`` - இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு பொருளாதார மாநாட்டில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் சொன்ன வார்த்தைகள். அதே மாநாட்டின் மற்றொரு நாளில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல் பேசுகையில், ``இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை’’ என்றார்.

வேலை இழப்பவர்கள் சொந்தத் தொழில் தொடங்குவார்கள், இதனால் இந்தியாவில் அதிக அளவில் தொழில் முனைவோர்கள் உருவாகும் நிலை ஏற்படும் என விளக்கம் கொடுத்தார் கோயல். ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் தொழில்முனைவில் பெரிய தேக்கம் உருவாகியுள்ளதை முதலீட்டு விவரங்கள் கூறுகின்றன. இவை எதையும் மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ள பியூஷ் கோயல் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மைக்கு நேரெதிராக அவரது கருத்துகள் இருந்தன.

ஸ்டார்ட் அப் தேக்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக முறைப்படுத்தபட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கான சூழல் உகந்ததாக இல்லை. உருவாக்குவது மட்டுமல்ல, இயங்குவதிலும் பெரும் சிரமங்கள் உருவாகின. அரைகுறையான ஐடியா என்பதால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேங்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பால், ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கான வழி அடைபட்டுள்ளது.

2015-ம் ஆண்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 6,636 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டன. ஆனால் 2016 -ம் ஆண்டில் 3,450 மில்லியன் டாலர் முதலீடுதான் வந்துள்ளது. 2017-ம் ஆண்டில் முதலீடு 2,870 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.

2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 388 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 21 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மட்டுமே நிதி உதவி கிடைத்தது. 435 சில்லரை வர்த்தக ஸ்டார்ட் அப்களில், 15 நிறுவனங்கள் மட்டுமே நிதி திரட்டின. 192 நிதி சார்ந்த ஸ்டார்ட் அப்களில் 8 நிறுவனங்களுக்கு மட்டுமே முதலீடு கிடைத்துள்ளது.

சிறு தொழில்கள்

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும் என `மேக் இன் இந்தியா` திட்டத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதிலும் பெரிய முன்னேற்றமில்லை என்கிறது ஒரு பொருளாதார ஆய்வு. பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பவுல் கோஷ் மற்றும் எஸ்பிஐ நிறுவனத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சௌமியா கண்டி மேற்கொண்ட ஒரு ஆய்வு வேலைவாய்ப்பு குறித்த பல தகவல்களை விளக்குகிறது.

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கம் ( பிஎம்இஜிபி) திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கான கடனுதவி ஒப்புதல் பல மட்டங்களில் கால தாமதமாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எம்எஸ்எம்இ அமைச்சகம் உருவாக்கிய ஆணையமே இதை உறுதிப்படுத்தியுள்ளது.

குர்காவ்னைச் சேர்ந்த மேலாண்மை மேம்பாட்டு கல்வி நிறுவனம் இது தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கடனுக்கான பிணை சொத்துகள், நேரடி ஆய்வு, மற்றும் லஞ்சம் போன்ற காரணங்களை சுட்டிக் காட்டுகிறது. தொழில் முனைவோர்களுக்கான மானியத் தொகையில் 15 சதவீதம் லஞ்சம் கேட்கப்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.

2012-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைந்து வருகிறது. குறிப்பாக 2012-13ம் ஆண்டில் இந்த துறையின் மூலம் 4,28,246 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2013-14 ஆண்டில் 3,78,907 வேலைவாய்ப்புகளும் 2014-15 நிதியாண்டில் 3,57,502 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 2015-16 நிதியாண்டில் 3,23,000 வேலை வாய்ப்பு என குறைந்துள்ளது. ஸ்டார்ட் அப் முயற்சிகளிலும், சிறு குறுந் தொழில் துறை உருவாக்கத்திலும் இதுதான் நிலைமை.

தனியார் வேலைவாய்ப்பு

ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை பங்குச் சந்தைக்கு தெரிவிக்கின்றன. அதன்படி பட்டியலிடப்பட்ட 900 நிறுவனங்களில் 50 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். அதாவது பெரு நிறுவனங்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி 2017-ம் ஆண்டில் 3.7 சதவீதம்தான் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இது 4 சதவீதமாக இருந்தது. அதாவது தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சியும் குறைந்து வருகிறது.

புள்ளி விவரங்கள் நிலை

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் அப்போதைய துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா, வேலைவாய்ப்பு வளர்ச்சியில் தேக்கம் என்பது மிகைப்படுத்தப்படுகிறது என்றார். 7 சதவீதம் முதல் 8 சதவீத வேலைவாய்பின்மையை பொருட்படுத்தத் தேவையில்லை என்றார்.

ஆனால் வேலைவாய்ப்பு குறித்து அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள் மிகச் சரியானவை அல்ல என்கிறது பவுல் கோஷ் அறிக்கை. புதிய வேலைவாய்ப்புகள் குறித்தோ, ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகள் குறித்தோ நம்மிடம் திட்டமிட்ட புள்ளிவிவரங்கள் இல்லை. இந்தியாவின் வேலைவாய்ப்பு தகவல்கள் மிகப் பழமையானவை. தற்போதுவரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் பதிவு செய்யப்படுகிற வேலைவாய்ப்பு எண்ணிக்கையை வைத்து தான் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படுகின் றன என்கிறார் பவுல் கோஷ். இபிஎப்ஓ, இஎஸ்ஐ, என்பிஎஸ் இவற்றை அடிப்படையாக வைத்துதான் அரசின் வேலைவாய்ப்பு தகவல் கள் வெளியிடப்படுகின்றன. இதனால் வேலை இல்லாதவர்கள் பற்றிய மொத்த மதிப்பீடு துல்லியமாகவும் அரசிடம் இல்லை என்பது தெளிவாகிறது.

உற்பத்தித் துறையில் கடந்த ஆண்டில் 40 சதவீத வேலை இழப்பு உருவாகியுள்ளது என்கிறது புளூம்பெர்க் அறிக்கை. 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக குறைந்துவரும் வேலைவாய்ப்பு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, போன்ற காரணங்களால் மீள முடியாத நிலையில் உள்ளது என்கிறது. உற்பத்தி துறை ஊதியமும் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்து வருகிறது என டீம் லீஸ் ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களில் சுமார் 27 சதவீதம் பேருக்கு வேலையில்லை என்கிறது குளோபல் ஹூயுமன் கேபிடல் ஆய்வு.

மதிப்பீட்டு நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் இந்தியாவின் வேலையில்லா திண்டாட்ட நிலை குறித்து எச்சரிக்கை செய்கின்றன. ஆனால் ``நாட்டில் வேலை இழப்பு வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டிக்கிறதே ’’ என பிரதமர் மோடியிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ``பக்கோடா விற்பவர்கள்கூட தினசரி சம்பாதிக்கிறார்கள். அதுவும் ஒரு வேலைதான்`` என்கிறார். உயர்கல்வி படித்தவர்கள் பக்கோடா விற்பதும், சொந்த தொழில் செய்யலாம் என்பதும் இழிவானதல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு உண்மைதான் பொறியியலும், மேலாண்மையும் படித்தவர்களுக்கு உரிய வேலையில்லை என்பதும். வேலையில்லா இந்தியா பெருத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் வெடிக்கக் காத்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்