“அப்பா, இந்தக் கட்டுமரத்தைக் கடலுக்குள்ளே எப்படிக் கொண்டு போவாங்க? மீன் லேலம் போடுறதுண்ணா என்னப்பா? இந்த மீனையெல்லாம் எதுக்குப்பா மண்ணில வாரி வீசியிருக்காங்க? கடலில் மிதந்துகிட்டிருக்கிற கட்டுமரத்தில எப்படிப்பா அவங்க எந்திரிச்சு நிக்கிறாங்க? கடல்ல தாகம் எடுத்தால் எங்கே போவாங்க?...”
கடல் குறித்த கேள்விகளின் களஞ்சியத்தை என் முன்னே முடிச்சவிழ்த்துப் போடுகிறாள் என் மகள். அலைகளின் இரைச்சலைத் தாலாட்டாய்க் கேட்டுத் தூங்கியவன் நான். புதிய உதயத்துக்குக் கண் திறந்தால் முதலில் கண்ணில் படுவது கடல் என்பது எனது சிறுபருவ வாழ்க்கையாக இருந்தது. குதிப்பையும் குத்தாவையும் வாவலையும் அயிலையையும் பன்னாவையும் பண்டிவாளையையும் சாளையையும் மஞ்சக் காரையையும் பருவம்தோறும் கண்டு பரிச்சயப்பட்டவை என் கண்கள். எட்டுமுட்டு மூங்கில் துளவையை மல்லாத்தி வைத்து, அதன் மொத்த நீளத்துக்கும் மடிமீனை நிரப்பி வீட்டுக்குக் கொண்டுவருவார் அப்பா. குதிப்புக்கார, மஞ்சக்கார, ஊறம், கிளச்சி…
ஆனால், இன்றைக்கு இரண்டு மீன் வகையைக்கூடச் சரியாக அடையாளப்படுத்தத் தெரியாமல் இருக்கிறாள் என் மகள். கடல்சார் வாழ்க்கையை, கடலை, கடற்கரையைப் பற்றி வெகுசொற்பமான அறிவுள்ளவளும் அவற்றைக் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்படாதவளுமாக இருக்கிறாள் என் மகள்.
படித்தவர்களோடு மட்டுமே பழக்கம் வைத்திருக்கிறாள் என் மகள். கடல்சார் வாழ்க்கையுடனும் ஏட்டுப் படிப்புப் படித்தவர்களுடனும் சம அளவு தொடர்பு கொண்டிருக்கிறேன் நான். கடல் உலகை மட்டுமே அனுபவரீதியாகப் படித்து வைத்துக்கொண்டு, கடலை மட்டுமே சார்ந்திருந்து வாழ்க்கையை ஓட்டி முடித்தார் என் தந்தைார். அடைப்பலவை, தாமான், தொளவை, மாரியா, அணியம், பார், மட்டு, கங்கூஸ், கறை, பேப்பு என்று மீன்பிடி தொழிலறிவுக்குள் முடங்கிப்போனது எனது மூதாதையரின் உலகம்.
பெற்றோரின் உணர்வு
எனது இளமைப் பருவம் பிள்ளைகளின் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்திசெய்ய பெற்றோர் போராடும் காட்சிகளால் நிறைந்திருந்தது. சில இரவுகளில் பசியை உண்டு படுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஆனி, ஆடி மாதங்களில் ஊரில் வறுமை தாண்டவமாடும். இன்றுபோல் பணப்புழக்கம் இருக்கவில்லை, ஊரில் தினமும் எல்லா வீட்டிலும் அடுப்பு எரியாது. மிகக் குறைந்த உணவைக் கணவருக்கும் ஐந்தாறு பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டுப் பசியோடு தூங்கப்போவார் அம்மா.
அடுத்தநாள் காலையில் புத்தகக் கட்டைச் சுமந்துகொண்டு சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கும் சீயோன்புரம் உயர்நிலைப் பள்ளிக்குப் போகிற எனக்காகப் பானையில் கொஞ்சம் சாதத்தை யாருக்கும் தெரியாமல் பிடித்துப் போட்டுவிட்டு, சாப்பிட்டு முடித்த மாதிரி போக்குக் காட்டிவிட்டு சமையல் கட்டிலிருந்து நழுவிவிடுவார் என் அம்மா. பிள்ளைகளின் வாடிய முகத்தைப் பார்க்கச் சகியாமல் ஆனி, ஆடி மாதத்துக் கோரக் கடலிலும் மீன்பிடிக்கப் போவார் அப்பா.
பாடங்கள் பெரிது
ஊரில் இரண்டு மடிவலை கடலுக்குப் போனால், அதில் ஒரு மடிவலையின் கீழ்ப்புறத்துக் கடைமரத்தில் இருப்பார் அப்பா. கடலில் மடி வளைப்பதற்கு சிறிதும் பெரிதுமாக இரண்டு கட்டுமரங்கள் வேண்டும். பெரிய கட்டுமரத்தின் கடைமரம் என்பது எழுவர் குழுவின் தலைவருக்கான இடம். உடல்வாகும் தொழில் சூட்சுமங்களும் தெரிந்த சேலாளி மீனவரே கீழ்ப்புறத்துக் கடைமரத்தில் இருப்பார். அம்மா தரப்பில் பெரும் தியாகம் இருந்தது; குடும்பம் நிறைய நேசம் இருந்தது; குடும்ப அங்கத்தினர்களுக்கிடையில் உறவு நெருக்கம் இருந்தது
பசியையும் வறுமையையும் அனுபவித்து வளர்ந்த குழந்தைப் பருவ வாழ்க்கை தந்த பாடங்கள் பெரிது. வசதியான வாழ்க்கையைக் கண் முன்னே கண்டதும் நிலைதடுமாறி விடாமல் கவனமாய் அடியெடுத்து வைக்க, அந்தப் பஞ்ச நாட்களின் அனுபவங்கள் துணைநிற்கின்றன.
(அடுத்த வாரம்: கோம்பை)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago