ப
க்கம் பக்கமாக எழுதிய பின்னரும், பணமதிப்பு நீக்கத்தின் விளைவுகள் குறித்து புதிது புதிதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. கறுப்பு பணம் ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு என்கிற இலக்குகள் தோல்வி என்று தெரிந்த பின்னர் புதிய காரணங்களைச் சொல்லி வருகிறார் நிதியமைச்சர் அருண்ஜேட்லி. பணமதிப்பு நீக்கத்தின் விளைவுகள் அரசு எதிர்பார்த்த திசையில் இல்லையே என்கிற கேள்விக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்பாடுகளை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கை என்று பதில் சொல்லி இருக்கிறார் அருண் ஜேட்லி.
இந்த பதிலை சரி என்று ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இந்தியா முழுமைக்குமான தங்கு தடையற்ற மின்சார விநியோகம், அதிவேக இணைய சேவை, அனைத்து மக்களிடமும் ஸ்மார்ட்போன், அனைத்து வர்த்தகர்களிடமும் ஸ்வைப்பிங் இயந்திரம் என டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக ஒன்றுக்கொன்று தொடர்புடைய கட்டமைப்புகள் எல்லாம் குறிப்பிட்ட தேதியில் மிகச் சரியாக இருந்திருக்க வேண்டும்.
அல்லது இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்ட அமைப்புக்குள் இருக்க வேண்டும். ஆனால் இது இரண்டுமே முழுமையாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால், அரசு நிறுவனங்களும் அந்த சந்தையில் செயல்பட வேண்டும். அந்த நடவடிக்கைகளும் இல்லை. அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளை பயன்படுத்தி லாபம் கண்டது பேடிஎம் போன்ற தனியார் செயலி நிறுவனங்கள்தான்.
பணமதிப்பு நீக்க ஆரம்ப 12 நாட்களில் மட்டும் பேடிஎம் செயலி தினசரி 70 லட்சம் பரிவர்த்தனைகள் செய்தது. இரண்டு வாரங்களில் மட்டும் 17 கோடி மக்கள் பேடிஎம் பயன்படுத்தினர். பேடிஎம் கணக்குகளில் 1000 மடங்கு பணம் வந்தது. இதனால் அரசுக்கும் மக்களுக்குமான இழப்புகளோ பல ஆயிரம் கோடிகளாக உள்ளது.
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்துக்கு ஈடாக புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க அரசு ரூ.21,000 கோடி செலவு செய்துள்ளது. ஆனால் கணக்கில் வராத கறுப்பு பணத்தின் மதிப்போ ரூ.16,000 கோடிதான். சமீபத்தில் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள்படி பணமதிப்பு நீக்கத்தால் ரிசர்வ் வங்கிக்கான வருவாயும் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூன் 30 நிலவரப்படி முதல் காலாண்டுக்கான வருவாயில் 23.56 சதவீதம் குறைந்துள்ளது. டெபாசிட் செய்யப்பட்ட பணமதிப்பு நீக்க நோட்டுகளுக்கு ரூ.17,426 கோடி வட்டி அளித்துள்ளது. கடந்த ஆண்டில் பணத்தை கையாண்ட வகையில் ரூ.506 கோடி வட்டி ஈட்டியிருந்தது. அதேபோல மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் டிவிடெண்ட் தொகையும் பாதியாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியிடமிருந்து கடந்த ஆண்டில் ரூ. 65,880 கோடி கிடைத்த டிவிடெண்ட் தொகை இந்த ஆண்டில் ரூ. 30,663 கோடியாகக் குறைந்துள்ளது.
இதுதவிர பணமதிப்பு நீக்கத்தால் வங்கி துறைக்கு ரூ.3,800 கோடி நஷ்டம் என எஸ்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக பணமதிப்பு காலத்தில் வங்கி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தேக்கம், டிஜிட்டல் பரிமாற்றத்துக்குத் தேவையான ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வழங்கியது, குறைவான கார்டு பயன்பாடு, சீரற்ற தொலைத்தொடர்பு போன்றவற்றால் வங்கிகள் எதிர்பார்த்த பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை. இதனால் வங்கித்துறை இழப்பை சந்தித்துள்ளது.
சரி டிஜிட்டல் பரிவர்த்தனைதான் அரசின் நோக்கம் என்றால் அதிலும் இலக்கு எட்டப்பட்டதா என்றால், தோல்விதான் என்கின்றன புள்ளிவிவரங்கள். பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னர் அக்டோபர் மாதத்தில் ஏடிஎம் இயந்திரங்களிலிருந்து ரூ.2,54,781 கோடி எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இதே அளவுக்கு பணம் எடுப்பது திரும்பவும் வந்துவிட்டது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 2,26,842 கோடி ரொக்கம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ. 3.300 கோடியாக செயலி பயன்பாடு இருந்தது. ஜனவரி மாதத்தில் ரூ.8,353 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் ஜூலை மாதத்தில் ரூ. 6,934 கோடியாக குறைந்துள்ளது.
செயலியை மக்கள் பயன்படுத்தியதற்குக் காரணம் தவிர்க்க முடியாத அழுத்தங்கள்தானே தவிர, மக்கள் மனபூர்வமாக ஏற்றுக் கொண்டதினால் அல்ல என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். கையிருப்பாக இருந்த பணத்தை வங்கியில் செலுத்தி, திரும்ப வங்கியிலிருந்து எடுக்க முடியாத காரணத்தால் மின்னணு பரிவர்த்தனைகளை மக்கள் மேற்கொண்டனர். பண விநியோகம் சீரானதும் திரும்பவும் தங்களது நடவடிக்கைகளை ரொக்கத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.
இந்தியா போன்ற நாட்டில் ஒரே நாளில் மக்களை மின்னணு வர்த்தகத்துக்கு மாற்றிவிட முடியும் என்பது கற்பனையிலும் நிகழ்த்த முடியாது. இங்கு வங்கி நடவடிக்கைகளுக்கு வெளியே அதே அளவிலான வர்த்தகம் வங்கி சாரா நிதி நடவடிக்கைகளிலும் உள்ளன.
தினசரி வர்த்தகத்துக்கும் வாழ்க்கை தேவைகளுக்கும் ரொக்கப்பணம் தேவையாக உள்ளது. ஒரு வர்த்தகர் அவரளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தாலும், அவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் அல்லது சிறு வர்த்தகர்களுக்கு ரொக்க நடவடிக்கை வாய்ப்புகளை வழங்கினால்தான் நீடிக்க முடியும். குறைந்தபட்சம் 50க்கு 50 சதவீதமாவது ரொக்க நடவடிக்கை இருந்தால்தான் நீடிக்க முடியும். இந்திய வீடுகளில் ரொக்க கையிருப்பு இல்லையெனில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. சிறு வணிக சந்தையின் உயிர்நாடி ரொக்க நடவடிக்கைகள்தான். இதற்கு அடிப்படையான காரணம் ரொக்க பணத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான். செலவு செய்வதற்கான சுதந்திரத்தை ரொக்கப் பணம் அளிக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அந்த நம்பிக்கை உருவாவதில்லை.
இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் கிராமம் என புகழப்பட்ட மஹாராஷ்டிராவின் தாசாய் கிராமம்கூட திரும்பவும் பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டது. அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்தது.ஆனால் கட்டமைப்புகளை தொடரமுடியவில்லை. எல்லா நேரத்திலும் தொலைத் தொடர்பு கிடைப்பதில்லை. மின்சாரம் இல்லை என்கின்றனர். அதனால் ரொக்கப் பரிவர்த்தனையே எளிதாக உள்ளது என்கின்றனர்.
மக்கள் தங்கள் கைகளில் இருந்த ரொக்க பணத்தை வங்கியில் செலுத்தி, அதை தனியார் நிறுவனத்துக்கு கமிஷன் அளித்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்கின்றனர்.
நிச்சயமாக பணமதிப்பு நீக்கத்தால் ஒரு விளைவுகளும் சாதகமாக இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் அதனால் அரசும், மக்களும் கொடுத்த விலை என்னவோ மிக மிக அதிகம்.
-maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago