நம்மால் வரும் இன்னொரு வெள்ளம்!

By நித்யானந்த ஜெயராமன்

மும்பை நகரம் கடந்த மாதம் வெள்ளத்தால் மூழ்கியது. அதற்கு முந்தைய வாரம் சண்டிகர். அதற்கும் முன்னர் தென்மேற்குப் பருவமழையின்போது அகர்தலா, பெங்களூரு, அகமதாபாத் போன்ற நகரங்கள். இப்படியான கனமழை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டவையா என்று இன்னும் நிரூபணம் ஆகவில்லை. என்றாலும், முறையற்ற கட்டுமானங்களை உருவாக்குவதைப் போன்று நிலப் பயன்பாட்டில் விரும்பத்தகாத மாற்றங்கள்தான் மழையை வெள்ளமாய் மாற்றியதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.

கடுமையான, ஒழுங்கற்ற, அதிதீவிர மழைப்பொழிவு இப்போது தவிர்க்க முடியாத ஒன்று. அப்படியென்றால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் நம் நகரங்களில் மழை வெள்ள நிகழ்வுகளைக் குறைப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?

கண்டுகொள்ளப்படாத ஆக்கிரமிப்பு

ஓராண்டுக்கு முன்னர், ‘உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை 2015’, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கான அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, ஏரிகள் மற்றும் நதிப்படுகைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளே, சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கான முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வெள்ளம் மக்களுக்குப் பாடம் கற்றுத் தந்த ஒரு நிகழ்வாகவும், மற்ற நகரங்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தையும் மேற்கண்ட அறிக்கை வலியுறுத்தியது.

அந்த நிலைக்குழு, வணிக நோக்கங்களுக்காகக் கட்டப்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்களை நிறுத்தவும், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ரியல் எஸ்டேட் கட்டிடங்களைத் தடை செய்யவும் மாநில அரசாங்கத்தை வலியுறுத்தியது.

ஆனால் தமிழக அரசோ, சென்னையின் மாசு நிறைந்த நதிகளின் ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவதற்கான ஒரு சாக்காக அந்த அறிவுரைகளைப் பயன்படுத்திக்கொண்டது. ஆனால், சட்டவிரோதக் கும்பல்களின் பெரிய செயல்பாடுகளைத் தடுக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, சென்னையின் வட பகுதியில் உள்ள பரந்து விரிந்த எண்ணூர் சிற்றோடையை ஒட்டியுள்ள ஈரநிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றப் பெருமளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

‘மாஃபியா’ என்பதற்குக் குற்றவாளிகளின் குழு என்ற பொருள் உள்ள போதிலும், எண்ணூர் சிற்றோடையின் ஆக்கிரமிப்பாளர்களை மாஃபியா என்று வகைப்படுத்த முடியாது. இந்த ஆக்கிரமிப்பு மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களால் வழிநடத்தப்படும் சட்ட விரோதக் குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட நிறுவனங்களும் இதற்கு உதவியாக உள்ளதுதான் அவலம்.

சட்டத்தை மீறும் அரசு

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான காமராஜர் துறைமுக நிறுவனம், மாநிலக் கரையோர மண்டல முகமை ஆணையத்திடம் எண்ணூர் சிற்றோடையின் பல நூறு ஏக்கர் பரப்பை மீட்டு கார் பார்க்கிங், நிலக்கரி முற்றங்கள் மற்றும் இலவச வர்த்தகக் கிடங்கு மண்டலங்கள் போன்றவற்றை அமைக்க அனுமதி பெற்றது. இது தவிர, பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் கட்டிடங்களுக்கு இடமளிக்கும் வகையிலும் என்.டி.பி.சி. லிமிடெட் (நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்) மற்றும் டான்ஜெட்கோவின் மத்திய - மாநில கூட்டு நிறுவனமான என்.டி.இ.சி.எல்.-ன் (என்.டி.பி.சி. தமிழ்நாடு எனர்ஜி கம்பெனி லிமிடெட்) அனல் மின் நிலையம், நிலக்கரி சாம்பல் கிடங்குகளுக்கு இடமளிக்கும் வகையிலும் 1,090 ஏக்கர் பரப்பு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.

காமராஜர் துறைமுக நிறுவனத்தின் இத்திட்டம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. எண்ணூர் சிற்றோடைக்குள் உள்ள என்.டி.இ.சி.எல்-ன் நிலக்கரிச் சாம்பல் பரப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காக நிலுவையில் உள்ளது. அது அனுமதிக்கப்பட்டால், புதிய கட்டுமானங்கள் சிற்றோடையை அழிப்பது மட்டுமல்லாமல் 10 லட்சம் மக்களை வெளியேற்றும், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உட்பட முக்கிய உள்கட்டமைப்புகளில் மோசமான வெள்ளப்பெருக்கையும் உட்படுத்தும்.

கொசஸ்தலையாறு காப்பாற்றுமா?

கொசஸ்தலையாறு, சென்னையின் அதிகம் அறியப்படாத மிகப்பெரிய நதி. எண்ணூர் சிற்றோடையின் உப்பங்கழியின் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. இந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதி அடையாறு, கூவம் நதிகளின் வடிகால் பகுதிகளின் இணைந்த பரப்பளவைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியது. வெள்ளத்தடுப்பு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, கொசஸ்தலையாறு நதியும் எண்ணூர் சிற்றோடையும் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறதோ அதுவே சென்னை நகரம் அடுத்த கனமழையால் எந்த அளவு பாதிக்கப்படப் போகிறது என்பதை நிர்ணயிக்கும் அல்லது குறைக்கும்.

ஆற்றில் காமராஜர் துறைமுகத்துக்கு கட்டிடங்கள் கட்டுவதற்குப் பதிலாக வறண்ட நிலத்தில் கட்டிடங்களைக் கட்ட ஆணையிடக் கோரி மாநிலப் பேரழிவு மேலாண்மை ஆணையத்தின் தலைவரான தலைமைச் செயலாளரையும், சுற்றுச்சூழல் துறைச் செயலாளரையும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் அணுகினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் காமராஜர் துறைமுகத்துடைய திட்டத்தின் எண்ணூர் ஈரநிலத்தின் மேலேயே கட்டிடம் கட்டுவது தொடர்பான பரிந்துரைக்கு அனுமதியளித்துள்ளார். லட்சக்கணக்கான மக்களை வெள்ள ஆபத்திலிருந்து காப்பாற்றுவது அல்லது காமராஜர் துறைமுகத்தின் வணிக நலன்களைப் பாதுகாப்பது ஆகிய இரண்டில் எதற்கு முக்கியத்துவம் என்கிற கேள்விக்கு, இதன் மூலம் தமிழக அரசு தனது செயல்கள் வழியாகத் தெளிவான பதிலைத் தெரிவித்திருக்கிறது.

ஆக்கிரமிப்புகள் காரணமாக கொசஸ்தலையாற்றில் செயற்கையான வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சென்னை மக்களின் வாழ்க்கை ஆபத்துக்கு உட்படுத்தப்படும் நிலையில், மத்திய, மாநில அரசாங்களால் அந்தப் பேரழிவைத் தவிர்க்க முடிந்தும்கூட எதுவுமே செய்யவில்லை என்பதை இந்த இடத்தில் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.எனவே, 2015 பெருவெள்ளத்தைப் போலவே, அடுத்த வெள்ளமும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்