2006 ஆண்டில் ரிலையன்ஸ் சகோதரர்கள் பிரிந்து, தனித்தனியே தொழில்களைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கியது ஞாபகம் இருக்கிறதா? சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் இவர்களது நிறுவனங்கள் குறித்த கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.
அனில் அம்பானியின் நிறுவனங்களின் 10 வருட கூட்டு சராசரி வளர்ச்சி (CAGR) விற்பனையில் 9.4%, இருந்தாலும், லாபத்தில் -12.6%, ரிடர்ன்ஸில் -1.7% ஆகவும் இருந்துள்ளனவாம்!
இதே காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 10 வருட CAGR விற்பனையில் 11.2%, லாபத்தில் 9.4%, ரிடர்ன்ஸில் 17.8% ஆக இருந்துள்ளன!
போர்ப்ஸின் உலகப் பணக்காரர்களின் பட்டியலின் படி 2007-ல், அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 4,500 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்ததாம். 2017ல் பார்த்தால், அது 315 கோடி டாலர்களாகக் குறைந்து விட்டதாம்! இரண்டு பேருக்கும் கிடைத்தது அதே பத்து வருடங்கள். கிட்டத்தட்ட சமமான சொத்துகளும் கூட. ஆனால் என்ன தொழில் செய்தார்கள், அதை எப்படி எப்படிச் செய்தார்கள் என்பதைப் பொறுத்துத்தானே பின் விளைவுகள் அமையும்?
`போற்றாதார்க்கு பொருளாட்சி இல்லை ' என்பாரே வள்ளுவர்!
`காலம் பலவற்றை மாற்றி விடும் என்பார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், நீங்கள் தான் எதையும் மாற்ற வேண்டும்!' என்று அமெரிக்கக் கலைஞர் ஆண்டி வெர்ஹால் சொல்வதை மறுக்க முடியுமா?
இந்த லயன் டேட்ஸ் உரிமையாளர் பொன்னுதுரையின் கதை வேறு விதமானது. தனது பத்தாவது வயதிலேயே இலங்கையில் ஒரு மளிகைக் கடையில் எடுபிடி வேலை பார்த்தாராம் அவர். 1974-ல் அவர்கள் குடும்பம் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட பொழுது, திருச்சியில் ஒரு மளிகைக் கடையில் மாதம் ரூ. 85 சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
ஆனால், சிறு வயது முதலே சொந்தமாக வியாபாரம் செய்யும் விருப்பம் இருந்ததால், வங்கியில் ரூ. 4,600 கடன் வாங்கிச் சொந்தமாக மளிகைக் கடை வைத்தாராம். அனுபவம் இல்லாததால், அதில் ரூ.4,000 நட்டப்பட்டு மூட வேண்டியதாயிற்று.
பின்னர் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் ரூ.800 க்கு வேலை கிடைத்திருக்கிறது. அத்துடன், வருமானத்தைக் கூட்டிக் கொள்வதற்காக இவர் சபீனா பவுடர் பாக்கெட்டுக்களை விற்று இருக்கிறார்! அப்படி ஒரு கடைக்குச் சென்ற பொழுது, அங்கே பேரிச்சம்பழங்கள் அசுத்தமான முறையில் விற்கப்படுவதைப் பார்த்திருக்கிறார். கடைக்காரரிடம் அதைப் பாக்கெட்டில் விற்கலாமே என்று கேட்டதற்கு கடைக்காரர் `இவ்வளவு பேசுகிறாயே, நீயே பாக்கிங் செய்து கொடுத்து விடேன்' என்று சொல்ல, இவர் மறுக்காமல், கோபப்படாமல், அப்படியே செய்தாராம். இப்படி ஆரம்பித்தது தானுங்க லயன் டேட்ஸின் வெற்றிப் பயணம்! சபீனாவுடன் பேரிச்சம்பழங்களை விற்க ஆரம்பித்தவர், சீக்கிரமே கடனை அடைத்து விட்டாராம். அவருக்கென்று தனியாக கடை இல்லாததால், வீட்டில் வைத்தே அவற்றை பாக்கிங் செய்வாராம்'.
நம்மால் காற்று அடிக்கும் திசையை மாற்ற முடியாது. ஆனால், பாய்மரத்தை காற்றின் திசைக்கேற்றவாறு மாற்றி வைத்து, இலக்கை அடைய முடியும் ' என்கிறார் ஜிம்மி டீன் எனும் அமெரிக்கப் பாடகர்.
அது சரி, லயன் என ஏன் பேர் வைத்தார் என்கிறீர்களா? மனுஷன் அதற்கு ஐந்து நிமிடம் தான் யோசித்தாராம். பேரிச்சம்பழம் பல சத்துக்கள் நிறைந்தது. எனவே உலகில் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சிங்கத்தின் பெயரை வைத்து விட்டாராம். பின்னர் வியாபாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தஞ்சாவூர் மதுரையென விரிவுபடுத்தியதில், 1983- லேயே விற்பனை ரூ. 50,000யை தொட்டுவிட்டதாம்.
வானொலியில் தொடங்கிய விளம்பரம், தொலைக்காட்சி வந்ததும் பிடித்துக் கொண்டார். வியாபாரம் மேலும் சூடு பிடித்து விட்டது. பிறகு சென்னையிலும் விற்கத் தொடங்கியவர், வியாபாரத்தைப் பெருக்க மும்பாய் சென்ற பொழுது ஆங்கிலம் தெரியாதது பெருந்தடையாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். அதற்காக இரவு 8 முதல் 9 மணி வரை வீட்டில் ஓர் ஆசிரியரை வைத்து தினசரி பாடம் கற்றுக் கொண்டாராம்.
1978-ல் பேரிச்சம்பழம் விற்கத் தொடங்கியவர்கள்,1998 முதல் பேரிச்சம்பழ சாறும் விற்க ஆரம்பித்தார்கள். 1999ல் காஷ்மீர் தேன், 2000-ல் புளி, 2003-ல் ஜாம், 2009-ல் ஓட்ஸ் என மற்றப் பொருட்களுடன் தொழில் விரிவடைந்துள்ளது.
மஸ்கட்டிலும் ஒரு தொழிற்சாலை உள்ளது. இன்று 600க்கு மேற்பட்ட தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான கோடி வர்த்தகம் என வளர்ந்துள்ளார்கள்! காரணம்? உழைப்பு, தரம், காலம் காட்டும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் யுக்தி போன்றவை தானே?
`காலப்போக்கில் சிலர் செம்மைப்படுகின்றனர்; சிலரோ சிதைந்து போகின்றனர்!' என்பது சாணக்கியர் கூற்று. செம்மையுறுவதும் சிதையுறுவதும் அவரவர் கையில் தானேங்க? காலம் சாட்சியமாக மட்டும் தானேங்க நிற்கும்?
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
54 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago