`உ
ங்கள் வார்த்தைகள் வாயை விட்டு நழுவும் முன்பு, அவற்றை நீங்கள் முதலில் ருசித்துப் பார்த்து விட்டுப் பின்னர் அவற்றை வெளிவர அனுமதியுங்கள்' என்பது சாணக்கியர் அறிவுரை! ஆமாங்க, சொற்கள் செவிக்கான உணவு அல்லவா? விருந்தோம்பலின் பண்பை, மாண்பை நினைத்துப் பார்ப்போம். விருந்துண்ணுபவருக்கு ஏற்ற, பிடித்த உணவைப் பரிமாறுவது தானே சிறப்பு? உப்பு, காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா எனச் சாப்பிட்டுப் பார்த்து விட்டுத் தானே பரிமாறுவோம் ? அதிகக் கசப்பான, கரிப்பான, காரமானவற்றைக் கொடுக்க மாட்டோமே!
அது போலவே, கேட்பவருக்கு ஏற்றபடி பேசுகிறோமா, வார்த்தைகளில் ஆணவம், எளக்காரம், குழப்பம் முதலியன இல்லாமல், அன்பு, எளிமை,தெளிவு இருக்கின்றனவா என பார்த்துப் பேசுவதுதானே முறை?
`நீங்கள் நினைப்பதையெல்லாம் உங்கள் நாக்கு பேசிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ' என ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் சொல்வதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! வீட்டில், அலுவலகத்தில், பொருட்கள் வாங்குமிடத்தில், ரயில் பயணங்களில் பார்த்து இருப்பீர்கள். இனிமையான பேச்சு இருந்தால் போதும், பல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம்.
என்னுடன் வங்கியில் பணிபுரிந்த அனில் ஷர்மா என்பவரை என்னால் மறக்கவே முடியாது. நான் ஒரு கிளையில் கடன் துறையில் அதிகாரியாக இருந்த பொழுது எனக்கு உதவியாளராக இருந்தார். யாரைப் பார்த்தாலும் ஒரு புன்சிரிப்பு, வரவேற்பு இருக்கும்.ஒரு பெரிய நிறுவனத்தின் குமாஸ்தா வங்கிக்கு வருகிறார் என்றால் அவரை `வாங்க மானேஜர் சார்’ என்பார். ஏன் இப்படி என்னைக் கூப்பிடுகிறீர்கள் என்றால், `உங்கள் திறமைக்கு அப்படித்தான் கூப்பிடனும், எப்படியிருந்தாலும், நீங்கள் விரைவில் மானேஜர் ஆகப் போகிறவர் தானே' என்பார்!
வங்கிகளில் கடன் வாங்கும் பொழுது ஏகப்பட்ட கையெழுத்து்கள் போட்ட அனுபவம் உங்களுக்கும் இருக்கும். வாடிக்கையாளர்கள் அதற்கு எரிச்சல் படுவதும் இயற்கையே. ஆனால் நம்ம ஷர்மா, அவர்களிடம் கையெழுத்து வாங்கும் அழகே தனி.
நர்ஸ்கள், ஊசி போடும் பொழுது பெரியவர்களிடம் `உங்கள் பேரன் பெயரென்ன? ' என்றும், சிறியவர்களிடம், எத்தனாவது படிக்கிறாய்? என்றும் கேட்பதைப் பார்த்து இருப்பீர்கள். ஷர்மா அதுபோலவே உங்கள் சட்டை நன்றாக இருக்கிறதே, எங்கே வாங்கினீர்கள்? என்பார். பின்னர் உங்களை மாதிரி ஆட்களிடம் கையெழுத்து வாங்கத் தேவையே இல்லை. என்ன செய்வது, வங்கியின் சட்டதிட்டங்கள் அப்படி. இதைப் பொருட் படுத்தாதீர்கள் என்பார். அதற்குள் 10, 12 கையெழுத்துகள்தான் ஆகியிருக்கும்.
இன்னமும் கையெழுத்துகள் வாங்கணுமே! அந்தக் கையெழுத்து எவ்வளவு கோணலாக இருந்தாலும், அடாடா, என்ன சார் இவ்வளவு அழகாகக் கையெழுத்து போடுகிறீர்கள். யாராலும் காப்பி அடிக்க முடியாது என்பார். நம்புங்கள் அண்ணே. வாடிக்கையாளருக்கு எத்தனை கையெழுத்துகள் போட்டோம், எதில் போட்டோமென்றே தெரியாது. அந்த ஷர்மா நீட்டினால், ஒன்றும் எழுதாத வெற்றுக்காகிதத்தில் கூட யாரும் கையெழுத்துப் போட்டு விடுவார்கள்!
இதற்கு எதிர்மறையானவர்களையும் பார்த்து இருப்பீர்கள். வாடிக்கையாளரைப் பார்த்தால் ஏதோ ஜென்ம எதிரியைப் பார்ப்பது போல முறைப்பார்கள். மறந்தும் சிரித்து விட மாட்டார்கள். கடுகடுவென்றே இருப்பார்கள். கையெழுத்து வாங்கும் பொழுது, இவ்வளவு கையெழுத்தா ? என வாடிக்கையாளர் கேட்டால், கடன்காரர்கள் யாரையும் நம்ப முடியாது. நாளைக்கே நீங்கள் கடனைக் கட்டாமல் ஓடிப் போனால், கோர்ட்டுக்குப் போகணும்ல? அப்பக் கையெழுத்துத் தானே உதவும் ? என்பார்கள்.
நம்ம வள்ளுவர் இவ்வாறு எரிச்சல் படும்படி பேசுவதைக் கனியிருக்கும் பொழுது காயை எடுப்பது போன்றது என்று சொல்லி விட்டார். அண்ணே, கடுமையாகப் பேசுபவர்களை மூன்று வகைப்படுத்தலாம். எப்பொழுதுமே அப்படிப் பேசுபவர்கள், கோபத்தில் அப்படிப் பேசுபவர்கள், அல்லது எப்பவாவது யோசிக்காமல் அப்படிப் பேசுபவர்கள்.
சிலருக்குக் கோபம் வந்து விட்டால் கண்மண் தெரியாதே! என்ன பேசுகிறோம் என்கிற எண்ணமே இல்லாமல் கொட்டித் தீர்ப்பார்கள். `எதையாவது சொல்லியே ஆக வேண்டும் எனும் உந்துதல் வரும் நேரம்தான், நீங்கள் உங்கள் நாக்கைக் கண்டிப்பாகக் கட்டிப் போட வேண்டிய நேரம் என ஷோஷ் பில்லிங்ஸ் எனும் அமெரிக்க நகைச்சுவையாளர் சொல்வது இவர்களைப் போன்றவர்களுக்குத்தான்.
மூன்றாவது வகையினர் சாதரணமாக மற்றவர்களிடம் இனிமையாகவே பழகுவார்கள். ஆனால் சில சமயங்களில்பேசும் பொழுது என்ன பேசுகிறோம் என யோசிக்காமல் வாய்க்கு வந்ததைப் பேசி விடுவார்கள். ஆனால் அதைக் கேட்டவர் உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது ஆறாத வடுவாகவே இருக்கும்.
எனது நண்பர் ஒருவர் தன் மகனிடம் , `இது என் சம்பாத்தியத்தில் வாங்கியது' என்று ஏதோ ஒன்றைச் சொல்லப் போக 35 வருடங்களாக அதையே நினைத்துக் கொண்டு,சொல்லிக் கொண்டு இருக்கிறார் அந்த மகன்! என்ன, ருசி பார்த்துப் பேசுங்கள் எனச் சாணக்கியர் சொல்வது சரி தானே?
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago