இந்திய கார்ப்பரேட் உலகத்தில் ஏதேனும் ஒரு காரணத்துக்காக ரிலையன்ஸ் நிறுவனம் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ரிலையன்ஸின் ஆரம்ப கால சர்ச்சைகள், திருபாய் அம்பானி மறைவு, அண்ணன் தம்பி பிரச்சினை, சொத்து பிரிப்பு, தற்போது அனில் குழும சிக்கல் என ஏதேனும் விஷயம் இருந்துகொண்டே இருக்கிறது.
கடந்த 2002-ம் ஆண்டு திருபாய் அம்பானி மறைந்தார். அதிலிருந்து சகோதரர்களுக்குள் பிரச்சினை தொடங்கியது. 2005-ம் ஆண்டு பங்கு பிரிப்பு அளவுக்குச் சென்றது. ஐசிஐசிஐ வங்கியின் கேவி காமத் தலைமையில் இந்த சொத்து பிரிப்பு நடந்தது. இதில் முகேஷ் அம்பானியின் கனவு திட்டமான கம்யூனிகேஷன்ஸ் அனில் வசம் சென்றுவிட்டது. தவிர ஒருவர் தொழிலில் மற்றவர் 10 ஆண்டு காலம் இறங்கக் கூடாது என்னும் ஒப்பந்தமும் இருந்தது. அதனால் பத்து ஆண்டுகள் கழித்து 2015-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகப்படுத்தினார் முகேஷ். ஆரம்பத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட செல்போன் சேவை 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வர்த்தக ரீதியாக கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு துறைக்கு மட்டுமல்லாமல் சொந்த தம்பியின் குழுமத்துக்கே பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
தொழிலில் வெற்றி என்பது எப்போதும் நேர்கோட்டில் இருக்காது. ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால் தொடர் சரிவு என்பது ஆபத்தானது. அந்த ஆபத்தான நிலைமையில்தான் அனில் அம்பானி குழுமம் (ஏடிஏஜி) இருக்கிறது. எனினும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மட்டுமே பெரிய பிரச்சினை. அந்த ஒரு நிறுவனத்தின் பிரச்சினையால் குழுமத்தின் மற்ற நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆர்.காம் பிரச்சினை என்ன?
ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்படுவதற்கு முன்பு கூட வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் பெரிதாகக் கவரவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டது. அதன் பிறகு பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் ஆர்.காம் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது.
ஜியோ வந்தவுடன் ஏர்செல் மற்றும் ஆர்.காம் நிறுவனங்கள் இணைவதற்காக திட்டமிட்டன. ஆனால் இந்த இணைப்பு நடைபெறவில்லை. மேலும் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. செப்டம்பர் காலாண்டில் மட்டும் ரூ.2,709 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. வருமானமும் பாதியாகக் குறைந்திருக்கிறது. நிறுவனத்தின் நஷ்டம் காரணமாக கடன் பத்திரங்களுக்கான வட்டியை குறித்த காலத்தில் இந்த நிறுவனத்தால் செலுத்த முடியவில்லை. மார்ச் மாத முடிவு வரை இந்த நிறுவனத்துக்கு ரூ.44,300 கோடி கடன் இருக்கிறது. மேலும் வரும் நவம்பர் 30-ம் தேதி முதல் 2ஜி மற்றும் 3 ஜி செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. இதனால் சுமார் 3,000 பணியாளர்களின் வேலை பறிபோகும் சூழலும் உருவாகியுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என்று எழுதி கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக ஆர்.காம் பணியாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். சிலருக்கு அக்டோபர் மாதம் சம்பளம் கூட இதுவரை வழங்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
மேலும் ஆர்.காம் சில நிறுவனங்களுக்கு கடன் நிலுவை வைத்திருப்பதால் அந்த நிறுவனங்கள் தேசிய சட்ட நிறுவன தீர்ப்பாயத்தை (என்சிஎல்டி) அணுகி இருக்கின்றன. எரிக்ஸன், மணிப்பால் டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் என்சிஎல்டி-யை அணுகி இருக்கின்றன. இதனால் என்சிஎல்டி அமைப்பு ஆர்.காம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மணிப்பால் டெக்னாலஜி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வரும் டிசம்பர் 4-ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
இந்த நிலைமையில் வரும் 2018-ம் டிசம்பர் வரை கடன் கொடுக்க வேண்டிய யாருக்கும் பணத்தை திருப்பி தர இயலாது என ஆர்.காம் அறிவித்திருக்கிறது. சொத்துகளை விற்று கடனை மறு சீரமைப்பு செய்வதாக அறிவித்திருக்கிறோம். அதனால் விதிமுறைகளின் படி வரும் 2018-ம் ஆண்டு வரை எந்த விதமான தொகையும் செலுத்த தேவையில்லை என நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுபோன்ற பல காரணங்களால் 2017-ம் ஆண்டு மட்டும் ஆர்.காம் பங்கு 70 சதவீதம் சரிந்திருக்கிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் 41 சதவீதம் சரிந்திருக்கிறது.
வேறு நிறுவனத்துடன் இணைப்பு சாத்தியம் இல்லையா?
ஏர்செல் நிறுவனத்துடன் இணையும் திட்டம் முறிந்ததால் மற்ற நிறுவனங்களுடன் ஏன் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என்று கேட்கத் தோன்றும். இங்குதான் தொலைத் தொடர்பு துறையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஏர்செல் ஆர்காம் இணைப்பு என்பது இரு நிறுவனங்கள் இணைவது. அந்த முயற்சி தோற்றுவிட்டதால் ஆர்.காம் நிறுவனத்தை மற்றொரு டெலிகாம் நிறுவனம் வாங்க வேண்டும் என்பதுதான் இருக்கும் வாய்ப்பு. ஆனால் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆர்.காம் நிறுவனத்தை கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தொலைத் தொடர்பு என்பது அனைவருக்கும் தேவை என்பதால் வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு நிறுவனத்திடம் சென்றுதான் ஆக வேண்டும். தற்போது மூன்று முக்கியமான நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் இவர்களில் ஏதோ ஒரு நிறுவனத்துக்கு சென்றுதான் ஆக வேண்டும்.
நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாததால் சமீபத்தில் டாடா டெலிசர்வீசஸ் தன்னுடைய வாடிக்கையாளர்களை ஏர்டெல்லுக்கு (எந்த விதமான தொகையும் பெறாமல்) அளித்துள்ளது. தற்போது ஆர்காம் வாடிக்கையாளர்களை குறிவைத்து விளம்பரங்களை வெளியிடுகிறது ஏர்டெல். தொலைபேசி எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி இருப்பதால் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏன் கையகப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த துறையின் நிலைமையாக இருக்கிறது.
அனில் குழுமத்தின் நிலை?
ஆர்.காம் பாதிப்பால் சீட்டுக்கட்டு போல ஏடிஏஜி குழும பங்குகள் கடுமையாக சரிந்து வருகின்றன. அனில் குழுமத்தில் இருக்கும் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளும் சரிந்து வருகின்றன. ஏற்ற இறக்க போக்கு இருந்தாலும் பெரிய மாற்றம் நிகழும் என சொல்வதற்கு இல்லை. சமீபத்தில் ரிலையன்ஸ் நிப்பான் ஏ.எம்.சி. நிறுவனம் புதிதாக பட்டியலிடப்பட்டது. இந்த பங்குக்கு 81 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
முதல் நாள் வர்த்தகத்தில் 13 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால் இதிலும் ஏற்ற இறக்க சூழல் நிலவுகிறது. இந்த நிலைமையில் பேடிஎம் நிறுவனத்தில் செய்திருந்த முதலீடு, ரேடியோ, மல்டிபிளக்ஸ் ஆகிய பிரிவுகளை அனில் குழுமம் விற்றிருக்கிறது. மேலும் பல சொத்துகளை விற்கவும் திட்டமிட்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி அனில் குழுமத்துக்கு ரூ.1.18 லட்சம் கோடி கடன் இருக்கிறது. ஆனால் குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.60,000 கோடி என்னும் அளவில்தான் இருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு அனில் குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு மேலே இருந்தது என்பது நினைவுகூறத்தக்கது. கடனை மறு சீரமைப்பு செய்ய வேண்டும், தற்போது சிறப்பாக செயல்படும் ரிலையன்ஸ் ஏஎம்சி போன்ற நிறுவனங்களை கவனிக்க வேண்டும் என அனிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன.
105 கிலோ இருந்த அனில், மாரத்தான் ஒடும் அளவுக்கு தன்னை தயார் செய்துகொண்டார். தன் குழும நிறுவனங்களுக்கு என்ன செய்யப்போகிறார்?
-karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago