வார்தா புயலால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகளின் வீடுகளுக்கு அழையாவிருந்தாளி களாக, அதேநேரம் சில பகுதிகளுக்கு கூட்டம்கூட்டமாக வந்து சேர்ந்தன அரிய வகைப் பறவைகள்.
வார்தா புயலின் கடுமையான சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நீர்வாழ் பறவைகள், கடல் சார்ந்த பறவைகள் நகரின் உயர்ந்த அடுக்குமாடிகளிலும், வீடுகளிலும் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்தன. சாதாரண நாட்களில் நீர்நிலைகளுக்குச் சென்றால்கூட வெறும் கண்களால் தெளிவாகப் பார்க்க முடியாமல், சற்று தள்ளி எட்டத்தில் இருந்த பறவைகளை சென்னைவாசிகள் அன்றைக்கு கைக்கு அருகில் தரிசிக்க முடிந்தது.
புதிய புகலிடங்கள்
சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான கடல்காகங்கள் தஞ்சமடைந்திருந்தன. பொதுவாக விமான நிலையப்பகுதிக்கு அவை செல்வதில்லை. வார்தா புயல் காரணமாக அங்கே அவை தஞ்சமடைந்திருந்தன.
சென்னை அண்ணாசாலையில் உள்ள ‘தி இந்து' ஆங்கில அலுவலகத்தில் செம்பிட்டத் தகைவிலான் (Red-rumped swallow) பறவை நூற்றுக்கணக்கில் தஞ்சமடைந்திருந்தது. நாடு முழுவதும் காணப்படும் இப்பறவையை சென்னையில் கூவம், அடையாறு பகுதிகளில் காணலாம். “சுவர் உத்திரங்களில் சேற்றைக் கொண்டு கூடு அமைக்கக்கூடிய வித்தியாசமான பண்பைக் கொண்டது இப்பறவை. காற்றில் உள்ள பூச்சிகளை வேட்டையாடி உண்ணக்கூடியது,” என்கிறார் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன்.
சாதாரணமாகக் கடலில் தென்படக்கூடிய ஆலா, நீர்நிலைகளில் காணப்படும் கொக்குகள், நாரைகள் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் இப்படித் தஞ்சமடைந்திருந்ததாக இயற்கையாளர்கள் தெரிவித்தனர்.
செம்பிட்டத் தகைவிலான்
சீற்றத்திலிருந்து தப்பி...
பொதுவாக இந்தப் பறவைகள் தங்களுடைய வாழிடங்களிலும் உணவு தேடும் இடங்களிலும் காணப்படும். பறவைகள் தொடர்ந்து பறந்துகொண்டே இருப்பதற்கு இரை தேவை. வார்தா புயல் தாக்கிய நேரத்தில் காற்றின் சீற்றம் ஒரு பக்கம் அவற்றைத் தள்ள, இரை கிடைக்கும் வாய்ப்பு சுத்தமாக இல்லாமல் போனது.
பெரும் வேகத்தில் வீசும் புயல் காற்றின் சுழற்சி பறவைகளை உள்ளிழுத்துவிடக் கூடியது. உள்ளிழுக்கப்பட்ட பறவைகளால் உயிர் தப்ப முடியாது. காற்றின் வேகத்தை மீறி பறக்க முடியாத பறவைகள், அன்றைக்கு பறப்பதற்கான ஆற்றலையும் இழந்திருந்தன. இதன் காரணமாகவே, அதுவரை எட்டிப் பார்க்காத கட்டிடங்களிலும் வீடுகளிலும் பாதுகாப்புக்காக அன்றைக்கு அவை தஞ்சமடைந்திருந்தன. கட்டிடங்களின் காற்று வீசாத பகுதியிலேயே அவை இருந்தன.
இந்தப் பறவைகளை தொந்தரவு செய்யாதவரை இரண்டொரு நாட்களில் தங்கள் உடல் வலுவைத் திரும்பப் பெற்றுவிடும். தங்கள் இயல்பான வசிப்பிடங்களுக்கும் திரும்பிவிடும். தஞ்சம் புக வாய்ப்பு கிடைத்த நீர்ப்பறவைகள், கடல்பறவைகள் இப்படி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டன.
கேள்விக்குறி
மற்றொருபுறம் இளைப்பாறும் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்ததாலும், ஒடிந்து விழுந்ததாலும், கூடுகள் சேதமடைந்ததாலும் சென்னையில் வாழ்ந்த நிலப்பகுதி சார்ந்த பெருமளவு பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உணவு தரும், பாதுகாப்பு தரும், கூடு கட்ட வாய்ப்பாக இருக்கும் மரங்களின் எண்ணிக்கை குறைந்ததால் வரும்காலத்தில் சென்னையில் பறவைகளின் நிலை திண்டாட்டமாகவே இருக்கும்.
எப்படி உதவுவது?
வார்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் அடுக்குமாடிகள், பெரும் கட்டிடங்கள், வீடுகளில் தஞ்சமடையும் பறவைகளை தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் நாம் அவற்றுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி. அவை நமக்கு எந்தப் பிரச்சினையும் தரப் போவதில்லை. நாமும் அந்தப் பறவைகளுக்கு எந்த உணவையும் தர வேண்டியதில்லை. உயிர்பிழைக்கும் ஆற்றல் அவற்றுக்கு இயற்கையாகவே அதிகம். அத்துடன் குறிப்பிட்ட பறவை வகையின் உணவு என்ன என்பது நமக்குத் தெரியாது. நாம் தரும் உணவை ஒரு வேளை சுவைத்துப் பார்க்கும் நிலையில், தேவையற்ற உடல்நலப் பிரச்சினைகளில் அவை சிக்கக் கூடும். இதுபோன்ற பேரிடர் காலங்களில் அவற்றுக்குத் தேவைப்படுவதெல்லாம் பாதுகாப்பான இடமும் ஓய்வும்தான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago