இ
ந்திய தொழில்துறை கட்டமைப்பில் மிக முக்கிய மாற்றத்தை உருவாக்கியவை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்றால் மிகையில்லை. உலக அளவில் இந்தியாவில் ஸ்டார்ட்அப் துறை வளர்ச்சி அபரிமிதமானது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு அடுத்து ஸ்டார்ட் அப் துறையில் இந்தியா மூன்றாவதாக உள்ளது.
இளந்தலைமுறை தொழில்முனைவோர்களின் தன்முனைப்பில் ஸ்டார்ட்அப் கருத்தியல் உருவாக்கிய தாக்கம்தான் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி. இதனையொட்டி சர்வதேச அளவிலான முதலீட்டாளர்களும் ஈர்க்கப்படுகின்றனர். இந்தியாவில் இதுவரை ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு ஸ்டார்ட் அப்- களில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்குவது எளிதான ஒன்று அல்ல. கடினமானது என்றும் புரிந்து கொள்ளத் தேவையில்லை. தொழில்முனைவில் இறங்கும் ஒருவர் தனது சவாலில் விடாமுயற்சியுடன் இருந்தால்தான் சிறந்த முடிவை எட்ட முடியும். இல்லையெனில் மொத்தமும் இழப்புதான். இதுதான் ஸ்டார்ட் அப். ஆனால் உருவாகும் அத்தனை ஸ்டார்ட் அப்-களும் வெற்றிபெற்றுவிடுவதில்லை. பெரும்பாலான ஸ்டார்ட் அப்-கள் தோல்வி அடைகின்றன. குறிப்பாக பத்து ஸ்டார்ட் அப்களில் எட்டு நிறுவனங்கள் தோல்வி என்கிறது புள்ளிவிவரங்கள்.
இந்த துணிகரமான தொழில்முனைவு முயற்சியில் 2017-ம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் தொய்வு ஏற்பட்டது. குறிப்பாக வேலை இழப்பு, பொருளாதார தேக்கம், சிறு நிறுவனங்களை கையகப்படுத்தும் போக்கு என 2017- ம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சோதனை காலமாக அமைந்துவிட்டது.
2016 -ம் ஆண்டில் 1,400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 3,450 மில்லியன் டாலர் முதலீடும், 457 ஒப்பந்தங்களும் நடந்தன. ஆனால் 2017-ம் ஆண்டில் 1,000 நிறுவனங்கள்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதலீடு 2,870 மில்லியன் டாலராக குறைந்துள்ளதுடன் 306 ஒப்பந்தங்களே நிகழ்ந்துள்ளன.
ஆனால் ஒப்பீட்டளவில் 2015-ம் ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. 6,636 மில்லியன் டாலர் முதலீடும் 599 ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தொடர்ந்து இயங்கும் சவால்
இந்தியாவில் இதுவரை 10,000த்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து இயங்குகின்றனவா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. 2015-ம் ஆண்டில் சிறப்பான தொடக்கம் பெற்ற பல ஸ்டார்ட் அப்கள் தொடர்ந்து இயங்குவதற்கான முதலீடு கிடைப்பதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து முதலீடு திரட்டுவது இந்த நிறுவனங்களுக்கு எளிதானதாக இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டார்ட் அப்- களுக்கான சூழல் உகந்ததாக இல்லை என்பதால், உருவாக்குவது மட்டுமல்ல, இயங்குவதிலும் பெரும் சிரமங்கள் உருவாகின என்கின்றனர் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள். அரைகுறையான ஐடியா கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிலைத்து நிற்க முடியவில்லை. இவர்களால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பால், புதிய ஸ்டார்ட் அப் களுக்கான வழியும் அடைபட்டது.
2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 388 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களில், 21 ஸ்டார்ட் அப்களுக்கு மட்டுமே நிதி உதவி கிடைத்தது. 435 சில்லரை வர்த்தக ஸ்டார்ட் அப்களில், 15-க்கு மட்டுமே நிதி திரட்டப்பட்டுள்ளது. 192 நிதி சார்ந்த ஸ்டார்ட் அப்களில் 8 நிறுவனங்களுக்கு மட்டுமே முதலீடு கிடைத்துள்ளது.
சவால் உதாரணம்
உதாரணமாக 2015-ம் தொடங்கப்பட்ட டெலிவரி ஸ்டார்ட்அப் நிறுவமான டுன்ஸோ (Dunzo) கதையை குறிப்பிடலாம். இந்த துறையில் உள்ள மிகச் சில நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 2015-ம் ஆண்டில் 20 லட்சம் டாலர் நிதி திரட்டியது. புனே, பெங்களூருவில் இயங்கி வருகிறது. இந்த முதலீட்டில் தினசரி 3500 ஆர்டர்களை பெறும் அளவில் வளர்ந்தது. ஆனால் தொடர்ந்து இயங்க நிதி திட்டுவது கடினமாக இருந்ததாக சொல்கிறார் இதன் நிறுவனர் கபீர் பிஸ்வாஸ். கடந்த ஆண்டு தொடக்கத்தில் நிதி திரட்டும் முடிவுகளில் இருந்து பின் வாங்கியதாகவும் குறிப்பிடுகிறார்.
முதலீடுகளை திரட்ட இந்தியா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் ஏற்பதாக இல்லை. ஏனென்றால் இந்தியாவுக்கு வெளியே உள்ள பல முதலீட்டாளர்கள் ஏற்கனெவே பெப்பர் டாப், ஒபினியோ, ஹைப்பர்லோக்கல் ஸ்பேஸ் உள்ளிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து பெரும் இழப்புகளை சந்தித்ததால் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தயங்கினார்.
நிதி திரட்டல் முயற்சிகளுக்கு இடையில் டுன்சோ நிறுவனத்தை கையகப்படுத்தவும் வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் அதை மறுத்ததுடன் சொந்த முதலீட்டிலேயே நடத்துகிறார். முதலீடு கிடைப்பதற்கு வழியும் இல்லை. நிறுவனத்தையும் விற்க முடியவில்லை. ஆனால் வாடிக்கையாளர்களின் அனுபவத்தால் வெளியேறவும் முடியவில்லை. பொருளாதார ரீதியாக ஸ்டார்ட் அப் சிறந்த தீர்வாக இல்லை என யோசித்தேன் என்கிறார். ஆனால் காத்திருப்பு விண்போகவில்லை. எதிர்பாராத விதமாக கூகுள் நிறுவனம் வந்தது. 12 மில்லியன் டாலர் முதலீடு செய்தது. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் கூகுள் முதன் முறையாக நேரடியாக மேற்கொண்ட முதலீடு இது.
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் இது போன்ற கதைகள் நிறைய உள்ளன. 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீண்டு வருகின்றன. சில நிறுவனங்கள் காணாமல் போகின்றன. ஆனால் தொழிலில் அடிப்படை சரியாக இருக்கும்பட்சத்தில் அடுத்த கட்டத்துக்கு வளர முடியும். ஆனால் கடந்த ஆண்டில் முதலீட்டாளர்கள் மட்டுமல்ல ஸ்டார்ட் அப் நிறுவனர்களும் இந்த சூழலில் புதிய முயற்சிகளில் இறங்கவில்லை என்பதும் உண்மை.
ஸ்டார்ட் அப்-பைப் பொறுத்த வரை, சரியான திட்டமிடல் வேண்டும். தொழில்நுட்ப நிபுணத்துவமும், சந்தையைப் பற்றிய அறிவும் கொண்ட திறமையான குழு, வித்தியாசமான, மக்களுடன் தொடர்புடைய பொருள் அல்லது சேவை, சரியான முதலீட்டாளர் போன்றவை முக்கியம். இவற்றில் தேர்ச்சி பெற்றாலே ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் நிலைத்து நின்று விடும்.
தோல்விக்கான காரணங்கள்
ஒரு ஸ்டார்ட் அப் தொழிலுக்கான சந்தை இருக்க வேண்டும். அதாவது ஒரு தொழிலானது வாடிக்கையாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிலைக்க முடியாது. வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இலக்கு என்றாலும் தொழிலில் தோல்வி அடைவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட 3 ஆண்டுக்குள் தோல்வியை அடைகின்றன.
சிபி இன்சைட் (CB Insights) என்கிற சந்தை ஆராய்ச்சி நிறுவனம், 101 தோல்விவுற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆராய்ந்து அவற்றின் தோல்விக்கான 20 முக்கிய காரணங்களை கண்டுபிடித்துள்ளது.
ஐடியாவில் நிபுணத்துவம் குறைவு, எல்லோருக்கும் கிடைக்காத இன்குபேஷன் அல்லது ஆலோசனை, அனுபவம் திரட்டாதது போன்றவையும் இதற்குக் காரணம். தவிர நிதி திரட்டும் நடவடிக்கையின் ஆரம்பத்தில் உள்ள ஒரு நிறுவனம் தேவையற்ற பேச்சுகளை குறைக்க வேண்டும் என்பதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அவசியமாக உள்ளது என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
ஸ்டார்ட் அப்- களின்எதிர்காலம்
சர்வதேச அளவில் ஒப்பிட்டால் இந்தியாவில் புதுப்புது தொழில்கள் தொடங்கப்படுவது அதிக அளவில் உள்ளன. நிதிச் சேவை, மருந்து, கல்வி, தகவல் தொடர்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
2020-ம் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்டார்ட் அப் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என நாஸ்காம் குறிப்பிடுகிறது. இதற்கேற்ப மத்திய அரசு ஸ்டார்ட் அப் இந்தியா என புதிய திட்டங்களின் மூலம் உதவி வருகிறது. 2018-ம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சிறப்பான ஆண்டாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
தொழில்முனைவோர்கள் வெற்றி பெறுவதற்கு மற்றவர்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். எதனால் தோல்வி அடைந்தன என்பதை ஆராய்ந்து அவற்றை சரி செய்தால் 2018-ம் ஆண்டு ஸ்டார்ட் அப்களுக்கு ஏற்றம் தரும் ஆண்டாக அமையும்.
-maheshwaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago