பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வங்கியில் வடமாநிலம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றிய பொழுது, வேறொரு வங்கியில் ஓரு தொழிற்சங்கத் தலைவரும் பணிபுரிந்தார். அவர் தாட்பூட்டென்று எப்பவுமே சத்தமாகத்தான் பேசுவார். ஆனால் தன் வேலையில் எந்தக் குறையும் வைக்க மாட்டார். அந்தச் சமயத்தில் அதே கிளையில் ஒரு பணியாளர். சுமார் 20 ஆண்டுகளாக கிளார்க்காகவே இருப்பவர்.
ஒல்லியாய் பஞ்சத்தில் அடிபட்டவர் மாதிரி இருப்பார்.மனுஷன் சிரிக்கவே மாட்டார்.எதிலும் எல்லோரிடத்திலும் ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார்.குமார் என்று அழைக்கணுமா?சரி, உங்கள் ஆசைப்படியே செய்வோம்!
குமார் அடிக்கடி சொல்லும் `அறிவுரை' இது தான்!' உங்களுக்கு இந்த நிர்வாகத்தைப் பற்றித்தெரியாது. கொஞ்சம் ஏமாந்தாலும் தலைமேல் உட்கார்ந்து விடுவார்கள். அவர்கள் உதவியாக நடந்து கொண்டாலும் ஏமாந்து விடாதீர்கள். நிச்சயம் அதில் உள்நோக்கம் இருக்கும். இளநிலை அதிகாரி முதல் உயர்நிலை அதிகாரி வரை எல்லோருமே ஒரே மாதிரி தான், நமக்கு நிரந்தர எதிரிகள் தான் ' என்பார்!
`சில சமயம் சிலரைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது தவறல்ல. ஆனால், யாரையுமே எப்பவுமே நம்பாமல், எதுவுமே செய்யாமல் இருப்பது அம்மனிதனின் குறைபாடு என்றே சொல்ல வேண்டும்' என்கிறார் சீனச் சிந்தனையாளர் லூ சென்! சரி, தொழிலாளர்களைக் காப்பாற்றுகிறவர் மாதிரி பேசும் இந்தக் குமார், மற்றப் பணியாளர்களுக்கு என்ன உதவிகள் செய்தார் எனக் கேட்கிறீர்களா?
`சேமிப்புக் கணக்கு பாலன்ஸ் ஆகவில்லை, உதவ முடியுமா? ' எனக் கேட்ட புது கிளார்க்கிடம் அவர் சொல்லியது, `நானெல்லாம் நிறைய வேலை பார்த்து விட்டேன். இனிமேல் உங்கள் முறைதான். முடியலையென்றால், அந்த அதிகாரிகளிடம் வேலையைத்தள்ளிவிட்டு வீட்டிற்குப் போங்கள் `அவருக்குப் பிடித்த ஒரே வசனம் 'சீனியர் கிளார்க்குகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
`அதாவது அவர் சும்மாவே உட்கார்ந்து கொண்டு, எல்லாத்துக்கும் நாட்டாமை மட்டும் பண்ணுவாராம்!' அது சரியில்லை, இது சரியில்லை எனக்குறை கூறுவது, குற்றம் கண்டு பிடிப்பது, வீண்பேச்சு பேசுவது முதலானவை நமது மகிழ்ச்சியைத் தட்டிப் பறிப்பவை. அக்குணங்கள் உடையவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் ' என்கிறார் ஜாய்ஸ் மேயர்!
அப்ப அந்தக் குமாரை ஓரம் கட்ட வேண்டியது தானே என்கிறீர்களா? அது தானேங்க பிரச்சினையே? ஐயா, தொழிலாளர் உரிமைக்காகப் போராடும் நல்ல தலைவர்களுக்கும் கூட, ' ஜிந்தாபாத் முர்தாபாத் 'கோஷம் போட ஆட்கள் தேவைப்படுவார்கள். ஆனால், வேலை தெரிந்த பணியாளர்கள் பதவி உயர்வு பெற நினைப்பார்களே தவிர தலைவர்களுடன் நேரம் செலவிடமாட்டார்கள்! எனவே குமார் போன்றவர்கள் அவர்களிடம் வந்து ஒட்டிக் கொள்ளும் பொழுது தட்ட மாட்டார்கள்! உண்மை என்னவென்றால், இதனால், திருத்தப்பட்டிருக்க வேண்டிய, ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய, குமார் சகித்துக் கொள்ளப்பட்டிருந்தார்!
கிளையில் மற்ற எல்லோருமே, தொழிற்சங்கத் தலைவர் உட்பட வங்கியின் நலத்திற்குப் பாடுபட்ட பொழுது, குமார் ஒருவர் மட்டுமே எப்போது கெட்டது நடக்கும் என காத்துக் கிடந்தார்! ஒரு நாள் 20 நிமிடங்கள் தாமதமாக வந்த குமாரை மேலாளர் அனுமதிக்க மறுத்தார். உடனே அதைப் பொறுத்துக்க முடியாத குமார், ' தாமதமாக வரும் பெண்களை மட்டும் பலமுறை அனுமதித்து உள்ளீர்களே? ' எனச் சண்டைக்குக் கிளம்பி விட்டார்! மேலாளரோ கோபமுற்று,' நீயும் பொம்பளையா என்ன? ' எனக்கேட்டு விட்டார்!
அவ்வளவு தான்!குமாருக்குப் பொத்துக் கொண்டு வந்தது கோபம்! ஆகாயத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தார்.மற்ற கிளைகளிலிருந்து தன் சகாக்களை வற்புறுத்தி வரவழைத்தார். தொழிற்சங்கத் தலைவரும் வேண்டா வெறுப்பாய்க் குமார் பக்கம் சாய வேண்டியதாயிற்று.
போராட்டமோ நாளுக்குநாள் வலுத்தது! அப்புறம் என்ன? ஒரு சாதாரண விஷயம் பூதாகரமாகி விட்டது. கைகலப்புக் கூட நடந்தது!மொத்தத்தில் இரண்டு மாதங்கள் வீணாயின. வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.வர்த்தகம் பாழாகியது! தொடக்க காலத்திலேயே திருத்தப்படாத, வெளியே அனுப்பப்படாத குமாரினால் பின்னால் சொல்லொன்னாத பாதிப்புகள்! உண்மை என்னவென்றால், அந்நிகழ்வுக்குப் பின்னால் தொழிற்சங்கத் தலைவரின் செல்வாக்கும் குறைந்தது! தவ றான ஆட்களுக்கு அளவுக்கு மீறி ஆத ரவு கொடுப்பதை மற்ற ஊழியர்களும் ஏற்கவில்லை!அண்ணே,பல இடங்ககளில் இதே கதை தான்! தவறான போக்குடைய பணியாளர்களை, நிர்வாகமும் சரி, தொழிற்சங்கங்களும் சரி கண்டு கொள்வதில்லை. `அவன் கிடக்கிறான் தனி ஆள் ' என நினைப்பார்கள்.
ஆனால் வாய்ப்புக் கிடைத்து விட்டால், அத்தகைய புல்லுருவிகள் களேபரம் செய்து விடுவார்கள்! `பட்ட மரம் ஒன்று தீப்பற்றினால் பசுமையான மரங்களடங்கிய காடே அழிந்து விடும்.அது போல, ஒரு தறிகெட்ட மகனிருந்தால் போதும், அக்குடும்பத்தையே அழித்து விடுவான் ' எனும் சாணக்கியர் கூற்று, இக்கால வணிக நிறுவனங்களின் குமார்களுக்கும் பொருந்துகிறதல்லவா?
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago