சு
ற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மக்கள் பெற்றுள்ள விழிப்புணர்வுடன் ஒப்பிடுகையில் நிறுவனங்களின் ஆர்வம் குறைவாகவே உள்ளது என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு. குறிப்பாக சுற்றுச் சூழலைக் காக்கும் விதமாக பேக்கிங், பிளாஸ்டிக் பயன்பாடு, நில அகழ்வு உள்ளிட்டவற்றில் புதிய முயற்சிகளை பெரிய நிறுவனங்களும், பிராண்டுகளும் இன்னுமும் தொடங்கவே இல்லை என்கிறது.
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் உருவாகும் சூழலியல் பயங்கரங்கள் குறித்து சர்வதேச அளவில் மிகப் பெரும் அச்சம் உருவாகி வருகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்க தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் இது தொடர்பாக மிகப் பெரிய அளவில் விழ்ப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் நாடுகளில் வளங்களை பயன்படுத்தும் நிறுவனங்களும் மிகப் பெரிய பிராண்டுகளும் இப்போது வரை இதற்கான மாற்று தொழில்நுட்ப முயற்சிகளில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். குறிப்பாக தங்களது உற்பத்தி, சந்தையிடுதல், பேக்கிங் போன்றவற்றில் பிளாஸ்டிக் பயன்பாட்டை இப்போதுவரை தவிர்க்காமல் உள்ளதையே உதாரணமாகச் சொல்லலாம்.
கோக கோலா
சர்வதேச அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ள மிகப் பெரிய நிறுவனம் கோக கோலாதான் என்கிறது கிரீன்பீஸ் அமைப்பு. இது தொடர்பாக கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வுகளில் கோக கோலா நிறுவனம் ஒரு ஆண்டில் 11000 கோடி ஒருமுறை பயன்படுத்தும் (யூஸ் அண்ட் த்ரோ) பாட்டில்களை தயாரிக்கிறது. இவை ஆறுகளிலும் கடலோரங்களிலும் வந்து குவிகின்றன.
ஒரு முறை பயன்படுத்தும் பாட்டிலின் உற்பத்தி அளவைக் குறைப்பதற்கு கோலா நிறுவனம் உத்தரவாதம் அளித்தாலும் இதுவரை அதை நிறைவேற்றவில்லை என்பதுடன் அதிகரிக்கவே செய்து வருகிறது. 90 சதவீத கடற்வாழ் பறவைகள் பிளாஸ்டிக்கை விழுங்குவதால் இறக்கின்றன என்கிறது ஒரு ஆய்வு.
இதை மாற்றுவதற்கு கோக கோலா முயற்சி செய்தால் மற்றவர்கள் அதைப் பார்த்து முயற்சி செய்வார்கள். இதற்காக கோக கோலா நிறுவனம் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறது கிரீன்பீஸ்.
மெக்டொனால்ட்ஸ்
அதுபோல மெக்டொனால்ட்ஸ் மற்றும் டன்கின் டோனட்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து சைரோபோன் என்கிற ஒருவகை மக்காத பிளாஸ்டிக் குடுவைகளை பயன்படுத்துகின்றன. மெக்டொனால்ட்ஸ் 2025ம் ஆண்டுக்குள் தங்களது அனைத்து தேவைகளுக்கும் மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மெக்டொனால்ட்ஸ் மட்டுமல்ல, பாப்பா ஜோன், டைசன்,புட் லாக்கர், கே எப் சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது பேக்கிங் தொழில்நுட்பங்களில் பிளாஸ்டிக்கையே பிரதானமாக வைத்துள்ளன. தொடர்ந்து கோக கோலா வால்மார்ட் நெஸ்ட்லே போன்ற பெரு நிறுவனங்கள் இயற்கைச் சூழலை மீறுவதில் முன்னிலையில் உள்ளன.
ஷெல்
உலகின் மிகப் பெரிய பெட்ரோலிய நிறுவனமான இங்கிலாந்தின் ஷெல் நிறுவனம் நைஜீரியாவில் மிகப் பெரிய விவசாயப் பரப்பையே அழித்துள்ளது. நைஜீரியாவின் உள்நாட்டு கலவரத்துக்கு முக்கிய காரணமே ஷெல் நிறுவனம்தான் என ஐநா வரை எதிரொலித்தது. ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் இப்போது எரிவாவு எண்ணெய் அகழ்வில் இந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
பனிப்பாறைகள் உருகுதால் கடல்நீர் மட்டம் உயர்கிறது. இதனால் சர்வதேச அளவில் கடல்சார் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என உலக அளவில் எச்சரிக்கைகள் செய்தும் ஷெல் நிறுவனம் தனது நடவடிக்கைகளை நிறுத்தவில்லை.
மான்சான்டோ
நிலப்பரப்பை அகழ்வதில் மட்டுமல்ல, மேல்மட்ட நிலத்தின் தன்மைகளை மாற்றுவதில் மான்சான்டோ மிகப் பெரும் சூழல் சீர்கேட்டை செய்து வருகிறது. கிளைபோசெட் என்கிற பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பில் மான்சான்டோ நிறுவனம்தான் உலகின் ஏகபோக நிறுவனம்.
மேல் மட்ட மண்ணின் திறனை மாற்றுவது, புற்றுநோய் மற்றும் பிறப்பு குறைபாடுகளை உருவாக்கும் அபாயம் நிறைந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பு தடைசெய்துள்ள அபாயகரமான ரசாயனங்கள் பட்டியலில் இது உள்ளது.
இது தவிர நாம் பெருமையாக பயன்படுத்தும் சாம்சங், ஆப்பிள் போன்ற மின்னணு பிராண்டுகளுமே உலகின் மோசமான சூழல் சீர்கேட்டை உருவாக்கும் நிறுவனங்கள்தான் என இணையதளம் முழுக்க தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.
இந்தியாவில்..
இந்தியாவைப் பொறுத்தவரையில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் விழிப்புணர்வு சார்ந்த அரசியல், சூழல் காப்பதில் அரசின் பங்கு, தனிநபர்களின் முயற்சிகளும் அதிகமாக உள்ளன. பெரு நிறுவனங்கள் கூட தங்களது சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் செலவிடும் தொகையில் பெரும்பகுதியை இதற்குச் செலவிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் நிறுவனங்களின் இந்த செயல்பாடும் தங்களது வர்த்தக தேவைகளை நிறைவேற்றுவதற்கு மட்டும்தான். பல நிறுவனங்கள் தங்களது மார்க்கெட்டிங் உத்திகளில் ஒன்றாகத்தான் சுற்று சூழல் காக்கும் முயற்சிகளை காட்டிக் கொள்கின்றன.
ஐடிசி போன்ற நுகர்பொருள் நிறுவனங்கள் இப்போதும் பாலீதீன் கவர் பயன்பாட்டில் வைத்துள்ளன. இவற்றை குறைப்பதற்காக உத்தரவாதங்களை அளித்தாலும் முயற்சிகள் எடுத்தபாடில்லை. ஆனால் சில நிறுவனங்கள் தங்களது தேவைகளுக்கு மறுசுழற்சி பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றன. பேக்கிங் தொழில்நுட்பத்தில் தொழில்துறை அளவிலான புதிய முயற்சிகள் வரவேண்டும்.
அரசு இதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் கொண்டுவரும் பட்சத்தில் சாத்தியமாகும். அதே நேரத்தில் மக்களுக்கு எளிதாக எல்லா இடத்திலும் கிடைக்கக்கூடிய சூழலுக்கு உகந்த பேக்கிங் பொருட்கள் கிடைத்தால் பயன்படுத்தவே செய்கின்றனர்.
சில நிறுவனங்கள் தங்களது ஆண்டு காலண்டர், குறிப்பேடுகள், டைரிகளை மறு சுழற்சி காகிதங்களில் தயாரிப்பதும், பல இடங்களில் சமூக பொறுப்புணர்வு நிதியை மரம் நடுதல், காடு வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு செலவிடுவதும் நடக்கிறது. சாய் கார்ட், பேப்பர் போட் போன்ற சில ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் இதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன.
பேப்பர் போட் நிறுவனம் மறுசுழற்சி பேக்கிங் பொருட்களை பயன்படுத்தாமல் நேரடியாகவே சூழல் காக்கும் பொருட்கைளைக் கொண்டு பேக்கிங் செய்கிறது. ஆனால் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இது போன்ற முயற்சிகளுக்குமான இடைவெளி அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
சவாலானதா..
சில நிறுவனங்களோ தங்களது முயற்சிகளை மேற்கொள்கையில் அதற்கான செலவு அதிகரிக்கிறது. அதனால் முயற்சிப்பதில்லை என்கின்றன. ஆனால் அரசு பெரிய அளவில் முயற்சி செய்யும்போது, புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும்போது செலவும் குறையும். எனவே பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது தனிநபர்களில் விழிப்புணர்வால் மட்டும் சாத்தியமாவதில்லை. மறு சுழற்சி பொருட்களை பயன்படுத்துவதிலும், அதைக் கொண்டு பேக்கிங் செய்வதிலும் இருக்கும் சவால்களை அரசுகள் களைய வேண்டும்.
ஆனால் நிறுவனங்களின் நிலையோ நாடுகளில் சுற்றுச் சூழல் விதிமுறைகளை மீறுவதாகத்தான் உள்ளது. சூழல் காப்பில் பொறுப்பேற்ற திட்டங்களால் நீர், நிலம், காற்று என இயற்கை சுழற்சியில் மிகப் பெரும் தாக்கத்தை பெரு நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் பொறுப்புணர்வே சூழலைக் காக்கும். ஆனால் பொறுப்பை பெருநிறுவனங்கள்தான் உணரவேண்டும் என முடிவு செய்தால், தீர்வு எட்டப்படுமா என்பது கேள்விக்குறிதான்.
-maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago