எல்லோரும் தலைவராக முடியுமா...?

By எஸ்.ரவீந்திரன்

பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பற்றிய ஒரு ஜோக் பிரபலம். புத்தம் புதிய ஸ்கோடா காரில் வந்திறங்கிய நிறுவனத்தின் மேலாளரிடம், `சார் வேலைக்கு சேர்ந்த போது, மாருதி 800 கார் தான் வைச்சிருந்தீங்க. இப்போ 3 வருஷத்துல ஸ்கோடா கார் வாங்கிட்டீங்க... சூப்பர் சார்...' என அவரிடம் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர்கள் 2 பேர் புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதற்கு அந்த மேனேஜர், `இதென்ன பிரமாதம், கடந்த 3 வருஷமா நீங்க எப்படி கஷ்டப்பட்டு உழைச்சீங்களோ.. அதே மாதிரி இன்னும் 2 வருஷம் உழைக்கணும்... அப்படி உழைச்சீங்கனா, நான் பிஎம்டபிள்யூ வாங்கிருவேன்...' என மகிழ்ச்சியோடு சொல்ல அதிர்ச்சியில் ஊழியர்கள் சிலையாகி நிற்பார்கள்.

இப்படித்தான் இருக்கிறது கார்ப்பரேட் உலகம். ஆனால் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாத்து சிறந்த தலைவராக உயர்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் நெக்ஸ்ட் ஜம்ப் நிறுவனத்தின் தலைவர் சார்லி கிம். இன்னொருவர் பாரி-வெமில்லர் நிறுவனத்தின் தலைவர் பாப் சாப்மேன். இவர்களைப் பற்றி கார்ப்பரேட் குரு என அழைக்கப்படும் சைமன் சினக் என்பவர் பேசியிருந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது. தலைமைப் பண்பு பற்றி புத்தகங்கள் எழுதியுள்ள இவரை, பல நிறுவனங்கள் அழைத்து தங்கள் ஊழியர்கள் மத்தியில் உரை நிகழ்த்த சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு உரையில் இருந்து...

ஒருவரை வேலைக்குச் சேர்த்துவிட்டால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவரை வேலையை விட்டு அனுப்பக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர் சார்லி கிம். அவருடைய நிறுவனம்தான் நெக்ஸ்ட் ஜம்ப். நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம். பிரச்சினை ஏற்படும்போது ஊழியர்களுக்கு தேவைப்படும் பயிற்சியை அளித்து வேறு துறைக்கு மாற்றியாவது பயன்படுத்திக் கொள்வார்கள். இதுவரை எந்தக் கஷ்டத்திலும் யாரையும் வேலையை விட்டு அனுப்பியதில்லை.

``நிறுவனம் என்பது ஒரு குடும்பம் மாதிரி. குடும்பத்தில் கஷ்டம் என்பதற்காக ஒரு பிள்ளையை வீட்டை விட்டு அனுப்புவோமா? அப்படி செய்ய மாட்டோம் அல்லவா? அப்படி இருக்கும்போது, நிறுவனத்துக்கு கஷ்டம் வந்தால் மட்டும் எப்படி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியும்?

``பொருளாதார தேக்கநிலை என வந்துவிட்டால் உடனே என்ன நடக்கிறது? போர்டு மீட்டிங் நடக்கும். ஆட்குறைப்புக்கு ஐடியா கொடுப்பார்கள் உயர் அதிகாரிகள். அப்போது தான் நிறுவனம் தலை நிமிரும் என்பார்கள். தங்களின் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள, கீழ் நிலையில் உள்ள ஊழியர்களை பலி கொடுக்கும் நிலைமைதான் பல நிறுவனங்களில் இன்னமும் இருக்கிறது. இது என்ன நியாயம்.? சிறந்த தலைவர்கள் எந்த நிலையிலும் தங்கள் ஊழியர்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்' என்பார் சார்லி.

பாரி-வெமில்லர் நிறுவனத்தின் தலைவர் பாப் சாப்மேன். 7,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட உற்பத்தி நிறுவனம் அது. 2008-ல் கடுமையான பொருளாதார தேக்கநிலையால் பாதிக்கப்பட்டது. ஒரே நாள் இரவில் 30 சதவீத ஆர்டர்கள் கேன்சலாகி விட்டன. இந்த ஆர்டரை நம்பி ஏகப்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தியிருந்தது நிறுவனம். ஒரு கோடி டாலர் இருந்தால்தான் கம்பெனியை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலை. அத்தனை ஊழியர்களுக்கும் சம்பளமும் கொடுக்க முடியாது. என்ன செய்யலாம் என யோசிக்க நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. பாதி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி விடலாம் என யோசனை சொன்னார்கள் அதிகாரிகள் அனைவரும். அதில் பாப் சாப்மேனுக்கு உடன்பாடில்லை.

`நிறுவனத்துக்கு ஒரு கஷ்டம் வந்தால் அதை எல்லோரும்தான் அனுபவிக்க வேண்டும். சிலரை மட்டும் வேலையை விட்டு அனுப்பிவிட்டு அதிக கஷ்டம் அனுபவிக்கச் சொல்வது சரியாகாது. வாட்ச்மேன் முதல் தலைமைச் செயல் அதிகாரி வரை எல்லோருமே கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டும். அனைவரும் 4 வாரங்கள் சம்பளம் இல்லாத விடுமுறை எடுத்துக் கொள்வோம். இந்த விடுமுறையை தொடர்ந்தும் எடுக்கலாம். விட்டு விட்டும் எடுக்கலாம். அதன்பிறகு நிலைமை சரியாகும் என எதிர்பார்ப்போம். யாருக்கும் வேலை போகாது' என அறிவித்தார் பாப்.

பாப்பின் இந்த அறிவிப்பால், ஊழியர்கள் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை அதிகரித்தது. மதிப்பு அதிகரித்தது. வேலை உறுதி என்ற நம்பிக்கை பிறந்ததால், பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் தன்மை அதிகரித்தது. சம்பளம் இல்லாமல் ஓரளவுக்கு தாக்குப் பிடிக்க முடியும் என நினைத்த உயர் அதிகாரிகள், அதிக விடுமுறை எடுத்துக் கொண்டார்கள். தங்களுக்குள் விட்டுக் கொடுத்து சிலர் 5 வாரங்கள் வரையும் சிலர் 3 வாரங்கள் மட்டும் விடுமுறை எடுத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு ஒத்துழைப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் யாருக்கும் அதிகம் பாதிப்பில்லாமல் போனது.

இதற்கிடையில், பொருளாதார தேக்கநிலை மாறியது. ஆர்டர்கள் மீண்டும் குவியத் தொடங்கின. ஒரு கோடி டாலர் சேமிக்க நிறுவனம் நினைத்தது. ஆனால் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் 2 கோடி டாலர் வரை சேமிக்க முடிந்தது. ஊழியர்களையும் குடும்பமாக நினைத்ததால், ஒரு நிறுவனம் நற்பெயரோடு மீண்டும் தலைதூக்க முடிந்தது. அடுத்தடுத்த கால கட்டங்களிலும் ஊழியர்கள் விசுவாசத்தோடு உழைத்ததால், நிறுவனம் மென்மேலும் வளர்ந்தது.

பெரிய நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பலர், ஒரு சிறந்த தலைவனுக்குரிய பண்போடு இருப்பதில்லை. அவர்கள் தங்களின் கீழ் இருப்பவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளாகத்தான் இருக்க விரும்புகிறார்கள். இப்படி இருப்பவர்களை பின்பற்ற யாரும் விரும்புவதில்லை.

அமெரிக்க கடற்படை வீரர்களிடையே ஒரு பழக்கம் இருக்கிறது. படையின் கேப்டன் முதலில் சாப்பிட மாட்டார். தன்னுடைய வீரர்களைத்தான் முதலில் சாப்பிடச் சொல்வார். பல நேரங்களில் அத்தனை வீரர்களும் சாப்பிட்ட பிறகு, இவருக்கு உணவில்லாமல் கூட போகும். ஆனால், சாப்பிடும் வீரர்கள், தங்களிடம் உள்ள உணவை கேப்டனுக்குக் கொடுத்து சாப்பிட வைப்பார்கள்.

இப்படிப்பட்ட கேப்டன்கள்தான் உண்மையான தலைவர்கள். தன் வீரர்களுக்காக தான் சாப்பிடாமல் தியாகம் செய்பவன்தான் தலைவன். அவர்களின் நலனைக் காப்பவன்தான் தலைவன். இப்படிப்பட்ட தலைவனுக்காக தியாகம் செய்ய ஊழியர்களும் தயாராக இருப்பார்கள்.

அவர்களிடம் யாராவது ஏன் இப்படி ரத்தம் சிந்தி உழைக்கிறாய் எனக் கேட்டால், அவர்கள் சொல்வார்கள். எங்களுக்காக நிறுவனத்தின் தலைவரும் உயர் அதிகாரிகளும் ரத்தம் சிந்தினார்கள்.. தியாகம் செய்தார்கள். பதிலுக்கு நாங்களும் செய்கிறோம் என்பார்கள். இப்படிப்பட்ட தலைவர்களும், ஊழியர்களும் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்ய யாருக்குத்தான் ஆசை இருக்காது? என தனது உரையை முடிக்கிறார் சைமன் சினக்.

- எஸ்.ரவீந்திரன்,

ravindaran.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்