“பூ
விலிருந்து வண்டு தேனை உறிஞ்சுவதைப் போல மக்களின் வலி தெரியாமல் அரசன் வரி வசூலிக்க வேண்டும்” என்கிறார் சாணக்கியர். இது இன்றைய வரி நடைமுறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விஷயம். கடந்த 18 மாதங்களாக வெளிநாட்டு கறுப்புப்பண மீட்புத் திட்டம், தாமாக முன் வந்து வருமானம் அறிவிக்கும் திட்டம், பணமதிப்பு நீக்கம், திவால் சட்டம், பினாமி சட்டம், ஜிஎஸ்டி போன்ற பல்வேறு முக்கிய பொருளாதார மற்றும் வரிச் சீர்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
அடுத்தடுத்து புதிய சட்டங்களும் விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சட்ட வல்லுனர்களும் தொடர்ந்து தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மேலும் 8 மாநில அரசுகள் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளன. பொதுவாக தேர்தலுக்கு முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பொது மக்களை கவரக் கூடிய அம்சங்கள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த 30 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த பட்ஜெட்டில் வருமான வரிவரம்புகளை உயர்த்துதல், சேமிப்பு திட்டங்களுக்கு ஊக்கங்கள், வரிக்குறைப்பு போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு பயனளிக்கும் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதிக வருமானம் உள்ளவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் சலுகைகள் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.
பண்ணைவரி (எஸ்டேட்வரி)
வரிதாரரது ஆயுளுக்குப் பிறகு வாரிசுகளுக்கு போய்ச் சேரும் சொத்துகள் மீது விதிக்கப்படும் வரியான பண்ணை வரி (Estate Duty) இந்தியாவில்1985 வரை இருந்து வந்தது. இது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பலநாடுகளில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணமாக அமெரிக்காவில் 50 லட்சம் டாலருக்கு மேல் சொத்து வைத்திருக்கும் வரிதாரர் அவரது இறப்பிற்குப்பின் அந்த சொத்தின் மீது சுமார் 40 சதவிகிதம் வரியாக வாரிசுகள் செலுத்த வேண்டிய வரிச்சட்டம் இருந்து வருகிறது. தற்போது அமெரிக்க அதிபர் ‘ட்ரம்ப்’ இந்த சொத்து வரம்பை ஒரு கோடி டாலராக இரட்டிப்பு செய்திருக்கிறார். பண்ணை வரி (Estate duty) என்கிற வரி இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று செய்திகள் உலாவுகின்றன. குறிப்பிட்ட சொத்து மதிப்புக்கு மேல் உள்ள வரிதாரர் மறைவுக்கு பின் அவரது சொத்தின் மீது வரிசெலுத்த நேரிடலாம்.
வரி மதிப்பீடு முறை மாற்றங்கள்
வரி விதிப்பு மற்றும் வசூல் நடைமுறையிலும் பல மாற்றங்கள் இருப்பதை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. முக்கிய மாற்றம் வரி மதிப்பீடு (Assesment) முறையில் இருக்கும். தற்போது வரித் தாக்கல் செய்யப்பட்ட கணக்கில் சில அடிப்படைகளின்படி குறிப்பிட்ட வரிதாரர்களது கணக்குகள் (Scrutiny) தேர்ந்தெடுக்கப்பட்டு வரி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. தற்போதைய முறையில் இந்த கணக்குகளை அதே ஊரில் உள்ள வருமான வரி அதிகாரியால் வரிதாரரது கணக்குகள் வரி மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.இந்த முறை மாற்றி அமைக்கப்பட்டு இந்தியாவில் வேறு இடத்தில் உள்ள வரி அதிகாரியால் வரி மதிப்பீடு செய்யப்படும் நிலை ஏற்படும்.
உதாரணமாக மதுரையில் தாக்கல் செய்யப்பட்ட வரிதாரரது படிவங்களை டெல்லி அதிகாரி சில அடிப்படைகளின்படி வரித் தணிக்கைக்கு தேர்ந்தெடுப்பதாக அறிவிப்பார் .அதன் பின் வரிதாரரது தாக்கல் செய்யப்பட்ட தகவல்களில் இருந்து கான்பூரில் உள்ள அதிகாரிகள் குழு இதற்கான கேள்வி பட்டியலை தயாரித்து வரிதாரருக்கு மின்னணு முறையில் அனுப்புவார்கள். இந்தத் தகவல்களை வரிதாரர் தனது ஆடிட்டர் மூலமாகவோ அல்லது தாமாகவோ கேள்விகளுக்கான விளக்கங்களையும் உரிய ஆவணங்களையும் கணினி மூலம் அளிப்பார். கொடுக்கப்பட்ட கேள்விகளையும் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கங்களையும் ஆவணங்களையும் சரி பார்த்து வரி மதிப்பீடு செய்வது பாட்னாவில் உள்ள மூன்றாவது அதிகாரி ஒருவர். இந்த முறைக்கு முகமில்லாமலும் பெயரில்லாமலும் வரி மதிப்பீடு செய்யும் திட்டம் (Faceless and Nameless) என்று பெயர்.
புதிய நடைமுறை மூலம் வருமானவரி இலாகா முழு அளவில் நேர்மையான மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட வரி மதிப்பீடுகள் செய்ய முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. பல்வேறு நாடுகளில் இத்தகைய முறை நடைமுறையில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் ஆரம்ப காலத்தில் ஏராளமான அசெளகரியங்களும், சிரமங்களும் ஏற்பட வாய்ப்புள்ளன. தற்போது ஒரு வரி அதிகாரியிடம் நேரில் விளக்கமாக விபரங்களைக் கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாமல் மேல் முறையீட்டில்தான் தீர்வு காணப்படுகிறது. முகமற்ற பெயரற்ற முறையில் செய்யப்படும் வரிமதிப்பீட்டு திட்டத்தில் வரி சச்சரவுகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு செல்லப்படும் மேல் முறையீடுகளை கையாள்வதும் வருமான வரியின் மூத்த அதிகாரிதான். இவருக்கும் முகமற்ற பெயரற்ற முறை பொருந்துமா என்பது குறித்து தகவல்கள் ஏதுமில்லை. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அனுபவங்களை மனதில் கொண்டு இந்த முறையை தற்போது ஆராய்ந்து அதற்கு வடிவம் கொடுக்க ஒரு குழு வேலை செய்து வருகிறது. இந்தப் புதிய திட்டத்தை சில பெரிய நகரங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி அதன் நடைமுறை அனுபவங்களை வைத்து பின்னர் அனைத்து நகரங்களிலும் அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுவாக வரி ஆய்வு என்பது இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலில் வரி அலுவலகத்திற்கு வரிதாரரை அல்லது அவரது ஆடிட்டரை அழைத்து வேண்டிய விளக்கங்களையும் ஆவணங்களையும் பெறுவது. மற்றொன்று துறை சார்ந்த தணிக்கை (Field Audit) என்று சொல்லப்படுகின்ற வரிதாரருடைய அலுவலக விலாசத்திற்கே IRS அதிகாரி வந்து கணக்குகளை சரிபார்த்து அதற்கான வரி மதிப்பீடு செய்வது. மேலும் அமெரிக்காவில் வரித் தணிக்கைக்கு உட்படும் கணக்குகள் ஓர் ஆண்டுக்கு மட்டும் அல்லாமல் முந்தைய 3 ஆண்டுகளுக்கும்அடுத்த 2 ஆண்டுகளுக்கும் வரித்தணிக்கைக்கு உட்படுத்தப்படும். இந்தியாவில் வரும் நாட்களில் அதிக அளவு சர்வே மற்றும் ரெய்டு (Raid) இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போதைய வருமானவரிச் சட்டப்படி வரி சர்வே மற்றும் ரெய்டு (Search & Raid) முறையில் வீடு தேடி வந்து கண்டு பிடிக்கப்படும் கறுப்பு பணத்திற்கான வரி மற்றும் அபராதம் 77% முதல் 137% வரை செல்லலாம். அபராத விதிமுறைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு கடும் அபராதம் விதிக்க வருமான வரி அதிகாரிகள் அதிகாரம் பெற்று உள்ளனர். தவிர வரிச் சட்டத்தில் சிறைத் தண்டணைக்காக உள்ள விதிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பலனாக புதிய வரிதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மேலும் வருமானவரித் துறையின் நவீன தொழில்நுட்ப அணுகுமுறைகளான திட்ட உள்நோக்கு (Project Insight) சென்றடையும் முறை (Reach out), 360 டிகிரிநோக்கு, Operation clean money போன்றவைகளை செயல்படுத்துவதால் வரி வசூல் அதிகரிக்கும். வரி ஏய்ப்பு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. வரும் ஆண்டுகளில் வருமான வரி இலாகாவின் செயல்பாடுகளில் பெரிய மாற்றத்தை காணலாம். முக்கிய மறைமுக வரியான ஜிஎஸ்டி-யில் ஏற்கனவே பல மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் செய்து வருவதால் இந்த பட்ஜெட்டில் நேரடி வரியான வருமான வரி குறித்து பல முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கலாம்.
karthikeyan.auditor@gmail.com | ஓவியம்: முத்து
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago