இயற்கை மூலதனத்தில் ஏற்படும் சேதம்

By நீரை மகேந்திரன்

லக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாடுகளுக்கே உரிய தேசிய பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இந்த பிரச்சினைகளால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல சிக்கல்கள், தேக்கங்கள் இருக்கலாம். இவற்றுக்கு உரிய கவனம் செலுத்தி தீர்வுகளையும் எட்டுகின்றன. ஆனால் உலக நாடுகளிடையே சர்வதேச பிரச்சினையாக உருவாகி நிற்கிறது புவி வெப்பமடைதல் என்கிற சூழலியல் பிரச்சினை. புவி வெப்பநிலை அதிகரிப்பால் உருவாகும் சிக்கல்களைக் களைவதில் ஒவ்வொரு நாடும், வல்லுநர்களும் முயற்சி எடுத்தாலும் முழுமையான தீர்வு எட்டப்படாத பிரச்சினையாகவே நீடித்து வருகிறது. ஆனால் ஒட்டுமொத்த சமூகமும் கவனம் எடுத்து புவி வெப்ப பிரச்சினைகளைக் கையாண்டால் இதிலிருந்து வெளியேறலாம் என்று சில தீர்வுகளை முன்வைக்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.

புவிவெப்ப நிலை அதிகரிப்பு சிக்கல் மனிதனால் உருவானதுதான் என்பதை அறிவோம். தொழில்துறை வளர்ச்சி தொடங்கிய 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்துதான் இந்த பாதிப்பு தொடங்கியது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தொழிற்சாலைகள் வெளியிட்ட கரியமில வாயு காரணமாக இன்று உலகம் மிக நெருக்கடியான கால கட்டத்தில் வந்து நிற்கிறது.

சூழலியல் கிட்டத்தட்ட ஏற்கெனவே மோசமடைந்துவிட்டது. தற்போதைய நாட்கள் உலகத்தின் நீட்டிப்பு நாட்கள்தான். மனித சமூகத்தின் சூறாவளித்தனமான சூழலியல் வன்முறையால் பனிபிரதேசங்களின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தாழ்வான நகரங்கள் பாதுகாப்பில்லாத நிலை யில் உள்ளன. உலக அளவில் எல்லா நாடுகளிலும் காற்று மாசுபாடு உச்சத்தில் உள்ளது. இன் னும் சில நாட்களில் மனிதன் வாழ்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் மிக அபாயமாகவும் இருக்கும் என்கிறார் பொருளாதார அறிஞர் எட்மண்ட் எஸ் பிலிப்.

சமீபத்தில் வெளிவந்துள்ள ஜி.எம்.கேல் எழுதியுள்ள அருகிவரும் பொருளாதாரம் என்கிற நூலில் பல தீர்வுகளை முன்வைக்கிறார். அரசு மற்றும் தனியார் இணைந்து இனிமேல் நிகழவுள்ள சூழலியல் மாற்றத்தைத் தடுக்க முடியும். சூழலியல் மாற்றத்தில் பல்வேறு விவரங்களை கேல் சுட்டிக் காட்டுகிறார். குறிப்பாக புவி வெப்பமடையும் பிரச்சினையால் காற்றும் நீரும் சீர்கெடுகிறது என்கிற புரிதல்தான் உள்ளது. ஆனால் இது பொருளாதாரத்திலும் பேரழிவைக் உருவாக்குகிறது என்கிறார்.

சிறந்த சூழலியல்தான் இயற்கையான மகரந்தச் சேர்க்கைக்கு உதவியாக இருக்கிறது. சீரான நீர்மட்டம்தான் கடல் மற்றும் காடுகளின் சூழலியலைத் தக்க வைக்கிறது. இதனால் இயற்கை மூலதனம் பாதுகாக்கப்படுகிறது. இயற்கையை பாதுகாப்பதன் மூலம் தொழில்துறையின் மூலதனத்திலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும் என்கிறார். இதன் மூலம் தொழில்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வழி ஏற்படும். இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்குவதால் முன்பைவிட அதிக முயற்சிகளுடன் உலகின் இயற்கை மூலதனத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தொழில்துறையோ வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு ஆசைப்படுவதினால் உலகின் இயற்கை மூலதனத்தை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று தனது முடிவுகளை முன்வைக்கிறார் கேல்.

உலகம் பசுமை வழியில் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். இயற்கையை சேதப்படுத்தாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதும், அதேநேரத்தில் இதற்காக புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் நிறுத்தக்கூடாது. இதற்கான முக்கிய திட்டத்தினை கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞரும் கணித ஆய்வாளருமான கிரேசிலியா சிசிலினிஸ்கி கூறுகையில், மனித குலம் நீடித்து வாழ வேண்டும் என்றால் நமது வளிமண்டலத்தில் தேங்கியுள்ள கரியமில வாயுவை நீக்க வேண்டும். அல்லது வளிமண்டலத்திலிருந்து வெளியே செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக கார்பன் மார்கெட் சந்தையில் உள்ள நிறுவனங்கள் இதை உறுஞ்சுவதன் மூலம் வர்த்தக ரீதியாக பயன்படுத்த முடியும் என சில கணித முடிவுகளை இவர் குறிப்பிடுகிறார்.

இதற்காக மற்றொரு தீர்வாக விவசாயத்தை மறு உருவாக்கம் செய்யும் ஒரு முன்வரைவை வைக்கிறார் ஆலன் சவோரி என்கிற உயிரி தொழில்நுட்ப ஆய்வாளர். இவரது தொழில்நுட்பத்தை சமீபத்தில் படகோனியா நிறுவனத்தில் செயல்படுத்தியுள்ளர். கரியமில வாயுவை கிரகித்து விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தில் வெற்றியும் பெற்றுள்ளார். லாபகரமாகவும் இருந்துள்ளது. தனியார் சிலரது ஒத்துழைப்புடன் இவர் இதனை செய்துள்ளார். இந்த முறையை விரிவுபடுத்துவதன் மூலம் விலை குறைவான விவசாயத்தினையும் மேற்கொள்ள முடியும் என்கிறார் இவர்.

வரும் காலங்களில் நாம் மேலும் பல அடிப்படையான சவால்களை எதிர்கொள்ள உள்ளோம். முக்கியமாக மக்கள் தொகை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது, தொழில் துறை விரிவாக்கம் மற்றும் ஏற்றத் தாழ்வான நாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்க உள்ளோம். வரும் காலங்களில் உலகின் பெருவாரியான மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிபடுத்துவதற்கும் பருவகால மாறுபாட்டுக்கும் இடையில் மிகப் பெரிய போராட்டம் நிகழும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

புவி வெப்பமடைதல் தொடர்பாக ஆய்வுகளும், முன் முடிவுகளும் முடிவுக்கு வரவில்லை. ஏனென்றால் இதில் அப்பாவித்தனமாக முடிவுகளை மேற்கொள்ள முடியாது. பொதுவாக இதற்கு காரணம் தொழில்துறை, வீடுகள் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இதற்கேற்பவே நிபுணர்களின் ஆலோசனைகளை நாடுகள் எளிதாக அமல்படுத்துகின்றன. சமூக அழுத்தம் காரணமாக அனைத்து நிறுவனங்களும் இதற்கான இழப்பீடுகளை நாடுகளுக்கு அளிக்கின்றன. பல நாடுகள் கார்பன் டாக்ஸ் என தனியாக வரி வசூலிக்கின்றன. பல நாடுகள் புகை வெளியீட்டு அளவை குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன.

ஆனால் புவி வெப்பமடைதல் தீவிரம் அடைந்து வரும் நிலையிலும் பல நாடுகள் இப்போதும் தொழில்மயமாக்கத்தில் தீவிரமாகவே உள்ளன. இதனால் ஒவ்வொரு நாட்டின் தனிநபர் வருமான அளவும் சூழல் மாசுபாட்டால் குறைந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி அதிகரிக்கிறது என்றால் சர்வதேச அளவிலான சாராசரி வருமானம் குறைவதற்கும் காரணமாக அமையும் என்கிறார் கேல். அதாவது அதிகரித்து வரும் மக்கள் தொகையின் காரணமாக கரியமில வாயு அளவை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய அழுத்தம் உருவாகும் என்கிறார்.

வருங்காலத்தில் இந்த சிக்கலை எதிர்கொள்ள அரசாங்கங்கம் மட்டும் களத்தில் நிற்க முடியாது. சூழலியலில் ஆர்வம் கொண்ட அனைவரும் பங்கெடுக்க வேண்டும். மிகப்பெரிய நிறுவனங்கள் சூழல் சீர்கேடுகளிலிருந்து குறைத்துக் கொள்ள வேண்டும்.

உலக அளவில் பெரும்பான்மையான மக்கள் பொருளதாரத்தில் கீழ் நிலையில் உள்ளனர். ஆனால் சூழலியல் கேட்டில் முன்னணி வகுக்கும் மேற்கு நாடுகள் பொருளாதாரத்தில் மேம்பட்டு வருகின்றன. 20 சதவீத மக்கள் உலகின் 80 சதவீத இயற்கை வளர்த்தை பயன்படுத்துகின்றனர். இந்த நாடுகள்தான் இப்போதுவரை சூழல் மாசுமாட்டு அளவினை மீறுகின்றன. இவர்கள் கார்பன் அளவை குறைப்பதற்கு தயாராகவும் இல்லை. பசுமை பொருளாதாரத்தை ஊகுவிக்க நாடுகள் அதிக அளவில் மானியம் அளிக்க வேண்டும். புதிய விதிமுறைகள் வகுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கார்பன் அளவை குறைக்க வேண்டும். பாதுகாப்பான வாழ்க்கைக்கு மட்டுமல்ல, பொருளாதார உத்தரவாதத்துக்கும் கரியமில வாயு வெளியேற்ற அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

maheswaran@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்