இந்திய ஆட்டோமொபைல் துறையின் திருவிழாவான 14 -வது ஆட்டோ எக்ஸ்போ கிரேட்டர் நொய்டாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கி இம்மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய கனரக துறை அமைச்சர் ஆனந்த் கீதே தொடங்கி வைத்தார். ஆனால் ஒருநாள் முன்பாக 7-ம் தேதியே பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அன்றைய தினத்தில் பல ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களது எதிர்கால மாடல்களை அறிமுகம் செய்தன. காலையில் 8 மணிக்கு மாருதி நிறுவனத்தின் அறிமுகம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல நிறுவனங்களின் அறிமுகங்கள் நடந்தன. மாலை ஆறு மணிக்கு பிஎம் டபிள்யூ அந்த நாளின் நிகழ்ச்சி நிரலை முடித்து வைத்தது.
மாரத்தானில் ஓடும் திறன் படைத்த செய்தியாளர்கள் மட்டுமே ஒரே நாளில் இத்தனை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியும். காரணம் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை ஒரு நிறுவனத்தின் நிகழ்ச்சி இருக்கும். அடுத்த நிறுவனத்தின் நிகழ்ச்சி 8.30 மணிக்கு தொடங்கும். இப்படியே அன்று முழுவதும் அடுத்தடுத்த நிறுவனங்களின் அறிமுகம் அரை மணி இடைவெளியில் நடைபெற்றது.
ஆட்டோமொபைல் துறையை மட்டுமே கவனிக்கும் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, சர்வதேச அளவில் அனைத்து ஆட்டோ எக்ஸ்போக்களும் இப்படித்தான் இருக்கும் என்று கூறினர். ஆட்டோ எக்ஸ்போவில் முக்கியத்துவம் குறித்து பேசுவதற்கு முன்பு தொடக்க விழா நிகழ்ச்சி குறித்து பார்ப்போம்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சங்கத் தலைவர் (சியாம்) அபய் பிரோடியாவின் பேச்சு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. அனைத்து விதமான மாற்றங்களும் படிப்படியாகத்தான் நடக்கும். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் அதிவேக இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது பிஎஸ் 4 ரக மாடல்கள் தயாராகின்றன. ஆனால் இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளியில் பிஎஸ் 6 ரக மாடல்களை தயாரிக்க வேண்டும். மிகப்பெரிய அளவிலான மூலதனத்தை இதற்கு செய்ய வேண்டி இருக்கிறது. தவிர ஆட்டோமொபைல் துறையின் அனைத்து தரப்பினரும் இதற்கு தயாராக வேண்டும்.
பிஎஸ் 6 ரக மாடல்களை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் அந்த விதி அமல்படுத்தப்பட்ட உடனேயே, அதற்கு முன்பாக தயாரிக்கப்பட்ட மாடல் வாகனங்களை விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். கடந்த முறை பிஎஸ் 3 வாகனங்களை விற்பதற்கு குறைந்த கால அவகாசமே கிடைத்தது. ஆட்டோமொபைல் துறையால் மாசு ஏற்படுகிறது என்று கூறுபவர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை சந்தையில் இருந்து நீக்குவது குறித்து ஏன் யோசிப்பதில்லை. இதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய மத்திய கனரக துறை அமைச்சர் ஆனந்த் கீதே, இன்னும் இரு மாதங்களில் புதிய ஆட்டோமொபைல் வரைவு கொள்கை அறிவிக்கப்படும். அதில் ஆட்டோமொபைல் துறையினரின் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையில் முதலீடு உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த முதலீடு தொடரும். இந்த துறையின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்திருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கொள்கையும் அதில் இருக்கும் என்று கீதே தெரிவித்தார்.
கான்செப்ட் கார்கள்
இனி எக்ஸ்போவுக்கு வருவோம். இந்த ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் கார்கள் அதிகளவில் இடம்பெற்றன. கான்செப்ட் கார்கள் என்பது ஒரு காரை வடிவமைத்து இப்படித்தான் இருக்கும் என வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பிறருக்கு காண்பிப்பார்கள். அதன் பிறகு பல தரப்பினரின் கருத்தையும் கேட்டறிந்த பின்பு பல மாற்றங்களுக்கு பிறகுதான் அந்த காரை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வார்கள்.
இதுபோன்ற கார்கள் இந்த எக்ஸ்போவில் அதிகம் அறிமுகம் செய்யப்பட்டன. மாருதி நிறுவனத்தின் பியூச்சர் எஸ், டாடா 45எக்ஸ், டாடா ஹெச்5எக்ஸ், ஹோண்டா ஸ்போர்ட்ஸ் இவி, கியா மோட்டார்ஸ் எஸ்பி, ரெனால்ட் டிரஸார், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஐயொனிக் ஹைபிரிட் உள்ளிட்ட பல கான்செப்ட் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் உயர ரக அதிக விலை கொண்ட கார்களில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தன. சிறிய ரக வாகனங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தவில்லை என்னும் விமர்சனமும் இருந்தது.
கியா மோட்டார்ஸ்
சர்வதேச அளவில் 8-வது பெரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் இது முதலாவது ஆட்டோ எக்ஸ்போ. எஸ்பி என்னும் கான்செப்ட் காரை இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹான்-ஹூ-பார்க் தெரிவித்தார். ஆந்திராவில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலையில் 100 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை தயாரிக்க முடியும். 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுக்குள் அனைத்து வகை பிரிவிலும் கார்கள் அறிமுகம் செய்யப்படும். எலெக்ட்ரிக் வாகனமும் அறிமுகம் செய்யப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்களின் தேர்வு எஸ்யூவி கார்களாக இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
எலெக்ட்ரிக் கார்கள்
2030-ம் ஆண்டுக்குள் அனைத்து கார்களும் எலெக்ட்ரிக் கார்களாக மாற வேண்டும் என அரசு தெரிவித்திருக்கிறது. இதற்கு ஏற்ப அனைத்து நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்த கார்கள் எப்போது சந்தைக்கு வரும் என இப்போதைக்கு கூற இயலாது என்று ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு மூத்த தலைவர் ஜானேஸ்வர் சென் தெரிவித்தார். (பார்க்க: பெட்டி செய்தி). ஹோண்டா, மஹிந்திரா, பென்ஸ், யுனிட்டி, கியா உள்ளிட்ட நிறுவனங்களின் எலெட்ரிக் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இரு சக்கர வாகனங்கள்
இந்த எக்ஸ்போவில் டிவிஎஸ், ஹீரோ, யமாஹா, ஹோண்டா உள்ளிட்ட முக்கியமான இரு சக்கர வாகன நிறுவனங்கள் கலந்து கொண்டன. ஆனால் பெரும்பாலான வாகனங்கள் 125 சிசி திறனுக்கு மேலே இருக்கும் வாகனங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது தெரிந்தது. அதேபோல இரு சக்கர வாகனங்கள் பிரிவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிப்படுத்தி இருந்தன. ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் பவன் முஞ்சால் கூறும்போது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இது போன்ற ஆட்டோ எக்ஸ்போ மூலம் ஒரே சமயத்தில் பல நிறுவனங்களின் திட்டங்களையும், பல மாடல் கார்களை ஒப்பிட்டு பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆட்டோமொபைல் துறை மீது ஆர்வம் இருப்பவர்கள், பொறியியல் மாணவர்கள், வாய்ப்பு இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த எக்ஸ்போவுக்கு போய்வரலாம். அடுத்த முறை திட்டமிடுங்கள், புதிய அனுபவம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
2020-ல் யுனிட்டி
இந்த எக்ஸ்போவில் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களைத் தவிர சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கலந்துகொண்டன. இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனப் பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் யுனிட்டி நிறுவனம் அதிக கவனத்தை ஈர்த்தது. 5 பேர் அமரக்கூடிய வாகனத்தை 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 200 கிலோமீட்டர் வரை பயணிக்கும். 40 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஏற்ற முடியும். 2020-ம் ஆண்டு வெளிவர இருக்கும் இந்த கார் ரூ.7.14 லட்சம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரூ.1,000 செலுத்தினால் இப்போதே இந்த காருக்கு முன்பதிவு செய்ய முடியும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. 2020-ம் ஆண்டு வெளியிடப்படும் இந்த கார் 2024-ம் ஆண்டுக்கு 5 லட்சம் கார்களை விற்பனை செய்ய முடியும் என நம்புகிறது.
எலெக்ட்ரிக் கொள்கை தேவை: சென்
ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு மூத்த தலைவர் ஜானேஸ்வர் சென்-னுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூறியதன் சுருக்கமான வடிவம்: எலெக்ட்ரிக் வாகனங்கள் உடனடியாக சாலைகளில் வலம் வருவதற்கான வாய்ப்பு குறைவு. முதலில் இதற்கான கொள்கையை உருவாக்க வேண்டும். இதன் பிறகுதான் நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த முடியும். தவிர இதற்கான கட்டுமானத்தை அமைக்க வேண்டும். தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் நிலையங்கள் இருக்கின்றன.
ஆனால் மின்சார வாகனங்கள் வரும்போது எப்படி சார்ஜ் செய்வது? தவிர ஒரு நிமிடத்தில் பெட்ரோல் நிரப்பி விடலாம். ஆனால் சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரமாகும். குறைந்த நேரத்தில் சார்ஜ் ஏற்றும் பேட்டரிகள் அதிக விலையில் இருக்கின்றன. அதேபோல அதிக நேரம் பயணிக்கும் பேட்டரிகளின் விலையும் அதிகமாக இருக்கிறது. இப்படி அதிகமாக விலை இருக்கும் கார்களை மக்கள் வாங்குவார்களா என்பது அடுத்த பிரச்சினை.
இது போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் அரசின் ஆதரவு இருந்தால் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள் சாலையில் செல்லும். இதற்கென பிரத்யேகமான காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியாது.
-karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago