அமெரிக்காவில் தற்பொழுது எத்தனை இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் இருக்கிறார்கள் தெரியுமா? சுமார் 30 லட்சமுங்க! தேவேஷ் கபூர் மற்றும் இருவர் எழுதிய `The other one percent ' எனும் புத்தகத்தில் அமெரிக்காவில் குடியேறிய நம்மவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது. அங்கு பலநாட்டைச் சேர்ந்தவர்கள் புலம் பெயர்ந்திருந்தாலும், அவர்களுள் அதிகப் பணக்காரர்கள் இந்தியர்கள் தானாம்! அதிகம் படித்தவர்களும் இந்தியர்கள் தானாம்!
சரி, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் எவ்வளவு பேர் தெரியுமா? சுமார் 4.7லட்சமாம்! இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் என்று உலகமெங்கும் நம்ம மென்பொறியாளர்கள், நிதித்துறை வல்லுனர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் கொடி கட்டிப் பறக்கிறாங்க!
அண்ணே, இவ்வளவு பேர் திரைகடலோடி திரவியம் தேட முடிந்தது எப்படி? ஒரு நாளைக்கு , ஆமாம் ஒரு நாளுக்கே சுமார் 3.52 கோடி ரூபாய் ஊதியங்களாகப் பெறும் கூகுளின் சுந்தர் பிச்சை முதல் மாஸ்டர் கார்டின் அஜய் பாங்கா எனப் பலரும் தத்தம் நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளாகப் பரிமளிக்க முடிந்தது எப்படி? இதற்கெல்லாம் அவர்கள் படித்த படிப்புத் தானேங்க காரணம்?இது நமது ஐஐடி, ஐஐஎம் போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களால் தானே சாத்தியமாயிற்று?
நல்ல கல்வி பலரைக் கரை சேர்ப்பதை நாம் அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! வெளிநாட்டு வேலைக்கு மட்டுமில்லைங்க. எங்கும் எதிலும் சிறந்து விளங்கப் படிப்பு உதவும்!
`படிச்சவன் இப்படி நடந்துக்கலாமா?’ எனும் வசனத்தை அடிக்கடி கேட்டு இருக்கிறோம். அதாவது படித்தவனிடம் ஒரு பண்பாடு, ஒழுங்கான நடைமுறை இருக்கும் எனும் எதிர்பார்ப்பு பொதுவாக எல்லோரிடமும் காணப்படுவது. `கல்வியறிவு இல்லாதவர்களிடையே கற்றவன் இருப்பது பிணங்களிடையே உயிருள்ளவன் இருப்பது போல’ எனக் கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் சொல்வது சரிதானே?
ஐயா, படிப்பின் அடிப்படை நோக்கம் என்ன? (a+b)2 தெரிந்து கொள்வதா? நல்ல கல்வியென்றால் நல்ல குணத்தை, வாழ்க்கையைப் பற்றிய சரியான பார்வையையும் அளிக்க வேண்டுமல்லவா? `உங்கள் பள்ளிப்படிப்பு நீங்கள் கற்றுக்கொள்வதற்கு இடையூறாக ஆகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என மார்க் ட்வைன் சொன்னது பொருள் பொதிந்தது!
பின்னே என்னங்க? பட்டங்கள் வாங்குவது வேறு, இனிய வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பண்புகளைப் பெறுவது வேறு அல்லவா?வெறும் வயிற்றுக் கல்வி வாழ்க்கைக் கல்வி ஆகாதே!
`ஒருவரின் குணத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர் மழை நாளை எப்படி செலவிடுகிறார் , தனது சாமான்கள் தொலைந்து போனால் என்ன செய்கிறார், சிக்கலாகிப் போன கிறிஸ்துமஸ் மரத்தை எப்படி சரி செய்கிறார் என்பதை வைத்துச் சொல்லி விடலாம்’ என்கிறார் கவிஞர் மாயோ ஆஞ்சலோ! என்னங்க ,சரி தானே?
இந்தப் படிச்சவங்களை, பண்புள்ளவங்களை யார் தானுங்க விரும்ப மாட்டாங்க? இரண்டாயிரம் ஆண்டுகளாக ஐயன் திருவள்ளுவரை ஏன் கொண்டாடுகிறோம்? கம்பனைப் போல இளங்கோவைப் போல உண்டான்னு பாரதியார் மாதிரி நாமெல்லோருமே ஏன் மார் தட்டுகிறோம்? அவர்கள் எழுதிய தமிழின் அழகுக்காகத் தானே?வால்மீகியின், காளிதாசரின் கதாபாத்திரங்களில், கற்பனையில், உவமான உவமேயங்களில் சொக்காதோர் உண்டா?
எங்கோ வெகு தூரத்தில் எப்பவோ பிறந்த ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் நாம் இங்கே கொண்டாட என்னங்க காரணம்? எல்லாம் அவர்களின் கருத்தாழமிக்க கவிதைகளில், சொல்லாடலில் மயங்கித் தானே? அதே போல இந்த வித்தை தெரிந்த கலைஞர்களையும் நாம எல்லோரும் மதிக்கிறோம், மரியாதை காட்டுகிறோமில்லையா? கண்ணதாசனை, வாலியை, வைரமுத்துவை பேர் சொன்னாலேயே பிடிக்குதுல்ல? ஓவியர் கோபுலுவை, கணபதி ஸ்தபதியை, இசைக்குயில் எம் எஸ்ஸை, நடிகர் திலகத்தை, மக்கள் திலகத்தை நினைச்சாலே இனிக்குதில்ல?
ஐயா,ஒருவரது நிறம், அழகு போன்றவை அவரது பிறப்பினால் வருபவை. எவ்வளவு கிடைத்ததோ அவ்வளவு தான்! என்ன, நிறைய முயன்றால் கொஞ்சம் கூட்டலாம், மாற்றலாம்! மற்றபடி இயற்கையில் அமைந்தது, அமைந்தது தான்! ஆனால் கல்வியறிவை ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும்,எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரித்துக் கொண்டே போகலாமல்லவா?
இந்த இளமை இருக்கிறதே அதுவும் இருக்கும் வரைதான்! நம்மில் பலர் இதை கடந்து வந்துவிட்டோம். சிலர் இதைத் தற்பொழுது அனுபவித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் எவ்வளவு நாட்களுக்கு? விரைவில் முதுமை வந்து விடாதா? ஒருவர் அழகிற்காக, இளமைக்காகப் பாராட்டப்படுவது கொஞ்ச நாட்களுக்குத் தானே? ஆனால் புத்திக் கூர்மைக்காக, பேச்சு அல்லது எழுத்துத் திறமைக்காக மதிக்கப்படுபவர்கள் மக்கள் மனதில் மறவா வரம் பெற்றவர்கள்!
`கல்வி தான் ஒருவருக்கு உற்ற நண்பன். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அழகு, இளமை என்பதெல்லாம் அதற்கு அப்புறம் தான்’ எனும் சாணக்கியர் கூற்று சிந்தித்துச் செயல்படுத்திப் பலன் பெற வேண்டியது!
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
27 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago