வெளிமான்கள் வாழ வழி பிறக்குமா?

By த.முருகவேல்

இந்தியாவின் மிகச் சிறிய தேசியப் பூங்கா… அருகி வரும் வெளிமான்களின் இறுதிப் புகலிடமாக இருக்கும் பூங்கா… என்பன போன்ற பெருமைகளுக்கு உரியது, சென்னை கிண்டி தேசியப் பூங்கா! ஆனால் இந்த உண்மை சென்னைவாசிகளில் பலருக்கே தெரியாது என்பதுதான் வேதனை!

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை மட்டுமே பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள். அதே வளாகத்திலேயே பாதுகாக்கப்பட்ட தேசியப் பூங்காவாக இருக்கும் பகுதி 300 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களின் வேட்டைக் காடாக 505 ஹெக்டர் பரப்பளவில் இருந்தது. பிரிட்டனைச் சேர்ந்த கில்பெர்ட் ரோட்ரிக்ஸ் என்பவருக்குச் சொந்தமாக இருந்த இப்பகுதி ‘கிண்டி லாட்ஜ்’ எனப்பட்டது. இதை, 1821-ம் ஆண்டில் அன்றைய மதராஸ் அரசு ரோட்ரிக்ஸிடம் இருந்து அந்த இடத்தை அன்றைய மதிப்பில் 35,000 ரூபாய்க்கு வாங்கியது.

இந்திய விடுதலைக்குப் பின் இப்பகுதி தமிழக ஆளுநரின் வசிப்பிடமானது. இந்த காட்டுப் பகுதியைக் காப்பாற்றுவதற்காக, 1910-ல் மொத்த 505 ஹெக்டர் நிலத்தையும் அரசு காப்புக் காடாக அறிவித்தது. இருந்தாலும் 1961-லிருந்து 1977-க்குள் 172 ஹெக்டர் நிலம் ஐ.ஐ.டி., காந்தி மண்டபம் போன்றவற்றுக்காகத் தாரை வார்க்கப்பட்டது. எஞ்சியிருந்த 270.57 ஹெக்டேர் காட்டுப் பகுதியை 1978-ம் ஆண்டு தேசியப் பூங்காவாக அரசு அறிவித்தது . இந்தப் பாதுகாப்பால் மட்டுமே இன்றுவரை இந்த காடு பல அரிய தாவரங்கள், விலங்கினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது.

அரிய வெளிமான்கள்

இங்கு பல ஆண்டுகளாகவே வெளிமான்கள் வசித்து வருகின்றன. ஆனால், புள்ளிமான்கள் 1940-களில்தான் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. குஜராத் பவ்நகர் மகாராஜா அறிமுகப்படுத்திய அல்பினோ (உயிரினங்களில் நிறமிகள் இல்லாததால் மேல் தோல் வெண்மையாகக் காணப்படும் தன்மை) வெளிமான்களின் வாரிசுகள் இன்றும் இங்கு வசிக்கின்றன. புள்ளிமான்கள் தாவரங்கள் அடர்ந்திருக்கும் காட்டுப்பகுதிகளில் வசிப்பவை.

அதேநேரம், ஆண்டிலோப் பிரிவில் வரும் வெளி மானுக்கு மாறுபட்ட திருகுக்கொம்புகள் இருக்கும். புல்வெளியில் வாழும் பண்பு கொண்ட இவை, சுமார் 60 கி.மீ. வேகத்தில் ஓடும் இயல்புகொண்டவை. ஒருகாலத்தில் அதிக அளவில் இருந்த இந்த இனம் இன்று கள்ளவேட்டை, வாழிட அழிவு போன்ற காரணங்களால் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டதால் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, இது பாதுகாக்கப்படும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் போலோ போட்டி?

தேசியப் பூங்காவுக்குள் இருப்பதால், இந்த வெளிமான்கள் பாதுகாப்பாக உள்ளன. ஆனால் ஐ.ஐ.டி. பகுதியில் வெளிமான்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றன. இந்த காட்டுப் பகுதி மனிதத் தேவைகளுக்காக இயல்பு குலைக்கப்படுவதுதான் இதற்குக் காரணம். அங்கு சமீபத்தில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங்கள் அங்கு உருவாகும் பிரச்சினைகளுக்கு ஓர் உதாரணம்.

வெளிமான்களுக்குத் திறந்த புல்வெளி நிலங்கள் அத்தியாவசியம். ஆண் வெளிமான் ஒரு திறந்த வெளிப்பகுதியைத் தனதாக்கிக்கொண்டு சில பெண் மான்களுடன் வசிக்கும். வேறு ஆண் மான்கள் அப்பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். இது அவற்றின் உணவுப் பழக்கத்தில் மட்டுமன்றி இனப்பெருக்கத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.

இதுபோன்ற புல்வெளிப் பகுதிகள் இப்பூங்காவில் குறைந்துவிட்டன. உதாரணத்துக்கு, காத்தான் கொல்லை எனப்படும் கே.கே. குளத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த புல்வெளி நிலம், கத்திச் சவுக்கு மரத்தால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது . தற்போது எஞ்சியிருக்கும் நிலத்தில்தான் போலோ மைதானம் இருக்கிறது. இந்தப் பூங்காவின் மொத்தப் பகுதியில் சுமார் 3 சதவீதப் பரப்பளவில் போலோ மைதானம் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு போலோ போட்டிகள் நடத்தப்பட்டுவந்தன. பின்னாட்களில், வெளிமான்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அந்தப் போட்டிகள் கைவிடப்பட்டன.

வெளிமான்களுக்கு ஆபத்து

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சில நாளிதழ்களில் வெளிவந்த செய்தி சென்னையின் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தப் பூங்காவில் மீண்டும் போலோ போட்டிகளை நடத்த ஆளுநர் அலுவலகம் முடிவு செய்திருப்பதுதான் அந்தச் செய்தி!

இந்த பூங்காவிலேயே, வெளிமான்கள் எப்போதும் காணப்படும் பகுதி இந்த மைதானம்தான். 230 x 160 மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பகுதியில் மட்டும் சுமார் 67 வகையான புல், கோரை, மூலிகை வகைகள் சேகரிக்கப்பட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்த மைதானத்தின் புல்வெளியைச் சார்ந்தே இங்கு வாழும் வெளிமான்களின் உணவும் இனப்பெருக்கமும் இருப்பதால், இந்தப் புல்வெளியை வேறு பயன்பாட்டுக்குத் திருப்பாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. போலோ மைதானம் உள்ளிட்ட பகுதிகள் காப்புக் காட்டின் ஒரு பகுதியாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் சில பிரச்சினைகள்

கிண்டி காட்டின் தொடர்ச்சிக்கு இடையூறாக ராஜ்பவன், ஐ.ஐ.டி. பகுதிகளில் உள்ள சுற்றுச்சுவர்கள் அமைந்துள்ளன. இதனால் காடு துண்டாக்கப்பட்டதன் காரணமாக உயிரினங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே வாழவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் வெளிமான்கள், நரிகள் போன்றவை உள்இனச்சேர்க்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன.

விளைவாக குட்டிகளுக்கு உறுப்பு குறைபாடுகள், மரபணு சார்ந்த பரம்பரை நோய்களும் கோளாறுகளும் ஏற்படும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அது மட்டுமல்லாமல் இந்தப் பகுதிகளில், நாய்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால் அவை குட்டி மான்கள் அல்லது காயமடைந்த மான்களை வேட்டையாடிக் கொல்வதும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

கிண்டி தேசியப் பூங்கா மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தேசியப் பூங்காவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே, தமிழகத்தின் பெருமையாகத் திகழும் வெளிமான்கள் பாதுகாக்கப்படும். அரசு இதை கவனத்தில் கொண்டு செயல்படுமா என்ற கேள்வி இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரிதாக எழுந்துள்ளது.

கட்டுரையாளர், காட்டுயிர் செயல்பாட்டாளர் தொடர்புக்கு: mcwhale.t@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்