ச
மூக வலைதளங்களின் தற்போதைய `ஹாட் டாபிக்’ எப்ஆர்டிஐ மசோதாதான். இந்த மசோதா குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பே விரிவான கட்டுரை எழுத திட்டமிட்டோம். ஆனால் ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகிய அதிர்வுகளில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் சமயத்தில் இந்த மசோதா குறித்து எழுதி பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என நினைத்தோம். ஆனால் வதந்திகளை மட்டும் வெளியிட்டு கொண்டிருக்கும் சில வாட்ஸ்ஆப் குழுமத்தினருக்கு சிறு உண்மை கிடைத்தவுடன், அதனை ஊதி பெரிதாக்கிவிட்டனர். அதற்காக இந்த மசோதாவில் ஆபத்து இல்லை என்று கூறமுடியாது. ஆபத்துக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. முன்னதாக இந்த மசோதா என்ன என்பதை பார்ப்போம்..
எப்ஆர்டிஐ மசோதா?
உற்பத்தி, சேவைத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் திவாலாகும் பட்சத்தில் அவற்றின் பிரச்சினையை தீர்ப்பதற்கு சட்டங்கள் இருக்கின்றன. அதுபோல வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் திவாலாகும் பட்சத்தில், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தெளிவான விதிமுறைகள் இல்லை. இந்த மசோதா மூலம் அதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் `பெயில் இன்’ என்னும் விதி இருக்கிறது. அதாவது வங்கி நிதி நெருக்கடியில் இருக்கும் பட்சத்தில் வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணத்தை மூலதனமாக வைத்து வங்கியை தொடர்ந்து இயக்கலாம் என்னும் விதி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய விதிமுறைகளில் கூட, வங்கியில் ஒருவர் எத்தனை லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், வங்கியில் நிதி நெருக்கடி என்னும் பட்சத்தில் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகை மட்டும் கிடைக்கும். புதிய பெயில் இன் விதிமுறைப்படியும் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால் அதற்கு மேல் உள்ள தொகையை டெபாசிட் செய்தவரின் அனுமதி இல்லாமல் வங்கிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கான தீர்வு கழகம் (Resolution Corporation)என்னும் புதிய அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது. வங்கியின் வளர்ச்சிக்கு சிறு முதலீட்டாளர்களின் டெபாசிட்டை பயன்படுத்தி கொள்ள இந்த கழகத்துக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
முதலில் வங்கிகளில் பிரச்சினை உருவாக வேண்டும். அதன் பிறகு அந்த பிரச்சினையின் அளவு என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ரிஸ்க் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒழுங்குமுறை ஆணையங்களே பார்த்துக்கொள்ளும் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி). ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விட அதிக ரிஸ்க் இருக்கும் பட்சத்தில் அப்போது தீர்மான கழகத்தின் கையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் வரும். அப்போதும் டெபாசிட்களை கையாளும் அதிகாரம் உடனடியாக இந்த கழகத்துக்கு கிடைக்காது. `பெயில் இன்’ ஏன் தேவை என்பது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் கிடைத்த பிறகே டெபாசிட் தொகை மீது கை வைக்க முடியும். இவ்வளவு நடைமுறைகளை தாண்டிதான் `முடியும்’ என்றாலும், சட்டப்படி டெபாசிட்களின் மீது கை வைக்க முடியும். தற்போதைய டெபாசிட்கள் `பெயில் இன்’ விதிமுறைக்குள் வராது.
இந்த `நிதித் தீர்மானம் மற்றும் வைப்புத் தொகை காப்பீடு (எப்ஆர்டிஏ) மசோதா’ கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கூட்டு குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. அடுத்த மாதத்தில் இந்த கூட்டுக் குழுவின் முன்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உரையாற்ற இருக்கிறார். அதன் பிறகு அனைத்து உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் விவாதித்து, தங்களது அறிக்கையை தாக்கல் செய்யும். அதன் பிறகு இந்த மசோதா அடுத்த கட்டத்துக்கு நகரும்.குளிர் கால கூட்டத்தொடரில் இருந்து பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இந்த மசோதா தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
வங்கியாளர்கள் கருத்து என்ன?
இந்த மசோதா தொடர்பாக சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடியிடம் பேசினோம். இந்த மசோதாவினால் பதற்றப்பட ஒன்றும் இல்லை. 1960-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த வங்கி ஒன்று திவால் ஆனது. அதன் பிறகு வங்கித்துறையில் பிரச்சினை ஏற்பட்டாலும் திவால் வரை சென்றதில்லை. அதன் பிறகு பல வங்கிகளுக்கு பிரச்சினை ஏற்பட்ட போது, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது அல்லது அரசு முதலீடு செய்திருக்கிறது. அதுவும் வரி செலுத்துபவர்களின் பணம்தான் என்பதை மறக்கக் கூடாது.
இந்திய பொருளாதாரமே வங்கிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. டெபாசிட்கள் இருப்பதால்தான் கடன் கொடுக்க முடியும், இது போல டெபாசிட்கள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையிலான நடவடிக்கைகளை எந்த அரசாங்கமும் செய்யாது என காமகோடி கூறினார்.
ஆனால் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிபி கிருஷ்ணன் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறார். 1969-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை 30-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. அப்போது தனியார் வங்கிகளை காப்பாற்ற `பெயில் அவுட்’ முறையை பின்பற்றிய அரசு, தற்போது பொதுத்துறை வங்கிகள் நெருக்கடியில் இருக்கும் பட்சத்தில் ஏன் முதலீட்டாளர்களின் டெபாசிட் தொகையை பயன்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
தற்போதும் ஒரு லட்ச ரூபாய் வரைக்குமான டெபாசிட்டுக்கு பாதுகாப்பு இருக்கிறது. புதிய மசோதாவிலும் இதே பாதுகாப்பு இருக்கிறதே என்று கேட்டதற்கு, 5,000 ரூபாயில் ஆரம்பித்த இந்த காப்பீடு 93-ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இந்த வரம்பினை உயர்த்தவில்லை. தற்போதைய சூழலில் இந்த அளவினை உயர்த்த வேண்டும்.
அடுத்ததாக வாராக்கடன் அதிகமாகும் பட்சத்தில்தான் ஒரு வங்கி திவால் சூழலுக்கு தள்ளப்படுகிறது. ஒருபுறம் கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் செலுத்தாதவர்களின் பட்டியல் இருக்கிறது. மறுபுறம் குறிப்பிட்ட 40 நபர்கள் மட்டுமே வங்கிகளுக்கு சுமார் ரூ.8 லட்சம் கோடி வரை செலுத்த வேண்டும். இந்த தொகையை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், எளிதாக கிடைக்கிறது என்பதற்காக சிறு முதலீட்டாளர்களின் டெபாசிட்களை பயன்படுத்துவது சரியா.? வங்கிகளில் எந்த பெரு நிறுவனங்களும், பெரு முதலாளிகளும் டெபாசிட் செய்வதில்லை. ரூ.115 லட்சம் கோடி டெபாசிட்களில் சுமார் 70 சதவீதம் சிறு முதலீட்டாளர்கள் செய்திருக்கும் டெபாசிட்கள். 10-12 சதவீதம் வரை வெளிநாட்டு இந்தியர்களின் டெபாசிட் இருக்கிறது. இவர்கள் டெபாசிட் செய்வதினால்தான் கடன் வழங்க முடிகிறது. இவர்களின் டெபாசிட்களை அபகரிக்க ஏன் நினைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
திவால் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் செயல்பட தொடங்கி இருக்கிறதே என கேட்டதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இவர்களுக்கு கொடுத்த கடன் தொகைக்காக வங்கிகள், தங்கள் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிகொண்டுதான் இருக்கின்றன. மேலும் இந்த நடைமுறை அவ்வளவு எளிதாக முடியாது. பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு முதலீடு செய்தது. அப்போது வங்கி நிர்வாகம் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் படி வங்கிகளை சீரமைப்பதற்கு 2020-ம் ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அவகாசத்துக்குள் வாராக்கடனை மீட்டுவிட்டு, கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் செலுத்தாத நபர்களிடம் கடனை வசூலித்த பிறகு, டெபாசிட் செய்யும் சிறு முதலீட்டாளரின் உரிமையை பறிக்கும் இந்த மசோதாவை அமல்படுத்தலாம் என்றார்.
`பெயில் இன்’ விதிமுறையை நீக்க வேண்டும் என அசோசேம் உள்ளிட்ட அமைப்புகள் குரல் எழுப்ப தொடங்கி இருக்கின்றன. வங்கிகள் மீது நம்பிக்கை இழக்கும் பட்சத்தில், டெபாசிட்கள் குறையும், டிஜிட்டல் வர்த்தகதை நோக்கி செல்பவர்கள் மீண்டும் பணத்தை நோக்கி திரும்புவார்கள், கடன் வழங்குவது குறையும் என்பது உள்ளிட்ட தொடர் பாதக விளைவுகள் உருவாகும். கிட்டத்தட்ட தேன் கூட்டில் கல் எரிவது போலத்தான்.
`கோடி கோடியாக காசு வைத்திருப்பவர்கள் யாரும் ஏ.டி.எம். வாசலில் வந்து காத்திருக்கவில்லை’ என்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது குமுறல் எழுந்தது. இப்போதும், ‘கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் முதலைகளை விட்டுவிட்டு, வங்கியில் உரிய கணக்கோடு பணம் போட்டு வைத்திருப்பவர்களை இந்த அரசு நோகடித்துவிடுமோ என்ற அச்சம் எழுந்திருப்பது நியாயம்தான்.ஊடகங்களும், இந்தத் துறை வல்லுநர்களும் கொடுக்கும் விளக்கங்கள் மட்டும் பயத்தைப் போக்கி விடாது. அரசாங்கம் தெள்ளத் தெளிவாக இதுபற்றிச் சொல்லிவிடுவது நல்லது. இல்லையேல்...
சாமானிய குடிமகனை மட்டுமே குறி வைத்து, ஓட ஓட துரத்துகிறார்கள் என்று அரசின் மேல் கோபம் வலுத்து விடும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago