கோடீஸ்வரராக ஆசையா?

By எஸ்.ரவீந்திரன்

நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லும் குட்டிக் கதை இது. ``நான் 25 வருஷம் ஊறுன பழைய ஊறுகாய் வைச்சிருக்கேன். சும்மா சூப்பரா இருக்கும்'' என்றானாம் ஒருவன். ``அப்படியா... எனக்கு கொஞ்சம் கொடேன்..'' என உள்ளங்கையை நீட்டிய நண்பனிடம், ``இப்படி கேட்டவங்களுக்கு எல்லாம் கொடுத்திருந்தா, இன்னவரைக்கும் ஊறுகாய் வந்திருக்குமா'' என பதில் சொன்னானாம் அவன். சிக்கனத்தை, கஞ்சத்தனத்தை விளக்கும் கதை இது. கேட்டவங்களுக்கு எல்லாம் கொடுத்தா, ஊதாரித்தனமா செலவழிச்சா இருக்குற காசு எல்லாம் போயிரும்.. அப்புறம் நாமும் காசுக்கு யார் கிட்டயாவது போய் நிக்கத்தான் வேணும் என சொல்லாமல் சொல்லுகிறது இந்தக் கதை.

இதே கருத்தையே வேறு மாதிரி சொல்கிறார் ஆடம் கூ. சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர். தனது 26-வது வயதிலேயே சிங்கப்பூரின் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். உலகம் முழுவதும் பறந்து, தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் கருத்தரங்கு நடத்துகிறார். தொழில் முன்னேற்றத்துக்கு உதவும் உற்சாகம் தரும் பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய `பவர் ஆப் மணி’ என்ற கட்டுரையில் இருந்து...

எனக்கு மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, சீனாவில் சொந்தமாக அலுவலகங்கள் இருக்கின்றன. அடிக்கடி அங்கெல்லாம் போய் செமினார் நடத்துவது வழக்கம். வாரத்தில் இரண்டு முறையாவது விமான நிலையத்தில் என்னைப் பார்க்கலாம். எனது புத்தகங்களை படித்தவர்களை அல்லது எனது செமினாரில் பங்கேற்றவர்களை அங்கு சந்திக்க நேரிடும்.

சமீபத்தில் கோலாலம்பூருக்கு சென்றேன். விமானம் நின்றதும் இறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர், ``சார் நீங்களா.. எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் நீங்க.. நீங்க போய் எக்கானமி வகுப்புல வரலாமா..?'' என அதிர்ச்சியோடு கேட்டார். ``அப்படி வர்றதுனாலதான் நான் இன்னமும் கோடீஸ்வரனா இருக்கேன்..'' என பதில் சொன்னேன். மனிதர் அதிர்ந்து போய் விட்டார்.

கோடீஸ்வரர்களைப் பற்றி உலவும் பல பொய்களில் இதுவும் ஒன்று. அவர்கள் பணத்தை வாரி இறைத்து செலவு செய்வார்கள். எப்போதும் விமானத்தில் பர்ஸ்ட் கிளாஸில்தான் பயணம் செய்வார்கள். ரோலக்ஸ் வாட்ச் அணிந்திருப்பார்கள். ஆடம்பர கூச்சி, ஹியூகோ பாஸ் பிராண்ட் பொருட்களைத்தான் பயன்படுத்துவார்கள்.. இப்படி பல தவறான கருத்துகள் உலா வருகின்றன. இதனால்தான், பலர் பணத்தை கண்ணில் பார்க்க ஆரம்பித்ததும் தாம் தூம் என செலவழித்து விட்டு, பணக்காரர் ஆக தொடர்ந்து இருக்க முடியாமல் மீண்டும் ஏழைகளாகவே மாறி விடுகிறார்கள்.

உண்மையைச் சொல்வதாக இருந்தால். பெரும்பாலான கோடீஸ்வரர்கள் சிக்கனமானவர்கள். தேவையான செலவுகளை மட்டும்தான் செய்வார்கள். அதனால்தான் அவர்களின் பணம் குறைந்த காலத்தில் வேகமாக வளர்ந்து பல மடங்காக அதிகரிக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளில் நான் என் வருமானத்தில் 80 சதவீதத்தை சேமித்து வந்திருக்கிறேன். இது இப்போது 60 சதவீதமாகக் குறைந்துவிட்டது. காரணம் மனைவி, மாமியார், 2 குழந்தைகள், 2 வேலையாட்கள் என செலவு அதிகரித்து விட்டது. இருந்தாலும் வருமானத்தில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே சேமிக்கும் பலரோடு ஒப்பிடும்போது இது அதிகம்தான்.

விமானத்தில் எப்போதுமே முதல் வகுப்பில் பயணம் செய்வதை விரும்ப மாட்டேன். அதேபோல், 300 டாலர் கொடுத்து சட்டை வாங்கி அணிய மாட்டேன். அதெல்லாம் தண்டச் செலவு என எனக்குத் தெரியும். ஆனால், கொஞ்சம் கூட யோசிக்காமல் 1300 டாலர் கொடுத்து எனது மகளை ஜூலியா காப்ரியல் ஸ்பீச் அண்ட் டிராமா வகுப்புக்கு அனுப்புவேன். அது தேவையான செலவு என்பது எனக்குத் தெரியும்.

ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் சம்பாதிக்கும் 40 வயதுக்கு உட்பட்ட இளம் தொழிலதிபர்கள் அமைப்பில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். அங்கு, சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரரான பலரும் என்னைப்போல் சிக்கனமாகத்தான் இருக்கிறார்கள். 50 லட்சம் டாலருக்கு மேல் சொத்து வைத்திருக்கும் பலரும் விமானத்தில் எக்கானமி கிளாஸில்தான் பயணம் செய்கிறார்கள். அவர்களிடம் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் காரெல்லாம் கிடையாது. விலை குறைந்த நிஸான், டொயோட்டாதான்.

கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சேர்க்காதவர்கள்தான் (அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் வாரிசுகள்) மறுநாள் உலகமே அழிந்து விடுவது போல் நினைத்துக் கொண்டு பணத்தை தண்ணீராய் வாரியிறைக்கிறார்கள். ஏழையாய் இருந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தால்தான் அதன் அருமை தெரியும். இல்லாவிட்டால் தெரியாது. அதனால்தான் பெரும் பணக்காரர்களின் பல கோடி சொத்துக்கள் கூட, 3-வது தலைமுறைக்குக் கூட கிடைக்காமல் அவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படுகிறது.

எனது தந்தைக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் எனது நிறுவனத்தை ஆரம்பித்தபோது, அவர் ஒரு பைசா கூடத் தரவில்லை. எல்லாமே நான் சம்பாதித்ததுதான். அதனால் ஒவ்வொரு பைசாவின் அருமையும் எனக்குத் தெரியும்.

``சந்தோஷமா அனுபவிக்கலைனா அப்புறம் எதுக்கு இவ்வளவு பணம் சம்பாதிக்கணும்..'' என சிலர் என்னைக் கேட்பார்கள். பிரபல பிராண்ட் நகை வாங்குவதிலோ, உடைகள் வாங்குவதிலோ எனக்கு அவ்வளவு சந்தோஷம் கிடையாது. அப்படியே சந்தோஷம் கிடைத்தாலும் அது கொஞ்ச காலத்துக்குத்தான்.

இதுபோன்ற சந்தோஷங்கள் தற்காலிகமானவையே. அப்போதைக்கு சந்தோஷம் தரும். அவ்வளவுதான். திரும்பவும் சந்தோஷம் வேண்டுமென்றால் மீண்டும் பணத்தை வாரி இறைக்க வேண்டும். சந்தோஷம் வந்து வந்து போகும். கடைசி வரை, சோகமான, திருப்தியே இல்லாத வாழ்க்கையைத்தான் வாழ வேண்டியிருக்கும்.

எனக்கு உண்மையான சந்தோஷம், எனது குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து விளையாடுவதுதான். எனது நிறுவனமும், எனது பணியாளர்களும் மேலும் மேலும் வளர்வதும் புதிதாக பல நாடுகளில் உள்ளவர்களுக்கு பயன் தரும் வகையில் செயல்படுவதும்தான் எனக்கு சந்தோஷம்.

எனது செமினாரும் எனது புத்தகங்களும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய நல்ல மாற்றங்கள் குறித்து எனக்கு வரும் மெயில்களை படிப்பதில் சந்தோஷம். எனது இணையதளம் எப்படி உங்களை கவர்ந்து உங்களில் மாற்றத்தை உருவாக்கியது என்பதை அறியும்போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவேன். ரோலக்ஸ் வாட்ச் தராத நிலையான சந்தோஷத்தை அப்போது அடைவேன்.

நான் சொல்ல வருவது இதுதான். என்ன தொழில் செய்கிறீர்களோ அது, ஆசிரியர் தொழிலோ, வர்த்தகமோ, அல்லது பில்டரோ அந்தத் தொழிலில் கிடைக்கும் சந்தோஷம்தான் உண்மையான சந்தோஷம். அதில் கிடைக்கும் பணம் என்பது ஒரு உப உற்பத்திப் பொருள் அவ்வளவுதான். இதைப் புரிந்து கொண்டால் போதும், பணத்தின் மூலம் கிடைக்கும் உண்மையான சந்தோஷத்தை அடையலாம்.

-ravindran.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்