பணமதிப்பு நீக்க ஓராண்டு: நினைவு நாளா? நிறைவு நாளா?

By ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

பணமதிப்பு நீக்கம் அமல் செய்து ஓராண்டு நிறைவடையும் நிலையிலும் இது குறித்த சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. ஆளும் கட்சியினர் ஆண்டு நிறைவு நாள் என்றும், எதிர்க்கட்சிகள் நினைவு நாள் என்றும் நவம்பர் 8-ம் தேதியை நினைவு கூர திட்டமிட்டுள்ளனர். கறுப்புப்பணம், கள்ளப்பணம் மற்றும் தீவிரவாதப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறியதா? பொருளாதார தாக்கம் என்ன?

ஆரம்ப குறைபாடுகளும் சவால்களும்

“புழக்கத்தில் இருந்த பணத்தில் 85 சதவிகிதம் உயர்மதிப்பு நோட்டுக்களாக ரூ.500 மற்றும் ரூ.1000மாக இருந்த நிலையில், ஒரே இரவில் பணமதிப்பு நீக்கம் செய்து இந்தப் பணத்தை வங்கியில் செலுத்தி சரி செய்து கொள்ளலாம். இதன் மூலம் வரிக்குட்படாத பணத்திற்கான வரியை பின்னர் வசூல் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு கணிசமான தொகை வங்கிக்கு வராமல் போகலாம் என்ற அடிப்படையில் பணமதிப்பு நீக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 99 சதவிகிதம் பழைய நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டிருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

வங்கிகளின் குறைபாடுகளைப் பயன்படுத்தி பலர் பழைய நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகளை மாற்றியதாகவும் ரிசர்வ் வங்கியிலேயே புதிய நோட்டுகளைச் சிலர் பெற்றதாகவும், பழைய நோட்டுகளுக்குத் தங்கம் மற்றும் சில ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகவும், பல்வேறு செய்திகளைப் படித்தோம். பொதுமக்கள் பொறுமையாக நீண்ட வரிசையில் காத்திருந்து வங்கியில் இருந்து பணத்தைப் பெற்றதையும் பார்த்தோம்.

இந்தியாவில் நிலம், வீடு, தங்கம், கல்லூரிக்கான நன்கொடை போன்றவற்றிற்குக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் ரொக்க பரிவர்த்தனை செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவற்றை ஒரே மூச்சில் மாற்றம் செய்ய முயற்சித்தது எந்தவொரு திட்டத்திற்கும் சவால்தான். பணமதிப்பு நீக்கமும் பல்வேறு சவால்களை சந்தித்தது. தொழில் நிறுவனங்கள் குறிப்பாக சிறுகுறுந் தொழில்கள் சிரமப்பட்டன. பலவேலை இழப்புகளும் நடந்தது. இந்தியாவின்பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் காணப்பட்டது. இந்தத் திட்டத்தின் இறுதி பலன் குறித்த தகவல்களை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.

வரித் துறை நடவடிக்கைகள்

கறுப்புப் பணத்தை ஒழிக்க அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் வருமானவரித் துறைக்கு பல வகைகளில் உதவியிருக்கிறது. வங்கியில் டெபாசிட் செய்தவர்களது விபரங்கள் வருமானவரித் துறையிடம் சமர்பிக்கப்பட்டு மேலும் விபரங்கள் திரட்டும் பணி நடைபெறுகிறது. இந்தத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, வரும் ஆண்டுகளில் நோட்டீஸ் அனுப்பி விபரம் கேட்கும் அதிகாரத்தை வருமானவரித் துறை பெற்றுள்ளது. நவீன தொழில்நுட்பம், திட்ட உள்நோக்கு (Project Insight), சென்றடையும்முறை (Reach Out), 360 டிகிரி நோக்கு (Profile) Operation Clean Money ஆகிய முறைகளில் தகவல் திரட்டல்களை செய்து வருகின்றனர்.

புதிய வரிதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், இருக்கக்கூடிய வரிதாரர்கள் அதிக வரிகள் செலுத்தவும் உண்டான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய டெபாசிட்களுக்கு தகுந்த ஆதாரம் இல்லாதபட்சத்தில் சுமார் 77 சதவிகிதம் வரி மற்றும் அபராதமாக வசூலிக்க வாய்ப்புள்ளது.

மற்றொரு ‘டைம் பாம்’ பினாமி சொத்துச்சட்டம், வருமான வரித்துறையால் நடைமுறைப்படுத்தப்படும் பினாமி சட்டத்தின் கீழே ஏராளமான பினாமி சொத்துகள் கைவசப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது வரிதாரரது விலாசத்தைப் பொறுத்து அதிகாரம் இல்லாதபட்சத்தில் அதிகபட்சமாக 77 சதவிகிதம் வரி மற்றும் அபராதமாக வசூலிக்க வாய்ப்புள்ளது. தற்போது வரிதாரரது விலாசத்தைப் பொறுத்து, அதிகார எல்லை கொண்ட வருமானவரி அதிகாரிகள் வரிக்கணக்குகளை மதிப்பீடு(Assessment) செய்கின்றனர். இந்த முறை மாற்றியமைக்கப்பட்டு இனிவரும் நாட்களில் இந்தியாவில் அறிமுகம் இல்லாத ஊரில் உள்ள அதிகாரியால் வரிமதிப்பீடு செய்யப்படும். உதாரணமாக ஈரோட்டில் உள்ள வரிதாரரின் கணக்குகளை போபாலில் உள்ள வருமானவரி அதிகாரி வரிமதிப்பீடு செய்வார்.

தற்போது கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணத்தைக் கொண்டு நிலம், வீடு, நகைகள் போன்ற சொத்துகளை வாங்குவது மிகக்கடினம் என்கிற உணர்வை பெரும்பாலானோர் பெற்றுள்ளனர். இதனால் வரியாகச் செலுத்தி கணக்கில் காட்டப்பட்ட சொத்தாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தோன்ற ஆரம்பித்துள்ளது. இதன் பிரதிபலிப்புதான் இந்த ஆண்டு வரிதாரர் எண்ணிக்கை அதிகரிப்பு. மேலும் ‘அட்வான்ஸ் டேக்ஸ்’ (முன்வரி) அதிகரிப்பும். இந்த ஆண்டு முன்வரி, ரொக்கமில்லா மின்னணு பரிவர்த்தனைகள் 3 மடங்குக்கு மேல் உயர்ந்திருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மேலும் மின்னணு பரிவர்த்தனைக் கட்டணம் குறைக்கப்படும்பட்சத்தில் இது வெகுவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சவால்கள்

வெளிநாட்டுப் பண ஒழிப்புத் திட்டம், ஜிஎஸ்டி, வருமானம் அறிவிக்கும் திட்டம், ரியல் எஸ்டேட் சட்டம், பினாமி சட்டம், திவால் சட்டம் ( Insolvancy and Bankruptcy Code), தொழிலாளர் ஊதியச் சட்டம், ஆதார் நடைமுறைச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் கடந்த சுமார் 15 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறுகிய கால அவகாசத்தில் இவ்வளவு சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்திருப்பது பொது மக்களை சோர்வடையச் செய்திருக்கிறது. இதில் முக்கியமாக ஜிஎஸ்டி நடைமுறையில் சவால்கள் உள்ளன. ஏற்கெனவே 158 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, இந்தியாவில் 17 ஆண்டுகள் விவாதத்திற்கும், முயற்சிகளுக்குப் பின்னர் அமல் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் அவசியமான சீர்த்திருத்த வரியாகும்.

இருப்பினும் 8 மாதத்திற்குள் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டு முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளும் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘கெளரவம்’ என்கிற திரைப்படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இது ஒரு சரியான ஒப்பீடே இல்லை என்றாலும், புரிந்து கொள்ளும் வசதிக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ‘மோகன்தாஸ்’ கதாபாத்திரம் இரண்டாவதுமுறை செய்யாத தவறுக்கு தண்டனை பெறுவார். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி இரண்டுமே நல்ல சட்டங்கள்.

எந்தவொரு சட்டத்திற்கும் இருக்கும் அறிமுக அசெளகரியங்கள், நெருக்கடிகளை ஏற்கெனவே பணமதிப்பு நீக்கத்தின் மூலம் மக்கள் சந்தித்து விட்டதால், ஜிஎஸ்டி சட்டத்தின் நடைமுறை அசெளகரியங்களை ஏற்க தயக்கம் காட்டுகின்றனர். சுலபமாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முன்னேறிய இந்தியா, தற்போதைய சவால்களையும் சமாளித்து எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை கூடிய விரைவில் அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

-karthikeyan.auditor@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்