புரட்சிக்கு முந்தைய கியூபாவின் வேளாண்மை என்பது நிலவுடைமையின் எச்சங்களுடனும் முதலாளித்துவ நடைமுறைகளுடனும் இணைந்ததாக இருந்தது. 1959 புரட்சிக்குப் பின்னரும்கூட கியூபா ரசாயன உரங்களையே பெரிதும் நம்பி வேளாண்மையை மேற்கொண்டுவந்தது. ஆனால், நம்மைப் போல் கண்மூடித்தனமாக அந்தத் தவறைத் தொடர்ந்து செய்ய விரும்பவில்லை. ரசாயன வேளாண்மையின் மோசமான பின்விளைவுகளை விரைவிலேயே புரிந்துகொண்டு, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முன்வந்தது ஃபிடல் காஸ்ட்ரோ அரசு.
இயற்கை வேளாண்மைப் பாதையில் அடியெடுத்து வைத்து, இன்று வெற்றிகரமாக அப்பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
நெருக்கடி தந்த தீர்வு
கியூபாவின் உணவுத் தேவையைச் சோவியத் ஒன்றியம் அறுபது சதவீதம் பூர்த்தி செய்துவந்ததுடன், பெரும் பொருளாதாரத் துணைவனாகவும் இருந்து வந்தது. 1989-ல் சோவியத் சிதறிய நிலையில், அதற்கான மாற்றுத் திட்டங்களை முழுமூச்சுடன் செயல்படுத்த முனைப்புடன் இறங்கியது கியூப அரசு. 1990-களின் ஆரம்பத்தில் சோவியத் கூட்டமைப்பு சிதைந்து நொறுங்கியதன் காரணமாக, கியூபா இத்தகைய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகள் அனைத்திலும் மிக மோசமான தனிநபர் உணவு உற்பத்தியைக் கியூபா கொண்டிருந்தது. ஆனால், நெருக்கடிகளே புதிய வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கின்றன என்பதற்கு நல்லதொரு உதாரணமும் கியூபாதான்.
எங்கெங்கும் வேளாண்மை
உடனடி தீர்வுக்கான வழிகளாக, அவர்கள் மேற்கொண்ட முறைகள் அனைத்தும் வியப்பளிப்பவை. எங்கெல்லாம் வெற்றிடங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் மட்கு எரு (கம்போஸ்ட்), வளமான மண் இட்டு நிரப்பப்பட்டுப் பயிர்த்தொழில் மேற்கொள்ளப்பட்டது. தெருக்களின் நடைபாதைகள் உட்பட எதுவும் அதற்கு விலக்கு இல்லை என்ற நிலை உருவானது.
வேளாண்மைக்காகத் தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்கள், பள்ளி, கல்லூரிகள், விடுதிகள், முதியோர் இல்லங்கள் என எந்த இடமும் விட்டு வைக்கப்படவில்லை. இப்படிப் புதிதாக ஏற்படுத்தப்பட்ட விளைநிலங்கள் மட்டும் 81 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இருந்தன. இங்கு விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரேஷன் மூலமாக மக்களை எளிதாகச் சென்றடைந்தன.
இவை தவிர, வீடுகளின் பின்புறம் இருந்த சிறு தோட்டங்கள், முற்றங்கள், மொட்டை மாடிகள் போன்றவையும் தனிநபர் உணவு தானிய உற்பத்திக்கு வழிவகுத்தன. இப்படியாக நம்முடைய மொட்டை மாடித் தோட்டங்களுக்கும் கியூபா ஒரு முன்னோடி.
வீரியமடைந்த உற்பத்தி
இதற்கிடையில், 1992 மற்றும் 1996-ல் கியூப வேளாண்மைக்கு நெருக்கடி தரும் வகையில் டோரி செல்லி, ஹெல்ம்ஸ் பர்ட்டன் என்பது போன்ற பொருளாதார நெருக்கடி தரும் புதிய சட்டங்களை இயற்றி அமெரிக்கா நெருக்கடி கொடுத்தபோதும், கியூபா அதற்குக் கொஞ்சமும் அசரவில்லை. சொல்லப் போனால் உண்மையில் இந்தச் சட்டங்களும் தடைகளும் கியூபாவின் உணவு தானிய உற்பத்தியை மேலும் வீரியப்படுத்தின.
நகர்ப்புறம் சார்ந்த புதிய விவசாயிகள் பலருக்கும் விஞ்ஞானத் தொழில்நுட்ப ஆலோசனைகள், தகவல்கள் வழங்குவதற்காகவே தொழில்நுட்ப வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் நியமிக்கப்பட்டனர். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விதைகள், இயற்கை உரங்கள், பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு, அதற்கான ஆலோசனை மையங்களும் விளைநிலங்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டன.
நெல் உற்பத்தியைத் தீவிரப்படுத்தியதன் மூலம், அதன் விளைச்சல் மும்மடங்கு பெருகியது. லத்தீன் அமெரிக்காவில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் கியூபா இரண்டாம் இடத்தை எட்டியது.
மரபும் அறிவியலும் கூட்டாக…
ரசாயன உரங்களுக்கு மாற்றாகப் பசுந்தாள் உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாகச் சுயமாகத் தயாரிக்கப்பட்ட இயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதால், ரசாயனப் பயன்பாட்டு சதவீதம் பெருமளவு குறைந்தது. அனைத்துக் கழிவுகளும், ஆம்…. மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், வீணாகும் குப்பை போன்றவை மறுசுழற்சி செய்யப்பட்டு உரமாக மாற்றப்பட்டு வயல்களில் தூவப்பட்டன. அதேபோல, கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டுக் கரும்புத் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சப்பட்டது.
கரும்புச் சக்கையை எரித்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அது சர்க்கரை ஆலைகளில் பயன்பட்டது. இவ்வாறு சுற்றுச்சூழலை மாசு படுத்தாத வகையில் கழிவுப்பொருட்கள் அனைத்துமே, மறுசுழற்சிக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டதில் கியூபா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகச் செயல்பட்டது.
லத்தீன் அமெரிக்காவைப் பொறுத்தவரை வேளாண் சூழலியல் என்பது நவீனத் தொழிற்சாலை பாணி விவசாயத்துக்கு நேரெதிராக வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பண்ணைய அணுகுமுறையையே கொண்டிருந்தது. மேற்கத்திய அறிவியல் அறிவு, மரபு வழிப்பட்ட நிபுணத்துவம் ஆகிய இரண்டு உத்திகளையும் இணைத்து மேற்கொள்ளப்படும் உள்ளூர் உற்பத்தியை இப்போதுவரையிலும் கியூபா ஊக்குவித்துவருகிறது.
எட்டப்பட்டது உச்சம்
பெட்ரோலிய, இதர உதிரி பாகங்கள் கிடைக்காமல் போனதால், செயலற்றுப் போன டிராக்டர்களுக்கு மாற்றாக ஆயிரக்கணக்கான எருதுகள் பணிகளை மேற்கொண்டன. அதேநேரத்தில் விவசாயிகள் குழுக்களாக ஒருங்கிணைந்து உற்பத்தியை மேற்கொள்ளவும் தங்களது விளைபொருட்களைக் கூட்டாகச் சந்தைப்படுத்தவும், அதற்கேற்ற உற்பத்தி முறைகளை ஊக்குவிக்கவும், வேளாண்மை தொடர்பான சீர்திருத்தங்களையும் பரவலாக்கத்தையும் கியூப அரசு மேற்கொண்டது.
இறக்குமதி வேளாண் இடுபொருட்கள், சாதனங்களின் மீதான தங்களது சார்பைக் குறைத்து விவசாயத்தின் திசைவழியையே ஒட்டுமொத்தமாகத் திருப்பியதன் மூலம், கியூபாவின் உணவு உற்பத்தி உச்சத்தை எட்டி பிடித்தது. 1996 2005 காலகட்டம்வரை லத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளில் உணவு உற்பத்தியில் தேக்க நிலையை அடைந்திருந்த கியூபாவின் தனிநபர் உணவு உற்பத்தி, ஆண்டுக்கு 4.2 சதவீதத்தை எட்டிப்பிடித்திருந்தது மாபெரும் சாதனை.
ஆச்சரிய வளர்ச்சி
இன்றைக்கு கியூபாவின் சிறு விவசாயிகள் நாட்டிலுள்ள வேளாண் நிலங்களில் 25 சதவீதத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆனால், 65 சதவீத உணவு தானிய உற்பத்தியின் வழியாகத் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அவர்களே பெரும் பங்கைச் செலுத்துகிறார்கள்.
அத்துடன், 1990-ல் உருவான ஆரம்ப நிலை பொருளாதார நெருக்கடியின்போது தளர்ந்து உட்கார்ந்துவிடாமல், புறப்பட்ட ஏராளமான கியூப நகர்ப்புறத் தோட்டங்கள், உணவு உற்பத்திக்கான மிக முக்கிய வளங்களாக இன்றைக்கு வளர்ச்சியடைந்திருக்கும் நிலையையும் அவை பெற்ற வெற்றியையும் நாம் அண்ணாந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.
கியூபாவின் இயற்கை வேளாண்மை வளர்ச்சி: முக்கிய அம்சங்கள்
> கியூபாவில் 3,83,000 நகர்ப்புறப் பண்ணைகள், பயன்படுத்தப்படாமல் இருந்த 50,000 ஹெக்டேர் நிலங்களில் இவை அமைக்கப்பட்டுள்ளன.
> இப்பண்ணைகள் ஆண்டுக்கு 15 லட்சம் டன்களுக்கும் மேற்பட்ட காய்கறிகளை உற்பத்தி செய்கின்றன.
> எந்த ரசாயன உரங்களும் பயன்படுத்தப்படாமல் மிக அதிக உற்பத்தியை அளிக்கும் நகர்ப்புறப் பண்ணைகள் இவை.
> கியூபாவில் சதுர கிலோமீட்டருக்கு 20 கிலோ என்ற அளவு மகசூல் கிடைக்கிறது. உலகிலேயே மிக உயர்ந்த அளவு இது
> கியூபாவில் புதிதாகப் பறிக்கப்பட்ட காய்கறிகளில் 50% முதல் 70% வரையிலும் இந்த நகர்ப்புறப் பண்ணைகள் மூலமாகவே கிடைக்கின்றன.
> ஹவானா, வில்லா போன்ற பெருநகரங்களின் உணவுத் தேவையை, இந்தப் பண்ணைக் காய்கறிகளே நிறைவு செய்கின்றன.
> கியூபாவில் உள்ள 1.1 கோடி மக்கள்தொகைக்கும் இயற்கை வேளாண் முறையில் உணவளிக்கப் போதுமான ஆற்றல், அந்நாட்டு விவசாயிகளிடம் உள்ளது.
> இத்தனைக்கும் இன்னமும் பயிர் செய்யப்படாமல் இருக்கும் சமவெளி நிலங்களின் அளவு 60 லட்சம் ஹெக்டேர்.
> மேலும் 10 லட்சம் ஹெக்டேர் மென்சரிவு நிலங்களும் பயிரிடப்படாத வெற்றிடங்களும் எதிர்காலத் தேவைக்கு இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.
> இங்கெல்லாம் பயிர் செய்யப்படும் பட்சத்தில் சுற்றுலாத் தொழிலுக்கு உணவளிப்பது, அந்நியச் செலாவணியை ஈட்டுவதுடன், ஓரளவு உணவு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியமும் உள்ளது.
-
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago