சபாஷ் சாணக்கியா: கண்ணை மறைப்பவை மூன்று...!

By சோம.வீரப்பன்

`காமத்தை விடக் கொடிய நோய் இல்லை. அறியாமையை விடக் கொடிய எதிரி இல்லை. கோபத்தை விடக் கொடிய நெருப்பு இல்லை' என்று சாணக்கியர் சொல்லியிருப்பதைப்பற்றி எனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். உளவியல் பேராசிரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர், இவை மூன்றையும் சாணக்கியர் ஒரு சேரக் கூறுவதற்கான காரணத்தை விளக்கினார்!

இந்த மூன்றில் எது வந்தாலும், அது மனிதனின் பகுத்தறிவைப் பாதிக்குமாம். சிந்திக்க விடாமல், யோசிக்க விடாமல், நினைத்ததை உடனே செய்யத் தூண்டுமாம். உண்மைதானே! இந்தக் காமம் இருக்கிறதே, அது ஒரு விதமான தாகம், பசி, வேட்கை. காம வயப்பட்டு விட்டால், அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற வேகம், வெறி வந்து விடுமே தவிர, அது சரியா, தவறா, நியாயமா, இல்லையா,செய்யலாமா, கூடாதா என்றெல்லாம் நினைத்துப் பார்க்க விடாது.

`கள்ளிருக்கும் மயிர்க்கூந்தல் ஜானகியை மனச் சிறையில் கரந்த காதல்' என இராவணனின் காமத்தைச் சொல்கிறார் கம்பர்! புராண காலம் முதல் இன்று வரை, இந்தப் புதை மணலில் சிக்கித் தவித்தவர்கள், தகர்ந்தவர்கள், தவிடு பொடியானவர்கள் ஏராளம், ஏராளம்!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தியை எல்லோருக்கும் தெரியும். அங்கே 1990களில் கொடிகட்டிப் பறந்த `இன்னொரு மூர்த்தி' என்று அழைக்கப்பட்ட பனீஷ் மூர்த்தியின் கதையைப் படித்திருப்பீர்கள்! தன்னுடன் பணிபுரிந்த பெண்ணிடம் தவறான உறவு வைத்துக் கொண்டதற்காக நல்ல வேலையையும், நல்ல பெயரையும் இழந்தார் அவர்.

2002-ல் வெளியே அனுப்பப்பட்டாலும், மென்பொருள் சந்தைப் படுத்தலில் மகா கெட்டிக்காரரான பனீஷ்பின்னர் `ஐகேட்' எனும் மென் பொருள் நிறுவனத்தின் தலைவரானார். ஆனால்அங்கேயும் இது மாதிரி வேறு ஒரு பெண் பணியாளர் புகார் கொடுக்க மீண்டும் பதவி போய், சுமார் 84 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டதாம்.

கே.பி.எஸ் கில் எனும் ஐபிஎஸ் அதிகாரி கதை ஞாபகம் இருக்கிறதா? பஞ்சாப் மாநிலத்தில் டிஜிபி ஆக இருந்த இவர் 1980,90களில் தீவிரவாதத்தை ஒடுக்கியவராகக் கருதப்பட்டவர். பத்மஸ்ரீ பட்டமும் பெற்றவர். ஆனால் 1988-ல் ரூபன் பஜாஜ் எனும் பெண் ஐஏஎஸ் அதிகாரி, இவர் தன்னிடம் ஒரு விருந்தில் தவறாக நடந்து கொண்டதாகப் புகார் கொடுக்க, ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காகத் தண்டிக்கப் பெற்றார்!

அண்ணே, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் கூட இப்படித் தானே லெவென்ஸியிடம் விழுந்தார்! செல்வம், செல்வாக்கு இருப்பவர்கள்,இவ்வாறு பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதையும்,விஷயம் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் வெளி உலகிற்குத் தெரிந்து விடுவதையும், பின்னர் அவர்கள் பெயரும் வாழ்வும் கெட்டுப் போவதையும் ஆண்டாண்டு காலமாகப் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்! ஐயா, இந்தக் கொடிய நோய் வராமல் காப்பதே நன்று.

அடுத்தது அறியாமையை எதிரி என்கிறார் சாணக்கியர். ஆமாங்க. முட்டாள் தனமாக முடிவெடுப்பவரை யாருங்க காப்பாற்ற முடியும்? பிரச்சினை என்னவென்றால் பல பேருக்குத் தங்களுக்குத் தெரியாது என்பதே தெரியாது. கன்பியூஷியஸ் சொல்வது போல, உண்மையான அறிவென்பது நமது அறியாமையின் அளவை அறிந்து வைத்திருப்பது அல்லவா?

அலுவலகங்களில் பார்த்து இருப்பீர்கள். முடிவு செய்யும் அதிகாரம் இருந்தால் போதும். அதற்கான திறமை பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்! விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்வதைக் கேளுங்கள்.`எந்த முட்டாளும் தெரிந்து கொண்டு விடலாம். ஆனால், புரிந்து கொள்வது தானே முக்கியம்!

`அடுத்த எதிரி கோபம். சினம் வந்து விட்டால், நீங்கள் நீங்களாக இருக்க மாட்டீர்களே! அப்புறம் எப்படிங்க உங்கள் படிப்பு, அறிவு, அனுபவம், திறமை எல்லாம் உங்களுக்கு உதவ முடியும்? கோபப்படுவது நிலத்தை அறைவதற்கு ஒப்பாகும், அது சேர்ந்தாரைக் கொல்லும் என்பாரே நம்ம வள்ளுவர். கோபம் என்பது மனிதர்களின் ஓர் உணர்ச்சி. ஆற்றாமையால், பொறுக்க முடியாததால் வருவது.அந்த சமயத்தில் பேசுவதோ முடிவெடுப்பதோ மிகவும் ஆபத்தானது.

`யார் வேண்டுமானாலும் கோபப் படலாம், அது எளிதுதான்.ஆனால் சரியான ஆளிடம், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான காரணத்திற்காக, சரியான முறையில் கோபப்படுவது என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல’ என்கிறார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில். அதனால்தான் கோபம் வந்தால் பேச்சைத் தவிருங்கள், எந்த முடிவையும் அப்பொழுது எடுக்காதீர்கள்,தள்ளிப் போடுங்கள் என்கிறார்கள்.

என்னங்க, சாணக்கியர் சொல்வது சரி தானே? காமம், அறிவின்மை, கோபம் மூன்றுமே ஆபத்தானவை, நம்மை அழித்து விடக் கூடியவை.அவை நம்மை நெருங்காமல் பார்த்துக்கணுங்க!

-somaiah.veerappan@gmail.com

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்