மும்பை என்றால் டப்பாவாலாக்கள் நினைவுக்கு வராமல் போக மாட்டார்கள். என்னதான் மழை என்றாலும் லோக்கல் ரயிலில் எவ்வளவு கூட்டம் வந்தாலும் கொஞ்சம் கூட நேரம் தவறாமல் அலுவலகம் செல்பவர்களுக்கு மதிய சாப்பாட்டைக் கொண்டு சேர்க்கும் பணியை கடந்த 127 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள் டப்பாவாலாக்கள்.
1890-ல் ஒரு வாடிக்கையாளர், ஒரு டப்பாவாலாவில் ஆரம்பித்தது... இன்றைக்கு 5 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். வாடிக்கையாளர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டுகிறது. ஆரம்பத்தில் வெள்ளைக்கார அதிகாரிகளுக்காக ஆரம்பித்த சேவை இது. இப்போது நமக்கும் பயன்படுகிறது. காலையில் டிபன் பாக்ஸை வீடுகளில் இருந்து பெற்று, அதை வாடிக்கையாளர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, அவர் சாப்பிட்டு முடித்த பிறகு, அதை மீண்டும் வீட்டில் கொண்டு போய் கொடுப்பது தினசரி வேலை. அதாவது ஒரே நாளில் மும்பை முழுவதும் 4 லட்சம் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.
ஆண்டுக்கு 12 கோடி பரிவர்த்தனைகள். காலையில் 9 மணிக்கு ஆரம்பிக்கும் இவர்களின் வேலை இரவு 12 மணிக்குத்தான் முடிகிறது. வீடுகளில் இருந்து டிபன் பாக்ஸை பெற்று, அவற்றை பொதுவான ஒரு இடத்துக்குக் கொண்டு வருவார்கள். அங்கிருந்து, டெலிவரியாகும் ஏரியாவைப் பொருத்து டிபன் பாக்ஸ்கள் பிரிக்கப்படும். அவற்றை அந்தந்த ஏரியாவுக்கு லோக்கல் ரயிலின் சரக்குப் பெட்டியில் டிபன் பாக்ஸ்களை ஏற்றிச் சென்று டெலிவரி செய்வார்கள்.
இவர்களின் பணி குறித்து டாக்டர் பவன் அக்ரவால் அவர்கள் கல்லூரி ஒன்றில் ஆற்றிய உரையைக் கேட்க நேர்ந்தது. இவர்தான் டப்பாவாலாக்களின் ஆஸ்தான செய்தித் தொடர்பாளர், பேச்சாளர். பல நிர்வாகவியல் கல்லூரிகளிலும் டப்பாவாலாக்களின் பணி குறித்தும் அவர்களின் நேரம் தவறாமை குறித்தும் உரை நிகழ்த்தி வரு கிறார்.
``மும்பை செலவு மிகுந்த நகரம். அங்கு வீட்டு வாடகை கட்டுபடியாகாது. சொந்த வீடு வாங்குவதும் ரொம்ப கஷ்டம். தொலைவில் உள்ள புறநகர் பகுதிகளில் இருந்துதான் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். அதனால் மும்பையில் பணியாற்றும் பலரும் தங்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல முடிவதில்லை. காலையில் 6 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால்தான் அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் செல்ல முடியும். அவ்வளவு தூரம், வீட்டுக்கும், அலுவலகத்துக்கும். அந்த நேரத்தில் மதியத்துக்கும் சேர்த்து சமைக்க நேரம் இருக்காது.
அப்படியே சமைத்தாலும் அது நன்றாக இருக்காது. மேலும் மும்பை ரயில்களின் கூட்டத்தில் வெறும் ஆளாய் ஏறி, இறங்குவதே பெரிய விஷயம். இதில் டிபன் பாக்ஸை எடுத்துச் செல்வது இயலாத காரியம். அதனால்தான் டப்பாவாலாக்களின் உதவி தேவைப்படுகிறது. வெளியில் ஓட்டலில் தினமும் சாப்பிடமுடியாது.
அப்படியே சாப்பிட்டாலும் வீட்டில் அம்மா, மனைவி அன்போடு சமைத்துத் தரும் உணவுபோல் வருமா? ஒரு டப்பாவாலா தினமும் 40 டிபன் பாக்ஸ்களை டெலிவரி செய்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்கள். ஆனாலும் எங்கும் தவறு நடப்பதே இல்லை. அந்த அளவுக்கு மிகச் சிறந்த நிர்வாக நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
``கடந்த 127 வருடங்களில் ஒரு முறை கூட டிபன் பாக்ஸ் மாறிப் போனதில்லை என்பதுதான் எங்கள் பணியின் சிறப்பு. மும்பையில் பாதி நேரம் ரயில்கள் தாமதமாகத்தான் செல்கின்றன. அதோடு, போக்குவரத்து நெரிசல் வேறு. இந்த தடைகளை எல்லாம் தாண்டித்தான் சரியான நேரத்தில் டெலிவரி செய்கிறோம். காரணம் தொழில் நேர்த்தி.
ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 30 டப்பாவாலாக்கள் இருப்பார்கள். அவர்களில் வயது மூத்தவரே அந்தக் குழுவின் தலைவராக இருப்பார். அவர்தான் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான வருமானம்தான்.
மும்பையில் ஒரு கூரியரை உரிய இடத்தில் கொண்டுபோய் சேர்க்க ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் டப்பாவாலாக்கள் ஒரு நாளில் இரண்டு முறை டிபன் பாக்ஸை டெலிவரி செய்கிறார்கள். மாதத்துக்கு ரூ.300 முதல் ரூ.350 தான் கட்டணம். தூரத்தைப் பொருத்து கட்டணம் மாறுவதில்லை. இதை உயர்த்தினால் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டி யிருக்கும் என்பதால் உயர்த்துவதில்லை.
``மாதம் ஒருவருக்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை சம்பளமாகக் கிடைக்கும். இதுபோக, ஒரு மாத கட்டணம் போனஸாகக் கிடைக்கும். வாடிக்கையாளர் யாராவது தர மறுத்தால் கூட அவர்களுக்கு சேவையை மறுப்பதில்லை. காரணம், ஒரு மாத போனஸுக்கு ஆசைப்பட்டு கிடைக்காத வெறுப்பில் சேவையைத் துண்டித்தால்,. வாடிக்கையாளரால் வீட்டுச் சாப்பாடு சாப்பிட முடியாது. மேலும் அவரிடமிருந்து வருடம் முழுவதும் வரும் வருமானம் நின்றுபோய் விடுமே என்பார் டப்பாவாலா.
அதனால்தான் கடந்த 127 வருடங்களில் ஒரு முறை கூட வேலை நிறுத்தம் இல்லாமல் இயங்கி வருகிறோம். ``மும்பையில் 10 மாதங்கள்தான் வேலை செய்தபின், 2 மாதங்கள் சென்னைக்கு டிரான்ஸ்பராகி சென்று விட்டால், 10 மாதத்துக்குத்தான் கட்டணத்தைப் பெறுவோம். காரணம், உங்களுக்கு சேவை செய்தது 10 மாதம்தான். அதற்கு கட்டணம் கொடுத்தால் போதும். டப்பாவாலாக்களைப் பொருத்தவரை வாடிக்கையாளர்கள்தான் தெய்வம்என முடிக்கிறார்'' பவன் அக்ரவால்.
சிக்ஸ் சிக்மா...
உலகம் முழுவதும் தொழில் நேர்த்திக்காகத் தரப்படும் சான்றிதழ்தான் சிக்ஸ் சிக்மா. உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படும் அமேசான், பெடெக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களே இந்த சான்றிதழைப் பெறத் தவியாய் தவிக்கும்போது, டப்பாவாலாக்கள் இதைப் பெற்றுள்ளனர். காரணம், பணியில் எந்தத் தவறும் நடப்பதில்லை. இருந்தாலும் 1.20 கோடி பரிவர்த்தனைகளில் ஒரே ஒரு பரிவர்த்தனையில்தான் தவறு நேர வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தி. 10 லட்சம் பரிவர்த்தனைகளில் 3.4 தவறுகள் வரை அனுமதிக்கப்படுகிறது. இதனால்தான் சிக்ஸ் சிக்மா சான்றிதழைப் பெற்றுள்ளனர் டப்பாவாலாக்கள். அதோடு, சிறந்த சேவைக்கு அளிக்கப்படும் ஐஎஸ்ஓ 9000 தரச் சான்றிதழையும் பெற்றுள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக் கழகம், டப்பாவாலாக்களின் தொழிலை நிர்வாகவியல் மாணவர்களுக்குப் பாடமாக வைத்தது. உலகம் முழுவதும் இருக்கும் தலைவர்களும் மும்பை வரும்போது, இவர்களின் பணியைப் பார்க்கத் தவறுவதில்லை. இளவரசர் சார்லஸ் இவர்களோடு உரையாடியிருக்கிறார். வெர்ஜின் விமான நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்டு பிரான்சன் மும்பை வந்தபோது, தன்னால் டெலிவரி தாமதம் ஆகக் கூடாது என்பதால், டப்பாவாலாக்களுடன் மும்பை ரயிலின் சரக்குப் பெட்டியில் பயணம் செய்திருக்கிறார். இவர்களைப் பற்றி டிபன் பாக்ஸ் என்ற இந்திப் படமும் வெளிவந்திருக்கிறது.
ஏழைகளுக்கு உணவு
வாடிக்கையாளர்களின் மீதமாகும் கெட்டுப் போகாத உணவை ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்கும் திட்டத்தையும் டப்பாவாலாக்கள் செயல்படுத்தி வருகிறார்கள். ஹாப்பி லைப் வெல்பேர் சொசைட்டி என்ற அமைப்பு, மும்பையின் குடிசைப் பகுதிகளில் இருக்கும் 2 லட்சம் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் திட்டத்துக்காக டப்பாவாலாக்களை அணுகினர். மீதமாகும் உணவை தங்களிடம் அளித்தால், அதை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் எனக் கேட்டவுடன் அதை ஏற்றுக் கொண்டனர்.
வாடிக்கையாளர்களிடம் `ஷேர் மை டிபன்’ என அச்சிடப்பட்ட சிவப்பு நிற ஸ்டிக்கர் அளித்தனர். அவர்கள். உணவு மீதமிருந்தால், அல்லது தாங்கள் சாப்பிடவில்லை என்றால் ஸ்டிக்கரை டிபனில் ஒட்ட வேண்டும். இப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டிபன்களை மட்டும் பிரித்து. அதில் இருக்கும் நல்ல உணவை சேகரித்து தொண்டு அமைப்பிடம் கொடுத்து விடுவார்கள். இதற்கு 15 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். இதுபோல், ஒரு நாளைக்கு 16 டன் உணவு ஏழைக் குழந்தைகளின் பசியை ஆற்றுகிறது. இவை அனைத்தும் இதற்கு முன்பு குப்பைக்கு போய்க் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-ravindran.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago