சபாஷ் சாணக்கியா: பணி செய்பவருக்குச் சோம்பல் கூடாது..!

By சோம.வீரப்பன்

ன்று மிகப் பெரிய இயக்குநராக இருக்கும் ஷங்கர் யாரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் தெரியுமா? எஸ்.ஏ.சந்திரசேகரிடம். கே.எஸ்.ரவிக்குமார் விக்கிரமனிடம் கற்றவர். கதாநாயகர்கள் நட்சத்திர அந்தஸ்து பெறுவதற்கும், திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கும் இயக்குநர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்! ஆனால், அந்த இயக்குநர்களே திறம்பட செயலாற்ற உறுதுணையாக இருப்பவர்கள் யார்? உதவி இயக்குநர்கள் தானே?

நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உதவி இயக்குநராக இருப்பவர்கள் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருக்கணும்! நடிகர்களுக்குப் படம்பிடிக்கப் போகும் காட்சியை விளக்கணும், நடிப் பும் வசனமும் சொல்லிக் கொடுக்ணும், நடிப்பவர்களின் உடையின் தொடர்ச்சியை (continuity) பார்த்துக் கொள்ளணும். அத்துடன் மூத்த இயக்குநர்கள் அவ்வப்போது பொறுமையிழந்து காட் டும் சிடுசிடுப்பையும் தாங்கிக்கணும்!

வேலை கற்றுக் கொள்வதற்கு, முன்னுக்கு வருவதற்கு, அங்கே நிறைய பொறுமை வேணும். பலசமயங்களில் எடுபிடி வேலைகளையும் செய்ய வேண்டியதிருக்கும். சரி, நான் சொல்ல வந்த கதைக்கு வருகிறேன். இன்று மிகவும் மதிக்கப்படும் இயக்குநர் ஒருவர் புகழின் உச்சாணிக்குச் சென்று கொண்டிருந்த காலம் அது. அவரிடம் உதவி இயக்குநராக இருந்த இளைஞர் மகா கெட்டிக்காரர். அலாதி சுறுசுறுப்பு!

அந்த இயக்குநரின் பெற்றோர் 70 வயதைத் தாண்டியவர்கள். ஒரு திரும ணத்திற்குச் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. இயக்குநரால் கூடச் செல்ல முடியவில்லை. அதான் இருக்கவே இருக்கிறாரே உதவி இயக்குநர். அவரைக் கூப்பிட்டார். `நீங்கள் வரும் திங்கள், செவ்வாய் அவர்களுக்குத் துணையாக எங்கள் ஊருக்குப்போக முடியுமா?' எனக் கேட்டார். உதவி இயக்குநருக்கு அந்தப் பெற்றோர்களை முன்பே தெரியும். நல்லவர்கள். ஆனால் உடம்புக்கு முடியாதவர்கள். அம்மாவுக்கு நீரழிவு, இரத்தக் கொதிப்பு. அப்பா நடப்பதற்குச் சிரமப் படுவார்.

உதவி இயக்குநரால் மறுக்கவா முடியும்.கெஞ்சிக் கிடைத்த வாய்ப்பை இதனால் இழக்க முடியுமா? என்ன அவர்களுடன் சென்றால் பெட்டி தூக்கணும். பணிவிடை செய்யணும். பரவாயில்லை என்று கிளம்பி விட்டார்.

ஊருக்குச் சென்றதும், ஓட்டலில் பெரிய அறை எடுத்து அவர்கள் இருவரையும் தங்க வைத்தார். இரவு மணி இரண்டு. இவருக்குச் சின்ன அறை. அதிகாலை முகூர்த்தம் என்பதால் 6 மணிக்குக் கிளம்புவதாக ஏற்பாடு.பெரியவர்கள் அசதியில் அயர்ந்து தூங்கி விட்டனர். காலை 5.30 மணி. பெரியவர் அரக்கப் பரக்க எழுந்தார். நேரமாகி விட்டதே, அந்தப் பையன், அதான் அந்த உதவி இயக்குநர், தயாராக விட்டால் நம்மாலும் போக முடியாமல் போய் விடுமே என பயந்தார்.

அவரை முதலில் எழுப்ப வேண்டுமென்று தம் அறைக் கதவைத் திறக்கப் போனார். வெளியே காலிங் பெல்லை அடிக்க ரெடியாகக் கை வைத்துக் கொண்டு உதவி இயக்குநர்! குளித்து ரெடியாகி இருந்தார் ! காலை வணக்கம் சொன்னார்! அந்தப் பெற்றோர் மகிழ்ந்து விட்டனர், நெகிழ்ந்து விட்டனர். அப்புறம் என்ன, அந்த இயக்குநரின் பிரதான சீடரானார் `அந்தப் பையன் '. இன்று திரை உலகில் அவரது பல்வேறு திறமைகளுக்காகக் கொண்டாடப்படுகிறார்.

தம்பி, பணி செய்பவருக்குச் சோம்பல் கூடாது. கூடவே கூடாது! இந்த மாதிரி இரவெல்லாம் தூங்காது வண்டி ஓட்டியிருந்தாலும் மறுநாள் காலை சொன்ன நேரத்திற்கு வந்து விடும் ஓட்டுநர்களைப் பார்த்து இருப்பீர்கள்.வேறு சில ஓட்டுநர்கள் தாமதமாக வருவதால், ரயிலைத் தவறவிட்டுவிட்டு, மேலதிகாரிகளிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர்களையும் பார்த்து இருப்பீர்கள்.

ஓட்டுநர், சமையல் கலைஞர், வீட்டு வேலை செய்யும் பெண்கள் போன்றோருக்கு மட்டுமில்லை, எந்தப் பணியாளருக்கும் சோம்பேறித்தனம் கூடாது. செய்யும் வேலையில் திறமையும் நேர்மையும் எப்படித் தேவையோ அதைப் போலவே சுறுசுறுப்பும் அவசியம்! சும்மா அப்புறம் செய்து விடுகிறேன் என்று தள்ளிப் போடுகிறவர்களை நம்பி ஏமாறக் கூடாது! `தள்ளிப் போடுவதன் காரணமாக எளிய செயல்கள் கடினமாகின்றன, கடினமான செயல்கள் அதிகக் கடினமாகின்றன' என்பார் மாஸின் கூலே எனும் அமெரிக்க அறிஞர்!

கம்பராமாயணத்தில் கைகேயியிடம் ராமர் சொல்வாரே `மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன், விடையும் கொண்டேன்' என்று! அதுபோலச் சொன்னதை உடனே தாமதிக்காது செய்யும் பணியாட்கள் தான் கொண்டாடப்படுவார்கள். அதிகப் பொறுப்புகள் கொடுக்கப்படுவார்கள். பதவி உயர்வு பெறுவார்கள்.

சோம்பேறித்தனமாக வேலைகளை ஒத்திப் போடுவது கிரெடிட் கார்டை பயன்படுத்துவது போன்றது!முதலில் கொண்டாட்டம், பின்னர் பில் வந்ததும் திண்டாட்டம்!' என்று எழுத்தாளர் கிரிஸ்டி பார்க்கர் சொல்வது உண்மை தானே? ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது மிகக் கடினம் எனச் சாணக்கியர் சொல்வதை மறுக்க முடியுமா?

somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்