பெரு நிறுவனங்கள் வேலை அளிக்கிறதா...?

By நீரை மகேந்திரன்

சி

றியதே அழகு என்கிறார் பிரிட்டன் பொருளாதார ஆசிரியர் இ.எப் ஷூமேக்கர் (E. F. Schumacher). உலகின் சிறந்த நூறு புத்தகங்களில் இப்போதும் இது இடம் பெற்றுள்ளது. இவரது கோட்பாடுகளில் மிக முக்கியமான ஒன்று, சிறு சிறு விஷயங்களில் செலுத்தப்படும் கவனம்தான் பெரிய முன்னேற்றங்களுக்கு அடிப்படையாக உள்ளது என்கிறார். இது எதற்கு பொருந்துகிறதோ.. இல்லையோ இன்றைய சூழ்நிலையில் வேலை வாய்ப்பு சந்தைக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.

இப்போதைய சந்தை பொருளாதார உலகில் பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்களே மக்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன என்கின்றன வேலைவாய்ப்பு சார்ந்த ஆய்வு அறிக்கைகள். உலகம் முழுவதும் இதுதான் நிலைமை என்றாலும் இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த பத்து ஆண்டுகளில் பெரு நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை ஒப்பிடுகிறபோது அதற்கேற்ற வேலைவாய்ப்பு உருவாகவில்லை. ஆனால் சிறு நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளால் ஒப்பீட்டளவில் பெருவாரியான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்கிறது சந்தை ஆய்வு நிறுவனமான சிஎல்எஸ்ஏ.

ஆனால் பெரு நிறுவனங்களின் வேலை வாய்ப்போ கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெற்று வருபவர்களில் 5 சதவீதத்தினருக்கே பெரு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதர 95 % பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் எஸ்எம்இ துறை என்கிற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கைகளில்தான் உள்ளன.

இந்தியாவில் பெரு நிறுவனங்களை விட சிறு நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்பை அதிக அளவில் பூர்த்தி செய்கின்றன என்கிறது சிஎல்எஸ்ஏ. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் பெரு நிறுவனங்கள் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுச் செலவுகளை செய்துள்ளன. அதாவது தங்களது விரிவாக்கத்துக்கு செலவிட்டுள்ளன. அனால் அதன் மூலம் உருவான வேலைவாய்ப்புகளோ சில ஆயிரங்கள்தான். குறிப்பாக முக்கிய பத்து நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை கணக்கில் எடுத்தால் மிக சொற்பமாகவே இருக்கிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் மிக முக்கிய பெரு நிறுவனங்களான எல் அண்ட் டி, பிஹெச்இஎல், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி சராசரி 8.6 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ள வேலைவாய்ப்பு ஆண்டு வளர்ச்சி விகித சராசரி 0.5 சதவீதம்தான்.

ஆனால் சிறு உற்பத்தியாளர்களும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும், முறைசாரா தொழில்துறையினரும் சேர்ந்து இந்தியாவில் புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர நிறுவனங்களான அமர ராஜா பேட்டரீஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஜான்சன் கண்ட்ரோல், நீல்கமல், செஞ்சுரி ப்ளை, ஸ்ரீ சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் வேலைவாய்ப்பு 11 சதவீதம் முதல் 23 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு அடிப்படையில், இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் மேற்கொண்டுள்ள முதலீடு ரூ.15,000 கோடிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சுமார் 916 நிறுவனங்கள் 2017-ம் நிதியாண்டில் தங்களது பணியாளர் திறன் குறித்த அறிக்கையை பங்குச் சந்தைக்கு அளித்துள்ளன. அதில் இந்த நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 52 லட்சம் பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன. இவர்களின் ஆண்டு சம்பள விகிதம் சராசரியாக 10 லட்ச ரூபாயாக உள்ளது. 2017 மார்ச் இறுதி நிலவரப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 3.7 சதவீதம்தான். முக்கியமாக பிஎஸ்இ 500 நிறுவனங்களில் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மனித வளம் 2.88 சதவீதம்தான் என்கிறது அந்த அறிக்கை.

ஆனால் இதைவிடவும் அதிகமான வேலைவாய்ப்புகளை சிறு நிறுவனங்கள் உருவாக்குகின்றன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இயந்திரங்களின் தேவைக்கேற்ப அவற்றை இயக்குவதற்கு மனித வளம் தேவையாக உள்ளது. இந்த நிறுவனங்கள் அவர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் போது அவற்றை நிர்வகிக்க வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டி உள்ளது. இதனால் இந்த நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. ஆனால் பெரு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது இயந்திரமயமாக்கல்.

பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்தி திறனை மேம்படுத்துகையில் தங்களது தொழில்நுட்பங்களையும் மேம்படுத்துகின்றன. இதனால் கூடுதலான மனித உழைப்பு அவசியமற்றதாகிறது. தவிர பெரு நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை நேரடியாக உருவாக்குவதைவிட அவற்றை வெளிப்பணி ஒப்படைப்பு அடிப்படை யில் அளிக்கின்றன என்கிறது ரிலையன்ஸ் வேலைவாய்ப்பு அறிக்கை.

புதிய முதலீடுகள்

பெரு நிறுவனங்களின் 3.7 சதவீதம் வேலைவாய்ப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 50 கோடி மக்கள் வேலைவாய்ப்பு கொண்டவர்களாக உள்ளனர். இதில் 22 கோடி மக்கள் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தையில் 1 கோடி பேர் உள்ளனர். தொழில் துறையை சார்ந்த 28 கோடி நபர்களோடு ஒப்பிடுகையில் இது 3.6 சதவீதம்தான் என்கிறது அந்த அறிக்கை.

அதேநேரத்தில் தொலைத்தொடர்பு துறை, வங்கித் துறை இணைப்புகளால் மிகப் பெரிய அளவில் வேலை இழப்பு உருவாகும் என்கிற அச்சமும் எழுந்துள்ளது. இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முன்னணி 5 துறைகளில் தொலைத் தொடர்பு துறையும் ஒன்று. ஆனால் இந்த துறையின் கடன் அதிகரிக்க அதிகரிக்க வேலை இழப்பும் அதிகரித்துள்ளது. சுமார் 1.5 லட்சம் நேரடி மறைமுக வேலை இழப்புகள் சமீப ஆண்டுகளில் உருவாகியுள்ளது. மற்றொரு முக்கிய துறையான வங்கித் துறையிலும் இந்த நிலைமை எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், அதிகரித்து வரும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும், சிறு வங்கிகளால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

அரசின் முயற்சிகள்

பெரு நிறுவனங்கள் மற்றும் சிறு நகரங்களில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மையை சரி செய்ய அரசு பல்வேறு வகைகளில் முதலீடுகளை மேற்கொள்கிறது. நகர்ப்புற அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று வேலை வாய்ப்பு அதிகரிப்பு என்கிறது அரசின் இணையதளம். குறிப்பாக கட்டுமானத் துறையில் உருவாகியுள்ள வேலை வாய்ப்பு மந்த நிலையால் 2.5 கோடி பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இவற்றின் மூலம் பல துறைகளிலும் நிலவும் வேலை வாய்ப்பு மந்த நிலையை சரி செய்ய முடியும் என அரசு நம்புகிறது.

சிறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அதேவேளையில், 84 சதவீத சிறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியுடனும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. சிறு நிறுவனங்களில் தங்களின் திறன் தனியாக மதிப்பிடப்படுவதால் பணியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இதன் மூலம் புதிய எண்ணங்கள் முயற்சிகள் நிறுவனத்துக்கு கிடைக்கிறது. ஊழியர்களுக்கு தங்கள் உழைப்பிற்கான பலன் உடனடியாக சிறு நிறுவனங்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் பெரு நிறுவனங்களின் அனுபவம் இவர்களுக்கு கிடைக்காமல் போகிறது என்கின்றன ஆய்வுகள். உண்மைதான் பெரு நிறுவனங்களில் வேலை கிடைத்தால்தானே அனுபவம் கிடைப்பதற்கு?

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்