இந்த மாதம் 17-ம் தேதி சென்னையில் ‘கிராண்ட் சங்கமம்’ ஸ்டார்ட்அப் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு துறைசார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர். சோஹோ நிறுவனர் தர் வேம்பு தலைமை வகிக்க இருக்கிறார். பெரிய கார்ப்பரேட் நிறுவனமோ அல்லது அரசு அமைப்போ இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக் கிறது என்று நினைத்துவிட வேண்டாம். அப்படி யென்றால் இதை ஒருங்கிணைப்பது யார்? தமிழ்பிரனர் (Tamilpreneur). ஷ்யாம் சித்தார்த். நெய்வேலியைச் சேர்ந்தவர். பொறியியல் முடித்துவிட்டு பெங்களூருவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்திய அளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வலுவான கட்டமைப்பைக்கொண்ட நகரமாக பெங்களூரு திகழ்கிறது. பெங்களூருவில் புழங்கிக்கொண்டிருந்த அவருக்கு, தமிழ்நாட்டிலும் அப்படியொரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவு உருவானது. ஒரு சிறு முயற்சியாக, தொழில்முனைவு சார்ந்து தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 2019-ல் ‘தமிழ்பிரனர்’ (Tamil + Entrepreneur) என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 27. ஸ்டார்ட் அப் நிறுவனர்களுடன் தொடர்ச்சியாக உரையாடல் நிகழ்த்தி தமிழ்பிரனர் தளத்தில் பதிவிட ஆரம்பித்தார் ஷ்யாம்.
சிறு, குறு நகரங்களில் உள்ள தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கக்கூடியதாக அந்தப் பேட்டிகள் அமைந்தன. தமிழ்பிரனர் தளத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இன்று, தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப் தொழில் முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான முக்கியமான தளமாக தமிழ்பிரனர் உருவெடுத்து இருக்கிறது.சாதாரணமாக இன்ஸ்டாகிராம் பக்கமாக தொடங்கப்பட்ட தமிழ்பிரனர், நான்கே ஆண்டுகளில் பிரம்மாண்டமான அளவில் ஸ்டார்ட்அப் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் அளவுக்கு உருவெடுத்து இருக்கிறது.இந்தப் பயணத்துக்குப் பின்னால் இருக்கும் கதை என்ன? ஷ்யாமுடன் உரையாடினேன்.
தமிழ்பிரனர் பயணம் எப்படித் தொடங்கியது? - இரண்டு நிகழ்வுகள் தமிழ்பிரனர் தொடக்கத்துக்குக் காரணமாக இருந்தன.கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெங்களூருவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஓய்வு நேரத்தில் பாட்காஸ்ட் (Podcast) கேட்பது வழக்கம். தற்செயலாக தொழில்முனைவு குறித்து பாட்காஸ்ட் ஒன்றை கேட்க நேர்ந்தது. ஐடியாவை நிறுவனமாக மாற்றுவது, அதை பெரிய அளவில் கொண்டு செல்வது என ஸ்டார்ட்அப் செயல்பாடு எனக்கு மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறித்த பாட்காஸ்டைத் தேடித் தேடி கேட்க ஆரம்பித்தேன்.அப்போது பெங்களூருவில் ஸ்டார்ட்அப் நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருப்பதாக விளம்பரம் பார்த்தேன். அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். வெவ்வேறு மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் அங்கு வந்திருந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து தொழில்முனைவோர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை.எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் சொல்லும் காலகட்டம் 2019. எந்தெந்த மாநிலங்களில் ஸ்டார்ட்அப் கட்டமைப்பு வலுவாக இருக்கிறது என்பது தொடர்பாக நாஸ்காம் ,அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் 25 மாநிலங்கள் இருந்தன. பெங்களூரு முதல் இடத்தில் இருந்தது. தமிழ்நாடு 23-வது இடத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் சார்ந்து வலுவான கட்டமைப்பு இல்லை, தொழில்முனை வோர்கள் கலந்துரையாடுவதற்கான தளம் இல்லை என்பதை அந்த அறிக்கை உணர்த்தியது.
இரண்டாவது சம்பவம். ஒருமுறை, பெங்களூருவில் தெருவோர கரும்பு ஜூஸ் கடைக்குச் சென்றிருந்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் கடையை நடத்திக்கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் மற்ற கடைகளை ஒப்பிட அவரது கடையில் கரும்பு ஜூஸின் ருசி தனித்துவமாக இருந்தது. ஆனால், பெங்களூருவில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் கரும்பு ஜூஸை பாக்கெட்டில் அடைத்து, அதற்கென்று பிராண்ட் உருவாக்கி இரு மடங்கு விலை வைத்து விற்றுக்கொண்டிருந்தன. அவரும் தன்னுடைய கரும்பு ஜூஸ் கடையை ஒரு பிராண்டாக மாற்ற முடியும். அந்த அளவுக்கு தனித்துவமாக இருந்தது அவரது கரும்பு ஜூஸ். அவரிடம் சொன்னேன், “உங்கள் கடையை ஒரு பிராண்டாக மாற்றினால் உங்களால் இன்னும் அதிகம் சம்பாதிக்க முடியும்.
இன்னும் பல இடங்களில் கடையை திறக்க முடியும்” என்றேன். “நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது. எனக்கும் விருப்பம்தான். ஆனால், எப்படி பிராண்டாக மாற்றுவது, எப்படி சந்தைப்படுத்துவது என்பது குறித்து எனக்கு போதிய விவரம் தெரியவில்லை” என்றார். இவரைப் போலவே, தமிழ்நாட்டில் நிறைய பேர் தொழில்முனைவில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்திச் செல்வதற்கு போதிய விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் இல்லை என்பதை உணர்ந்தேன். விழிப்புணர்வு, ஊக்கம், வழிகாட்டுதல், நிதி உதவி இருந்தால் தமிழ்நாட்டு தொழில்முனைவோர்கள் இன்னும் மேம்பட்ட நிலைக்கு செல்ல முடியும் என்று தோன்றியது. நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன்.
2019 மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் தமிழ்பிரனர் பக்கம் ஆரம்பித்தேன். அதில் தொழில்முனைவு குறித்த செய்திகளை பதிவிட ஆரம்பித்தேன். தொழில்முனைவோர்களுக்கு ஊக்கம் அளிப்பது குறித்து யோசித்தபோது, சிறு, குறு நகரங்களில் உள்ள தொழில் முனைவோர்களை பேட்டி கண்டு பாட்காஸ்ட் உருவாக்கலாம் என்ற ஐடியா உதயமானது. அவர்களின் கதை மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். இதனால், தொழில் முனைவோர்களை தேடித்தேடி பேட்டி எடுக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் தமிழ்பிரனர் பயணம் தொடங்கியது.
சாதாரண இன்ஸ்டாகிராம் பக்கமாக தொடங்கிய பயணம் இன்று, ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் தளமாக உருவெடுத்து இருக்கிறது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? - தமிழ்பிரனர் பாட்காஸ்ட்டுக்கு நான் எதிர்பார்த்ததைவிடவும் மிகுந்த வரவேற்பு இருந்தது. தமிழ்பிரனர் பாட்காஸ்ட் கேட்ட ஒருவருடமிருந்து இன்ஸ்டாகிராமில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. “நான் கோவையில்ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். மாத சம்பளம் பத்தாயிரம் ரூபாய். தமிழ்பிரனர் பாட்காஸ்ட் கேட்ட பிறகு சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று நம்பிக்கை வந்தது. என் வசம் ஒரு பழைய பைக் இருந்தது. அதை பெயிண்ட் அடித்து மொபைல் ஷவர்மா கடை ஆரம்பித்துவிட்டேன். அதன் மூலம் இப்போது மாதத்துக்கு ரூ.40,000 சம்பாதிக்கிறேன்” என்று அவர் அதில் சொல்லி இருந்தார். எனக்கு அவரது வார்த்தைகள் பெரும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தன.
இதனால், தமிழ்பிரனரை இன்னும் பரவலாக எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தேன். தொழில்முனைவோர்களின் அனுபவங்களை ‘மாஸ்டர்கிளாஸ்’ போல் வகைப்படுத்தி மக்களுக்கு வழங்கலாம் என்ற ஐடியா உதயமானது. லிங்கிடு இன் தளம் போல், தமிழ் தொழில்முனைவோருக் கென்று ஒரு தளத்தை உருவாக்கினேன். இத்தளத்தில் தொழில்முனைவு செயல்பாட்டில் இருப்பவர்கள், அத்துறையில் ஏற்கெனவே கால்பதித்து செயல்பட்டு கொண்டிருப்பவர்களைத் தொடர்புகொண்டு கலந்துரையாட முடியும். ஆலோசனை பெற முடியும். படிப்படியாக, நேரடி சந்திப்புகளையும் ஒருங்கிணைக்க ஆரம்பித்தேன். தமிழ்பிரனர் கூட்டங்களைப் பார்த்து முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதரவு வழங்க ஆரம்பித்தன.
இதனிடையே, பிரவீன் என்ற நண்பர் அறிமுகமானார். தமிழ்பிரனருடன் சேர்ந்து பயணிக்க விருப்பம் தெரிவித்தார். அவரது வருகைக்குப் பிறகு, தமிழ் பிரனரை நிறுவனமாக மாற்றினோம். இப்போது தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நகரிலும் தொழில்முனை வோர்களுக்கான கூட்டம் நடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தக் கூட்டங்களில் முதலீட்டாளர்களும் கலந்துகொள்கிற நிலையில் தொழில்முனைவோர்கள் தங்கள் ஐடியாக்களை அவர்களிடம் பகிர்ந்து நிதி திரட்டுவதற்கான வாய்ப்பாகவும் உள்ளது.
இந்தப் பயணத்தில் நீங்கள் புரிந்துகொண்ட விஷயம் என்ன? - சென்ற நூற்றாண்டில், பல நாடுகளில் வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் சேர்வது என்பது வழக்கமாக இருந்தது. தற்போதுவீட்டுக்கு ஒருவர் தொழில்முனைவோராக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஸ்டார்ட்அப் அணுகுமுறை வழியாக நம்மைச் சுற்றி பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும். சமூகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியும். அந்தவகையில் ஸ்டார்ட் அப் தொழில் முனைவு என்பது பணம் சம்பாதிப்பதற்கான வழி மட்டுமல்ல, சமூகத்தை மேம்படுத்துவதற்கான வழி என்பதையும் இந்தப் பயணத்தில் புரிந்து கொண்டுள்ளேன்.
வெளிமாநில தொழில்முனைவோர்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டு தொழில்முனைவோர்கள் எங்கு மேம்பட்டு இருக்கிறார்கள், எங்கு மேம்பட வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்? - தமிழ்நாட்டு தொழில்முனைவோர்களிடம் காணும் மிக முக்கியமான அம்சம் கடின உழைப்பும் விடா முயற்சியும். சிறு நகரங்களில் தொழில்முனைவோர்கள அவ்வளவு கனவுடன் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்களை சரியான முறையில் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. பெங்களூருவில் உள்ள தொழில்முனைவோர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் செய்தது ஒரு விஷயமாக இருக்காலாம். ஆனால், அவர்கள் நூறு விஷயங்கள் செய்ததுபோல் முன்வைப்பார்கள்.
ஆனால், தமிழ்நாட்டு தொழில்முனைவோர்கள் நூறு விஷயம் செய்திருப்பார்கள். ஆனால், தாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பார்கள். இதை நாம் தன்னடக்கம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இது தன்னடக்கம் இல்லை. உலகின் போக்கை அறியாமல் இருப்பதன் விளைவாக உருவாகும் தாழ்வுமனப்பான்மை என்று நினைக்கிறேன். இந்த ஸ்டார்ட்அப் காலகட்டத்தில் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தனிநபரும் தங்கள் செயல்பாடுகளைப் பற்றி பொதுத்தளத்தில் பேசுவதும் தங்கள் திறன்களை சந்தைப்படுத்துவதும் அவசியம். அப்படி நீங்கள் செய்யும்போது, எதிர்பாராத பல்வேறு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்!
- riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago