ஒரு செடி உயிர்வாழப் பெருமளவு தேவைப்படும் சத்துகள் கரிமம் (கார்பன்), ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய மூன்று தனிமங்கள். இவை காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் பெறப்படுகின்றன. ஏறத்தாழ 95 விழுக்காடு ஊட்டங்கள், இதன் மூலமே நிறைவு செய்யப்படுகின்றன. இப்படி இந்த ஊட்டச்சத்துகளே பெரும்பகுதி ஆனபோதிலும், ஓர் உயிரினம் நீடித்து வாழ இவை மட்டுமே போதுமானதாக இல்லை. மீதமுள்ள ஐந்து விழுக்காடு ஊட்டங்களும் அவசியமாகின்றன. இவை மிக அவசிய ஊட்டங்கள் எனப்படுகின்றன.
தழைச்சத்து எனப்படும் நைட்ரஜன், மணிச்சத்து எனப்படும் பாஸ்பரஸ், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ், சுண்ணம் என்கிற கால்சியம், மக்னீசியம், கந்தகம் ஆகியவையும் தேவைப்படுகின்றன. இவற்றைப் பேரூட்டங்கள் என்று அழைப்பார்கள். இவை தவிரப் போரான், செம்பு, இரும்பு, மாங்கனீசு, மாலிப்டினம், துத்தநாகம் ஆகிய நுண்ணூட்டங்களும் தேவைப்படுகின்றன.
முறைகேடான மேலாண்மை
மேற்கண்ட சத்துகள் தொடர்ச்சியாக மண்ணில் இருந்து உயிர்களுக்கும், அவை மடிந்த பின்னர் மண்ணுக்கும் மாறி மாறிச் செல்கின்றன. இதன் மூலம் கதிரவனின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. அதனால் விளைச்சல் கிடைக்கிறது. இதை ஒரு பண்ணையாளர் எவ்வாறு திறம்பட மேலாண்மை செய்கிறாரோ, அந்த அளவுக்கு அவருக்குப் பயன் கிட்டும்.
ஆனால், பெரும்பாலான பண்ணைகளில் இவை முறைகேடாக மேலாண்மை செய்யப்படுகின்றன. குறிப்பாக அளவுக்கு அதிகமாக உழவு செய்யப்படுவதால் வளமான மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. முறையாக வரப்பு அமைக்கப்படாததாலும் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. ஆண்டுதோறும் 7,500 கோடி டன் மேல்மண் அடித்துச் செல்லப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடலுக்குச் செல்லும் இந்த மண் ஊட்டங்கள் அங்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றன.
ஆக்கமும் அழிவும்
கால்நடைக் கழிவுகள், சாணம், சிறுநீர் போன்றவையும் மனிதக் கழிவுகளும் முறையாக மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாததால், அவை மாசுபாடாக மாறி நோய்களைப் பரப்புகின்றன.
அதேபோலத் தேவையற்றவை என்று நாம் கருதும் களைகளும் பண்ணையில் இன்றியமையாத பங்கை ஆற்றுகின்றன. ஆழமான வேர்களைக் கொண்ட களைகள் மண்ணுக்குள் இருந்து ஏராளமான சத்துகளை வெளிக்கொண்டு வருகின்றன. மேல்மண் இழந்த சத்துகளை மீட்பதில் களைகள் இவ்வாறு பங்காற்றுகின்றன.
இப்படியாக ஊட்டச் சுழற்சி மட்டுமல்லாது, கரிமச் சுழற்சி, நீர்ச் சுழற்சி, தழைச்சத்து சுழற்சி முதலிய சுழற்சிகள் நிலத்தில் இயற்கையாகவே நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதனால் ஆக்கமும் அழிவும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.
முடிந்தவரை சுழற்சி
பண்ணை வடிவமைப்பில் இந்த அடிப்படையான விதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாட்டில் இருந்து கிடைக்கும் கழிவான சாணத்தைச் சாண எரிவாயுக் கலனில் சேர்த்தால் அவை நுண்ணுயிர்களுக்கு உணவாகி எரிவாயுவைத் தரும், எரிவாயுக் கலனில் இருந்து கிடைக்கும் சேறு, மண்புழுக்களுக்கு உணவாக மாறும். அந்த மண்புழுக்களை மீன்களுக்கோ கோழிகளுக்கோ உணவாக மாற்ற வேண்டும்.
மீன் குட்டையில் உள்ள நீரானது சத்துமிக்க அமினோ அமிலங்களைக் கொண்டது, அதைப் பயிர்களுக்குப் பாய்ச்ச வேண்டும். இப்படி எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சுழற்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும். சுழற்சி முறையில் இயற்கை அளிக்கும் இந்த ஊட்டத்துக்குத் தனியாக எந்தச் செலவையும் நாம் செய்வதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
(அடுத்த வாரம்: இசைந்து வாழ்ந்தால் வெற்றி )
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago