சபாஷ் சாணக்கியா: ஆவதும் அழிவதும்.... எதனால்?

By சோம.வீரப்பன்

`ஒருவருடைய அழகு, அவரது ஒழுக்கமற்ற செயல்களாலும், நல்ல குடும்பத்தில் பிறந்தவனுடைய மரியாதை, கெட்ட நண்பர்களாலும் கெட்டுப் போகும். முறையாக கற்காததால் கல்வியும், சரியாக பயன்படுத்தாததால் பணமும் கெட்டு போகும்' என்கிறார் சாணக்கியர்.

உண்மை தானேங்க? அழகு கண்களைக் கவரலாம்; ஆனால், குணம்தானே இதயத்தைத் ஈர்க்கும்? நல்ல தோற்றம் உடையவர்களை நாம் விளம்பரங்களில், திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் வேண்டுமானால் பார்த்து மகிழலாம். ஆனால் அன்றாட வாழ்வில் மாசில்லா மனமும் தூசில்லா குணமும் அல்லவா முக்கியம்?

ஆபிரஹாம் லிங்கனையும், மகாத்மா காந்தியையும் நாம் அழகிற்காகவா ஆராதிக்கிறோம்? சரி, இந்த நட்பை எடுத்துக்குங்க. எனது நண்பர் ஒருவரின் அனுபவம் இது. வங்கியில் அதிகாரியாய்ப் பணிக்குச் சேர்ந்த அவர், 15 வருடங்கள் வடநாட்டில் பணிபுரிந்த பின், பதவி உயர்வுகள் பெற்று சென்னைக் கோட்ட மேலாளராக வந்து சேர்ந்தார். கோடிக் கணக்கில் கடன் கொடுக்கும் அதிகாரம் பெற்று இருந்தார்.

அவருக்கு வாழ்த்துச் சொல்லச் சென்று இருந்தேன். பல பேர் பூச்செண்டுகளுடனும் சால்வைகளுடனும் காத்துக் கிடந்தனர். அந்த அனுபவம் விநோதமாக இருந்தது. பல ஆண்டுகளாகத் தொடர்பே இல்லாமல் இருந்த உறவினர்கள், பள்ளியில், கல்லூரியில் உடன் படித்தவர்கள் எனப் பலரும் தற்பொழுது வாழ்த்துச் சொல்லவும், நெருங்கிப் பழகவும், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒட்டிக் கொள்ளவும் வந்த வண்ணம் இருந்தனர்!

நண்பருக்கு நம்மை எல்லோரும் இப்போதாவது மதிக்கிறார்களே, முக்கியத்துவம் கொடுக்கிறார்களே என மகிழ்ச்சி. எல்லோரிடமும் சகஜமாகப் பழகினார். நண்பரின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணி உள்நோக்கத்துடன் வந்த சிலருக்கு இது போதாதா?

நண்பரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கிளை மேலாளர்களிடம் தங்களைக் கோட்ட மேலாளருக்கு நெருக்கமானவர்களாகச் சொல்லிக்கொண்டனர். நண்பரிடம் இல்லாத செல்வா்க்கையும் இருப்பதாகக் காட்டிக் கொண்டனர். வங்கி மேலாளர்கள் லேசுப்பட்டவர்களா என்ன? இந்த மாதிரி பலபேரைப் பார்த்துத்தானே இருப்பார்கள். இருந்தாலும் சில அனுபவம் குறைந்த மேலாளர்கள், அதிகாரிகள் ஏமாறத்தான் செய்தார்கள்.

நம்ம நண்பரின் பெயரைச் சொல்லிக் கொண்டு வந்தவர்களிடம் மாட்டிக் கொண்டார்கள். இவருக்கு ஏதாவது செய்தால், அவரிடம் நல்ல பெயர் கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள், நம்பினார்கள். அரசியலில் நடப்பது போலவே, ஆனால் சிறிய அளவில் , தவறுகள் நடக்க ஆரம்பித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால், சில மேதாவி மேலாளர்கள் அந்தக் கடன் விண்ணப்பங்களிலேயே நம்ம நண்பர் பெயரைக் குறிப்பிட்டு, அவருக்கு வேண்டப்பட்டவர் என்று எழுதி வேறு வைத்து விட்டார்கள். அப்புறம் என்ன? ஆறேழு மாதங்களில் அவை வாராக்கடன் ஆன பின் நம்ம நண்பரின் பெயரும் ரிப்பேரானது.

நண்பர் ஏதோ முக்கியத்துவத்திற்கும், பெருமைக்கும் ஆசைப்பட்டாரே தவிர, இம்மியும் தவறாக நடப்பவர் இல்லை. ஆனால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் பல தரப்பட்டவர்கள். சிலரோ பார்ப்பதற்கே திரைப்பட வில்லன்கள் போல இருப்பார்கள். நண்பரது போதாத காலம் ஒரு முறை, புது வருட கொண்டாட்டத்தில் அத்தகையவர்கள் கூட்டத்தில் சென்று, கையில் காலியாகி இருந்த ஆரஞ்சு ரசக் கோப்பையுடன் புகைப்படத்தில் சிக்கிக் கொண்டு விட்டார்!

மொத்தத்தில் தவறான சகவாசத்தைத் தள்ளி வைக்காத ஒரே காரணத்தினால் நண்பர் பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்த நல்ல பெயரை சீக்கிரமே இழந்தார்.அதன் பின்விளைவுகள் நீங்கள் அறியாததா?

சரி, இந்தக் கல்வி அறிவின் பயனும் அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத் தானே? அணுசக்தியை வைத்து நிறைய மின்சாரமும் தயாரிக்கலாம், இருப்பதை அழிக்கும் அணுகுண்டாகவும் பயன்படுத்தலாம்! அதனால் தானே செயற்கை நுண்ணறிவுக்கு ( Artificial Intelligence) ஒருபக்கம் வரவேற்பு,மறுபக்கம் எதிர்ப்பு!

கடைசியாகச் சாணக்கியர் சொல்வது பணத்தின் பயன்பாட்டைப் பற்றி.சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வலம் வரும் இந்தக் குட்டிக் கதையைப் படித்திருப்பீர்கள்.கீரை விற்பவளுடன் தீவிரமாகப் பேரம் பேசுகிறாள் ஓர் இல்லத்தரசி. பெரும் பணக்காரிதான்.ஒரு கட்டிற்கு 2 ரூபாய் மிச்சப்படுத்தி விடுகிறாள். இவ்வளவு பெரிய பங்களாவில் வசிப்பவள் ஏன் இப்படிக் கஞ்சத்தனம் செய்கிறாள் என அந்தக் கீரை விற்பவளுக்கு வருத்தம். கூடையைத் தலையில் வைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானவள் சோர்வாய் இருப்பதைக் கவனித்த அந்தச் சிக்கனக்காரி, கீரைக்காரியைத் தன் வீட்டில் வயிறார இட்லி, சட்னி சாப்பிட வைத்து அனுப்புகிறாள்!

தம்பி, எதிலும் ஒரு நியாயம் இருக்கணும் இல்லையா? கீரையே என்றாலும் விலை அதிகம் கொடுப்பது தவறு. ஆனால் பசியாற்றுவதற்கு செலவோ, லாபமோ பார்ப்பது தர்மம் ஆகாது. இப்படிப் பார்த்துப் பார்த்து முறையாகப் பயன்படுத்தப்படும் பணம் தானே பத்திரமாக இருக்கும்?

அழகோ,மரியாதையோ, அறிவோ, பணமோ சாணக்கியர் சொல்வது போல இருப்பதைக் கெடாமல் பார்த்துக்கணும்!

-somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

41 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்