இந்திய பொருளாதார வளர்ச்சி கிராமப் பொருளாதாரம் மற்றும் சிறுதொழில்களின் வளர்ச்சியைப் பொறுத்துத்தான் நிர்ணயிக்கப்படும்” என்று பல ஆண்டுகளுக்கு முன் மகாத்மா கூறினார். சுமார் 15 லட்சம் கிராமங்கள் இந்தியாவில் உள்ள நிலையில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் கணிசமான வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன.
ஜூலை 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையான ஜிஎஸ்டி விவசாயம் மற்றும் சிறுதொழில்களில் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை காந்தி ஜெயந்தியின் போது ஆராய்ந்தால் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தேன். சுமார் 17 விதமான முக்கிய மறைமுக வரிகளையும் 29 மாநிலங்களின் தனித்துவம் பெற்ற விற்பனை வரிகளையும் உள்ளடக்கி நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்கிற ஒரே வரியாக அமல் செய்திருப்பது மிகப்பெரிய சாதனை என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துமில்லை.
இதற்கு முன் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 158 நாடுகளும் ஆரம்ப காலத்தில் சிரமங்களை மேற்கொண்டே இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்தியாவும் எவ்விதமான சவால்கள், இடர்பாடுகள் ஏற்படும் என்று கணித்து அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து ஜிஎஸ்டியை அமல் செய்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 90 நாட்களை தாண்டிய நிலையில் எதிர்பார்த்ததற்கு மேலாக சிரமங்கள் இருப்பதாக பெரும்பாலான தொழில் அமைப்புகளில் குறிப்பாக சிறு மற்றும் குறுந்தொழில்கள் அமைப்புகளிடம் கருத்து நிலவுகிறது.
எத்தகைய சவால்கள்
சிறு தொழில் அமைப்புகளுக்கு உதவும் வகையில் ஆண்டுக்கு ரூபாய் 20 லட்சத்திற்கு மிகாமல் விற்பனை செய்பவர்கள் பதிவு செய்ய தேவையில்லை என்று ஜிஎஸ்டி சட்டம் கூறுகிறது. ஆனால், வேறு மாநிலங்களோடு வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த வரி வரம்பு விலக்கு கிடையாது. ஜிஎஸ்டி பதிவு செய்த பின்தான் மற்ற மாநிலத்தோடு வியாபாரம் செய்ய முடியும். பதிவு செய்பவர்கள் தங்களது விற்பனை ரூபாய் 20 லட்சத்திற்கு குறைவாக இருந்தாலும் வரி வசூலித்து அரசிடம் செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள். உதாரணமாக சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஆண்டிற்கு ரூபாய் 10 லட்சத்திற்கு வியாபாரம் செய்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். இந்த நிறுவனம் ரூபாய் 20 ஆயிரத்திற்கு திருப்பதியில் உள்ள நிறுவனத்திற்கு பொருட்களை சப்ளை செய்தால் ஜிஎஸ்டி பதிவு செய்து வரி வசூலிக்க தொடங்க வேண்டும்.
மற்றொரு உதாரணமாக வீட்டில் இருந்து கொண்டு சுயமாக தொழில் செய்யும் மகளிர்குழு எம்பராய்டரி செய்து பொருட்களை அமேசான் இணையதளத்தின் மூலம் விற்பனை செய்கிறார்கள் என்றால் அவர்களும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இத்தகைய கட்டாயப் பதிவிற்கு உட்பட்டவர்களுக்கு வரம்பு விலக்கு என்பது ஏதும் கிடையாது. இப்படி கட்டாயப் பதிவில் உட்படுத்தப்பட்டவர்களுக்கும் ஜிஎஸ்டியில் ஒரு வரம்பு வைத்திருக்கலாம். மேலும் நடைமுறை சூழ்நிலையில் பல பெரிய கம்பெனிகள் ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத சிறு தொழில்களுக்கு ஆர்டர் கொடுக்க முன்வருவதில்லை. இதனால் சிறு நிறுவனங்கள் வேறு வழியே இல்லாமல் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவர்களை போன்றவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை தாக்கல் செய்யலாம் என விதிமுறையை உருவாக்கி இருக்கலாம். இத்தகைய பெரிய கம்பெனிகள், எதிர்முறை வரிவிதிப்பு (Reverse Charge Mechanism) முறையில் வரியை அவர்களே செலுத்தி உள்ளீட்டு வரியாக உடனடியாக எடுத்துக் கொள்ள முடியும் என்கிற சட்டம் இருந்தாலும் சிறு தொழில்களை பதிவிற்கு உட்படுத்துகிறார்கள்.
தொகுப்புமுறை
ரூபாய் 75 லட்சத்திற்கு மிகாமல் வியாபாரம் செய்பவர்கள் தொகுப்பு முறையில் (Composition Scheme) வணிகர்கள் எனில் 1%, உற்பத்தியாளர்கள் எனில் 2% என தங்களது மொத்த விற்பனையில் வரியாக செலுத்தினால் போதுமானது. இவர்கள் உள்ளீட்டுவரி எதுவும் எடுக்க முடியாது. அதுபோல இவர்களிடமிருந்து பொருட்களை வாங்குபவர்களும் உள்ளீட்டுவரி எடுக்க முடியாது. இதனால் தொகுப்புமுறையில் பதிவு செய்தவர்களை முழுவரி செலுத்தினால்தான் தாங்கள் உள்ளீட்டு வரி எடுக்க முடியும் என்கிற காரணத்தினால் பெரிய கம்பெனிகள் சிறு தொழில்களை புறக்கணிக்கின்றனர். மேலும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய நாட்களில் முழு விபரங்களையும் அறியாத பலர் தொகுப்புமுறைக்கு பதிலாக சாதாரண வரி செலுத்தும் முறையிலும் சாதாரண வரிசெலுத்துதலுக்கு பதிலாக தொகுப்புமுறையிலும் தவறாக பதிவு செய்தவர்கள் இன்றும் அதை மாற்றம் செய்வதில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பல நாடுகளில் ஜிஎஸ்டி வரிவிகிதம் ஒரே வரிவிகிதமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மிகஅவசியமான, அவசியமான, வசதியான, ஆடம்பரமான பொருட்கள் மற்றும் சேவையைப் பொருத்து வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை கருத்தில் கொண்டே என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், பல அத்தியாவசிய பொருட்களுக்கும் 18% மற்றும் 28% என்று வரிவிதிப்பது சிறு தொழில்களுக்கு சற்று பாதிப்பாக உள்ளது. உதாரணமாக பாலுக்கு வரி ஏதுமில்லை. ஆனால், பாலிலிருந்து தயாரிக்கப்படும் பிற பொருட்களுக்கு 18% வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலமாக பாலுக்கும் மறைமுகமாக வரி வசூலிக்கப்படுகிறது என்கிற உண்மை தாக்கத்தை ஏற்படுத்தும். பாலிலிருந்து செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட விலைக்கு மட்டுமே வரி செலுத்தினால் சரியானதாக இருந்திருக்கும்.
சிறுதொழில் அமைப்புகளுக்கு தொகுப்புமுறையை தவிர எந்தவிதமான சலுகையோ விதிவிலக்கோ கிடையாது. மலேசியா போன்ற நாடுகளில் அரசு அங்கீகாரம் செய்த ஜிஎஸ்டி சாப்ட்வேர் உள்ளது. இந்தியாவில் இதுபோன்ற அரசு அங்கீகாரம் பெற்ற சாப்ட்வேர் இருந்தால் தொழில் நிறுவனங்களுக்கு வசதியாக இருக்கும். பல பெரிய நிறுவனங்கள் வரிப்படிவங்கள் தாக்கல் செய்வது ரிவர்ஸ் சார்ஜ் (Reverse Charge) முறை கணக்கீடு, உள்ளீட்டுவரி வரவு (Credit), மின்னணு பில் (E-way bill) போன்றவற்றில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் சிறுதொழில் அமைப்புகளுக்கு தேவையான ஆலோசனை கிடைக்காமல் யாரை அணுகுவது எங்கு தீர்வு காண்பது என்கிற குழப்ப நிலையில் உள்ளனர். இதன் காரணமாக வேலை இழப்பும் நடந்து வருகிறது என்னும் செய்திகள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.
‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழி உள்ளது. வியாபாரத்தை உள்நாட்டிலேயே பெருக்க வசதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உள்மாநிலங்களில் விற்கப்படும் பொருட்களை பதியச் சொல்லி கட்டாயப்படுத்துவதை ஜிஎஸ்டி கவுன்சில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்புதான் வரிவிகிதங்கள், வரிவிலக்கு பொருட்கள், சேவைகள் குறித்த விதிமுறைகள் சட்டங்களை நிர்ணயிக்கின்றது. ஜிஎஸ்டி கவுன்சிலில் 2/3 மாநில அரசின் நிதி அமைச்சர்களும், 1/3 மத்திய நிதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் 75% வாக்குப் பெற்ற தீர்மானங்களே சட்டமாகவோ, விதியாகவோ மாற முடியும். மத்திய மற்றும் மாநில ஆளும் கட்சியினர் பங்கு பெற்ற இந்த ஜிஎஸ்டி கவுன்சில், வரிதாரரது தடைகளுக்கு தீர்வு தேடுதல் மிக இன்றியமையாதது. பணமதிப்பு நீக்க திட்டத்தில் நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடிகளை படிப்பினையாகக் கொண்டு ஜிஎஸ்டி நடைமுறையைக் கையாள வேண்டும்.
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு கடந்த மூன்றாண்டுகளாக பல திட்டங்களையும் ஊக்கங்களையும் கொடுத்து வருவது கவனிக்க வேண்டிய ஒன்று. இதற்கு முன் எந்த அரசாங்கமும் எடுக்காத அளவு தொழில்முனைவோரை உற்சாகப்படுத்தும் வகையாக ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என பல்வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டங்களை முனைப்பாக இந்த அரசு செயல்படுத்துகிறது. அதே வேளையில் ஏற்கெனவே தொழிலில் இருக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் எந்தச் சூழ்நிலையிலும் வியாபாரத்திலிருந்து வெளியே செல்லாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிடம் உள்ளது.
அதற்கான தொழில் சூழலை ஏற்படுத்தித் தருவது அரசின் தார்மீக கடமை ஆகும். “வாடிக்கையாளர்தான் நமது கடவுள், வாடிக்கையாளரைச் சார்ந்தே நாம் இருக்கிறோம்” என்று மகாத்மா காந்தியடிகள் கூறியது போல வரிதாரர்களை குறிப்பாக சிறுதொழில் அமைப்புகளை வாடிக்கையாளராக கருதி அவர்களது சிரமங்களை களையும் பட்சத்தில்தான் ஜிஎஸ்டியை சரியான முறையில் செயல்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்று கொள்ள முடியும்.
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்,
karthikeyan.auditor@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago