கடலம்மா பேசுறங் கண்ணு 24: பேயலஸ் பூதம்

By வறீதையா கான்ஸ்தந்தின்

நிச்சயமின்மை ஒன்றே முற்றான நிச்சயம் என்றானால் அதற்கு வாழ்க்கை என்று பெயரிடலாம். நிலைகொள்ளாமையே நிலைமை என்றானால், அதை எப்படி அழைப்பது? கடல்! நிலம் அசலம்; நீர் சலம். அது சலம்பிக்கொண்டே இருக்கும். அமைதியாய்த் தோன்றும் கடல் பரப்பைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ஏதோவொரு திசையில் அது நகர்ந்துகொண்டே இருக்கிறது.

பூமிப் பரப்பில் நான்கில் மூன்று பங்கைப் பொதிந்துகிடக்கும் கடல் ஒரு கணமும் சலனமற்றுக் கிடப்பதில்லை. அப்பெரு நீர்த்திரள் பயணித்தவாறு இருக்கிறது. கடலின் இருத்தல் என்பது முடிவற்ற மறுபிறப்புகள், ஓய்வற்ற பயணங்கள். மேகத் திரளாகி, துருவப் பனிப்பாறைகளாகி, பொழியும் மழையாகி, நீர்வீழ்ச்சிகளாகி, கிடக்கும் – நடக்கும் - ஓடும் நீராகி மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைவதான பயணம். தியானம், நடனம், பிரளயம் எல்லாமான பயணம்.

கடல் கொண்டு செல்லும் உணவு

கொழும்பில் தொழில் பார்க்கும் தன் கணவருக்குக் கரிசனையுடன் காலைச் சிற்றுண்டி தயார் செய்கிறாள் மணப்பாட்டில் இருக்கும் மனைவி. தயாரித்த சிற்றுண்டியைத் தட்டில் எடுத்துவந்து அலைவாய்க்கரையில் வைக்கிறாள் அவள். சற்று நேரத்தில் சிற்றுண்டித் தட்டு வெறுமையாகக் கரைக்குத் திரும்புகிறது. காலை உணவைக் கொழும்பிலிருக்கும் ஆசைக் கணவருக்கு எடுத்துச் சென்று, அவர் சிற்றுண்டி முடிக்கக் காத்திருந்து, தட்டைத் திரும்பக் கொண்டு சேர்ப்பது பேயலஸ் பூதம். இப்படி ஒரு தொன்ம நம்பிக்கை மணப்பாட்டு மக்களிடம் இன்றும் நிலவுகிறது.

பேயலஸ் பூதம் இருக்கிறதோ இல்லையோ, `கடலாறுகள்’ எனப்படும் பெருங்கடல் நீரோட்டங்கள் உண்மையானவை. பெரிய கப்பல்களையே சில நூறு கடல் மைல் தொலைவுக்கு இழுத்துச் சென்றுவிடும் அளவுக்கு வலுவானவை.

மூன்று பெரும் சக்திகள்

பெருங்கடல் நீரோட்டங்களுக்குக் காரணமாக நிற்பவை மூன்று பெரும் சக்திகள்: பூமிக்கோளத்தின் படுவேகச் சுழல்விசை (Coriolis force), சூரிய – சந்திர ஈர்ப்பு விசை (Celestial attraction), சூரியன் உமிழும் வெப்பச் சக்தி (Solar Thermal energy). மணிக்கு 1,500 கி.மீ. வேகத்தில் மேற்கிலிருந்து கிழக்காகத் துருவ அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது பூமி. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதன் விசை மிகவும் தீவிரப்படுகிறது. கடலைத் தாங்கி நிற்கும் நிலம் மணிக்கு 1,500 கி.மீட்டர் (நொடிக்கு 416 மீட்டர்!) வேகத்தில் நகர்கையில் அதன் மேலே கிடக்கும் கடல் என்னும் பெரும் நீர்த்திரளானது இதற்கு ஈடு கொடுத்துச் சுழலமுடியாமல் திணறி, பின்தங்கி பூமியின் திசைவேகத்துக்கு இருபுறமாக விலகிச் செல்கிறது. உங்களுக்குப் புரிகிற விதத்தில் ஒரு உதாரணம்:

கூரையில்லாத விமானி அறையில் நின்றுகொண்டே விமானத்தை 1,500 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தும் விமானியைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அல்லது சீட் பெல்ட், முதுகுக்கு ஆதரவு ஏதுமில்லாத ஓர் இருக்கையில் இருந்து பந்தயக் கார் ஓட்டுநரின் நிலைமையைக் கற்பனை செய்து பாருங்கள்.

பூமியின் இந்த சுழல்விசையின் காரணமாக, கடலின் நீர்த்திரளானது வட, தென் துருவங்களை நோக்கி ஓட்டம் பிடிக்கிறது. இந்த இரு துருவ நீரோட்டங்கள் அந்தந்தத் துருவங்களைத் தொடுகிற கையோடு எதிர்த் திசைக்குத் திரும்பி, மீண்டும் நில நடுக்கோட்டை நோக்கி வருகின்றன. இதெல்லாமே நீரோட்டங்களுக்குக் காரணம்.

(அடுத்த வாரம்: பேரலைகள்... காற்றின் குறும்பு!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்