2016 சுற்றுச்சூழல் சர்ச்சைகள்

By ஆதி வள்ளியப்பன்

ஆண்டுக்கு ஆண்டு தீவிரமடைந்து வரும் சுற்றுச்சூழல் சீரழிவில் 2016-ல் கவனத்துக்கு வந்த முக்கியச் சர்ச்சைகள் என்னென்ன?



அழியும் பேருயிர்

மனிதர்கள் காடுகளை ஆக்கிரமிப்பதும் அழிப்பதும் தீவிரமடைந்து வரும் நிலையில், வேறு வழியில்லாமல் அதிக எண்ணிக்கையில் காட்டுக்கு வெளியே காட்டுயிர்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. காட்டுக்குள் கல்வி நிறுவனங்கள் முதல் ஆன்மிக நிறுவனங்கள்வரை பலவும் இருப்பது பிரச்சினையை மோசமாக்குகிறது. ‘காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல்’ இந்த ஆண்டின் மிக முக்கியச் சுற்றுச்சூழல் பிரச்சினையாகி இருக்கிறது. யானைகள், புலிகள், சிறுத்தைகள் எனப் பெரிய உயிரினங்கள் முதல் சிற்றுயிர்கள்வரை பலியாவது கணக்கற்று அதிகரித்துவிட்டது.

மின்வேலிகளில் சிக்குதல், ரயிலில் அடிபடுதல், பிடிபட்ட பிறகு இறப்பு எனப் பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் பல யானைகள் பலியாகின. இவற்றில் கோவை, சத்தியமங்கலம், மங்களூர் இடையிலான ரயில்களில் அடிபட்டுப் பல யானைகள் பலியாகின. இந்த ரயில் பாதையில் ரயில்களை வேகமாக ஓட்டக் கூடாது என்ற வழிகாட்டு நெறிமுறை இருந்தும், அது பின்பற்றப்படவில்லை. அத்துடன் மதுக்கரையில் பிடிபட்ட மகராஜ் என்ற யானையின் இறப்பு பெரும் சர்ச்சைக்குள்ளானது. ‘மனித காட்டுயிர் எதிர்கொள்ளல்’ தொடர்புடைய அனைவரும் அறிவியல்பூர்வமாகத் தீர்வுகளை அணுகாமல் தற்காலிகத் தீர்வுகளைத் தேடும்வரை, நிரந்தரத் தீர்வு கானல் நீரே.



பாதரசத் தொழிலாளர்களுக்கு வெற்றி

கொடைக்கானலில் தற்போது செயல்பாட்டில் இல்லாத இந்துஸ்தான் யுனிலீவர் பாதரச ஆலையால் தொழிலாளர்களுடன் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து பல்வேறு வகைகளில் போராடி வந்தனர். இதில் ராக் இசை நிகழ்ச்சி, யூடியூப் ராப் பாடல் வரை பல்வேறு போராட்ட வடிவங்கள் பயன்படுத்தப்பட்டன. கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க யுனிலீவர் நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது.



திரும்பப் பெற்றது துறைமுகம்

கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுகம் ஆகிய பகுதிகளில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தது. இதனால் பழவேற்காடு தொடங்கி எண்ணூர் வரையிலான கடற்கரை மீனவக் கிராமப் பகுதிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட ஆரம்பித்தது. இதற்கு எதிராக எண்ணூர் மீனவர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து பல்வேறு வகைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகமும் தமிழ்நாடு மின்சார வாரியமும் சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமிக்கும் செயல்பாட்டிலிருந்து விலகிக் கொண்டுள்ளன. கொசஸ்தலை ஆற்றை மறித்துக் கொட்டப்பட்ட மண்ணை எண்ணூர் அனல் மின் நிலையம் அகற்ற ஆரம்பித்திருக்கிறது.



திமிங்கிலங்களின் விநோத இறப்பு

2016 பொங்கலுக்கு முன்னதாகத் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளான மணப்பாடு, தூத்துக்குடி அருகே வழக்கத்துக்கு மாறாக மிகப் பெரிய, அடர் நிறம் கொண்ட திமிங்கிலங்கள் வழிதவறி ஒதுங்கியிருந்தன. கடற்கரையின் ஐந்து கிலோமீட்டர் பரப்பில் பரவிக் கிடந்த அவை, தத்தளித்துக்கொண்டிருந்தன. ஒதுங்கிய 95 திமிங்கலங்களில் 45 இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விநோத நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



மணல்கொள்ளைக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழகம் எங்கும் இந்த ஆண்டும் மணல்கொள்ளை பரவலாகத் தொடர்ந்தது. காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் அள்ளிவரும் மணல் குவாரிகளை ரத்து செய்யவேண்டும், புதிய மணல் குவாரித் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி, புகளூர், தவுட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி, நடையனூர் பகுதி மக்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இதில் முக்கியச் செயல்பாட்டாளர்களைத் தாக்குகிற போக்கும் அதிகரித்து வருகிறது.



சிறையில் சித்திரவதை

சேலத்தில் மேம்பாலப் பணியைத் தடுத்ததற்காகக் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் பியுஷ் மனுஷ் ஜூலை மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரை விடுவிக்கப் பல்வேறு பிரசாரங்கள் நடைபெற்றன. ஒரு வாரம் கழித்து ஜாமீனில் அவர் வெளிவந்தார்.



வேண்டாம் இனயம் துறைமுகம்

கேரளத்தின் விழிஞ்ஞத்தில் தனியார் சரக்குத் துறைமுகத்தை அதானி நிறுவனம் கட்டிவருகிறது. இத்தகைய சூழலில் அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் தமிழகத்தின் குளச்சல் அருகே இனயதில் மற்றொரு சரக்குத் துறைமுகம் அமைக்க முயற்சிக்கப்படுகிறது. சுமார் 1,830 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்தத் துறைமுகத்தாலும் அதை ஒட்டிய சாலை கட்டுமானத்துக்கும் பெரும் எண்ணிக்கையில் மீனவ மக்கள் புலம்பெயர்தலும், சுற்றுச்சூழல் தாக்கங்களும் ஏற்படும் என்று வலியுறுத்தி, இந்தத் துறைமுகத்துக்கு எதிராக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘இந்தத் துறைமுகம் அமையும் பட்சத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்ட மீன் சுவையாக இருக்கும். இனயம் துறைமுகம் வந்தால், கன்னியாகுமரிக்கு அந்தப் பெருமை இருக்காது’ என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.



கூடங்குளம் அணுஉலைப் பூங்கா?

கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் முதல் அணுஉலை என்று அறிவிக்கப்பட்ட இந்த அணுஉலையின் திறப்புவிழா காணொளியிலேயே முடிந்தது. அத்துடன், ஆகஸ்ட் மாதத்தில் கூடங்குளம் அணுஉலையில் 4, 5, 6, 7, 8 ஆகிய புதிய அணுஉலைகளுடன் அணுஉலை பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரஷ்ய அரசுடன் இந்திய அரசு செய்துகொண்டது. இதற்கு எதிராகவும் அணுஉலைக் கழிவைச் சேமிப்பதற்கு எதிராகவும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.



புரட்டிப்போட்ட வார்தா

தமிழகத்தில் 2015-ம் ஆண்டு வெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி 130 கி.மீ. வேகத்தில் வந்த வார்தா புயல், சென்னையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. உயிர்சேதம் கடுமையாக இல்லாதபோதும், உடைமை சேதம் மிக மோசமாக இருந்தது. சென்னையின் வெப்பத்தைக் குறைத்து, குளிர்ச்சியை வழங்கி வந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்தன. இதன் காரணமாக வெப்பம், காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்றவை முந்தைய ஆண்டுகளைவிட கடுமையாக அதிகரிக்கும். அத்துடன் பெயர்ந்து விழுந்த மரங்களில் பெரும்பாலானவை ஆழமாக வேரோடாத அயல் மரங்கள் என்பதும் கவனத்துக்கு வந்தது.



கணக்கற்ற அழிவு: திருவண்ணாமலை, கன்னியாகுமரி

திருவண்ணாமலை அருணாசல மலையைச் சுற்றி, ஏழு மீட்டர் முதல் 10 மீட்டர்வரை கிரிவலப் பாதையை அகலப்படுத்தப்படும் பணி இந்த ஆண்டு நடைபெற்றது. இதன் காரணமாக வளர்ந்த அடர்ந்த-நெடிதுயர்ந்த மரங்கள், கோயில் காடுகள், இயற்கையான காட்டுப் பகுதிகள் அழிவுக்கு இலக்காகின. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தடை உத்தரவால் மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதேபோல, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாகக் களியக்காவிளை நாகர்கோயில் இடையிலான தேசிய நெடுஞ்சாலை 47, 47 பி ஆகிய சாலைகளில் இயற்கை பெருமளவு அழிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.ஹெச்.ஏ.ஐ) ஒப்பந்ததாரர் லார்சன் அண்ட் டூப்ரோ விதிமுறைகளைப் பின்பற்றாமல், 1.5 லட்சம் மரங்களை வெட்டி விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

100 ஆண்டு பழமையான மூன்று லட்சம் வளர்ந்த மரங்கள் (தென்னை, பனை, புளி, தேக்கு), 120-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள், 1,500 ஹெக்டேருக்கு மேலான வயல், 1,420 வாய்க்கால்கள், நூற்றுக்கணக்கான காட்டு ஓடைகள் அழிந்துவிடும் சாத்தியம் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 47, 47 பி நான்கு வழிச்சாலையின் பாதையில் உள்ள குளங்களை மூடக்கூடாது, மரத்தை வெட்டக் கூடாது என்றும் சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாய நீதிபதி (தெற்கு) ஆணை பிறப்பித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்