புயல் தந்த பாடம்: வேரோடு சாய்ந்த உயிர்கள்!

By நவீன்

சுமார் 4000 மரங்கள்! தன் இருப்பை ‘வார்தா' புயல் மூலமாக சமீபத்தில் உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது இயற்கை. ‘வீழ்த்திய புயல்', ‘சூறையாடிய புயல்', 'விளையாடிய புயல்' என்றெல்லாம் பட்டம் சூட்டி, இயற்கையின் மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, 'நம் வேலை முடிந்தது' என்று தப்பித்து ஓடிவிட முடியாத அளவுக்கு நகரெங்கும் பச்சை அடர்ந்திருக்கிறது... மரங்களில் அல்ல, எல்லாம் சாலைகளில் கீழே வீழ்ந்து கிடக்கிறது!

நகரத் திட்டமிடுதலில் நம் முட்டாள் தனத்தைச் சாயம் வெளுக்கச் செய்திருக் கிறது அந்தப் பச்சை. அது எப்படி என்பதைத் தான் சொல்கிறது மேலே குறிப்பிடப்பட்ட வீழ்ந்த மரங்களின் கணக்கு.

இழப்பின் வலி புரிகிறதா?

'வார்தா' புயலால் சுமார் 4 ஆயிரம் மரங்கள் வேரோடு வீழ்ந்துவிட்டன என்று சொல்கின்றன ஊடகங்கள். இது அரசு காட்டும் கணக்கு. இது குறித்து, ஒரு ஊடகவியலாளர் தன் முகநூல் பக்கத்தில், ‘இந்தக் கணக்கை மனித உயிர்களுக்குப் பொருத்திப் பார்த்தால், இழப்பின் வலி தெரியும்!' என்று பதிவிட்டிருந்தார்.

அரசின் கணக்கில் வராமல் இன்னும் சில ஆயிரம் மரங்களாவது வீழ்ந்திருக்கக் கூடும். அந்த ஊடக நண்பர் சொல்கிற பார்வையில் பார்த்தால், ‘ஐயோ' என்று மனம் பதறுகிறது.

இப்போதுதான் தெரிகிறது

இயற்கைப் பேரிடர்கள் என்றால் நிலநடுக்கம், வெள்ளம், ஆழிப்பேரலை என்பதாக மட்டும் நம்பிக் கொண்டிருக்கிறோம். புயலைக்கூட ‘இரண்டு நாள் மழை பெய்யும், அவ்வளவுதான்' என்கிற ரீதியிலேயே நாம் வைத்திருக்கும் பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள் புரிந்து வைத்திருக்கின்றன.

தாணே புயலின்போது கடலூர் மாவட்டத்தில் பலா, முந்திரி மரங்கள் போன்றவை வேரோடு சாய்ந்தன. அப்போதுகூட, அது ஒரு பொருளாதார இழப்பு என்கிற வகையிலேயே பார்க்கப்பட்டது. ‘வார்தா' புயலின்போது ரோட்டோர மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்துக்கும் மின்சாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்போதுதான், இதுவும் இயற்கைப் பேரிடர்தான் என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறோம்.


படம்:ஆர்.ரகு

மனிதர்களுக்கு பாரமில்லை

இந்தப் புயலால் வீழ்ந்த மரங்களை எல்லாம் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் பெரும்பாலும் அவை வெளிநாட்டைச் சேர்ந்த அயல் மரங்களாக இருப்பதை அறிய முடியும். அடித்த காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்தவற்றில் பெரும் பாலானவை, குல்மோஹர், தூங்குமூஞ்சி மரம் போன்ற அயல்நாட்டு மரங்கள்.

ஆனால் மகிழம், வேம்பு, ஆல், புங்கை, கடம்பு, அத்தி உள்ளிட்ட உள்நாட்டு அல்லது ‘இயல்' மரங்களில் பெரும் பாலானவை புயலைத் தாக்குப்பிடித்து நின்றிருக்கின்றன. சேதாரத்திலிருந்து அவை தப்பவில்லை, கிளைகள் உடைந்து விழுந்திருக்கின்றன. மற்றபடி, வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்து, மனிதர்களுக்குப் பாரமாக இருக்கவில்லை.

“பெரும்பாலான அயல் தாவரங்களின் வேர் மண்ணுக்குள் ஆழமாகச் செல்லாது. அதனால் புயல் காற்றைத் தாங்குவதற்கான திறனை அவை கொண்டிருப்பதில்லை. அந்தத் தாரவரங்களின் மரபணு அமைப்புதான், அந்தத் திறன் இல்லாமல் போனதற்குக் காரணம். அத்துடன் இயல் மரங்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ள வடிவமைப்புதான், புயலின்போது அந்த மரங்களைச் சாய்த்து விடாமல் காப்பாற்றுகிறது” என்கிறார் பாரதிதாசன் பல்கலைக்கழக தாவரவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவரான பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.

மரங்களின் காவலர்களா?

தென்னிந்தியாவும் குறிப்பாகச் சென்னையும் உலர் பசுமையிலைக் காடுகளைக் கொண்ட பகுதிகள். அதற்கேற்ற வகையில்தான் மரங்களை நட வேண்டும். ஆனால், நகர வடிவமைப்பின்போது, நம் மண்ணுக்கும் வாழிடச் சூழலுக்கும் உகந்த மரங்களைத் தேர்வு செய்யாமல், வெறும் அழகுக்காக அலங்காரத் தாவர வகைகள், மரங்கள் அதிகம் நடப்படுகின்றன. இந்த அலங்கார மரங்கள் பெரும்பாலும் அயல் மரங்களாக இருக்கின்றன. இன்று குடியிருப்புப் பகுதிகள் பலவற்றில் வேரோடு விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிற மரங்களில் பெரும்பாலானவை, இந்த வகையான மரங்கள்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தோட்டக்கலைத் துறை நிபுணர்களின் கூற்றுப்படி, பெரும்பான்மையான மக்கள் வெறும் அழகுக்காக மட்டுமே மரம் வளர்க்கிறார்கள். அப்படி மரம் வளர்ப்பது பிரச்சினை அல்ல. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளியில், அந்த மரங்களின் கிளைகளைக் கத்தரித்துவிட வேண்டும். அடிக்கடி புயல், வெள்ளத்தைச் சந்திக்கும் சென்னை போன்ற கடலோரப் பெருநகரில், இத்தகைய பணிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்கிறார்கள் துறை சார்ந்தவர்கள்.

'மரங்கள் மண்ணின் உயிர்கள்' என்று சுவர்களில் எழுதி வைத்தால் மட்டும் போதாது. அவற்றைப் பராமரிக்கவும் தெரிந்திருந்தால்தானே ‘மரங்களின் காவலர்கள்' என்று நம்மை நாமே பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். இல்லையா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்