தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 10: இயற்கை தரும் இலவசத்தை அறுவடை செய்கிறோமா?

By பாமயன்

“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆற்றலை ஒரு வடிவில் இருந்து மற்றொரு வடிவத்துக்கு மாற்றலாம்'' என்பது வெப்ப இயங்கியல் விதி (law of thermodynamics). அது மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல் நிலையானது. அது தொடர்ந்து பாழ்பட்டுக்கொண்டேவருகிறது. பயனற்றதாக ஆகும் இந்த நிலைக்குப் பாழாற்றல் (entropy) என்று பெயர்.

கதிரவனிடம் இருந்தே நமக்கு எல்லா ஆற்றலும் கிடைக்கிறது. இந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் ஒரு முறையை இன்னும் நாம் கண்டறியவில்லை. எனவே, பயன்படுத்தப்படாமல் அந்த ஆற்றல் பாழாகிறது. இப்படி முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகும் ஆற்றலையே, பாழாற்றல் என்கிறோம்.

கடலில் இருக்கும் நீரானது கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகி, மழையாகி மலைகளிலே பொழிகிறது. அது பின்னர் அருவிகளாக, ஆறுகளாக மாறி மீண்டும் கடலை அடைகிறது. இந்தச் சுழற்சி ஓட்டத்தில் வெப்ப ஆற்றலானது, இயக்க ஆற்றலாக (kinetic energy) மாறும் நிலையைப் பார்க்க முடியும். இந்த இயக்க ஆற்றலை, அதாவது ஓடும் நீரில் ஒரு கருவியைப் பயன்படுத்தி மின்னாற்றலாக மாற்ற முடியும். இல்லாவிட்டால் எல்லையற்ற கதிரவனின் வெப்ப ஆற்றல் வீணாகிவிடும்.

ஆற்றலை வீணடிக்கிறோம்

இந்த அறிவியல் விதியை நாம் பயிர்களில் பொருத்திப் பார்ப்போம். வெயில் ஆற்றல் மூலம் நமக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தில் ஒரு சதுர அடியில் ஏறத்தாழ 1,200 கிலோ கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இந்த ஆற்றலை ஒளிச்சேர்க்கை மூலம் பசுஞ்செடிகள் குளுகோஸ் எனப்படும் அடிப்படைச் சர்க்கரையாக மாற்றுகின்றன. நன்கு வளர்ந்த மூன்று திராட்சை இலைகள் ஒரு சதுர அடி அளவில் இருக்கும். இவை 12 கிலோ கலோரி வெயிலைச் சர்க்கரையாக மாற்றுகின்றன. அப்படியானால் ஒரு விழுக்காடு வெயில் ஆற்றல் மட்டுமே இங்குப் பயனாகிறது. மீதமுள்ள 99 விழுக்காடு பாழாகிறது.

இதேபோல ஒரு கிலோ எடை உள்ள பச்சைச் செடியைக் காய வைத்தால், அதன் எடை ஏறத்தாழ 300 கிராம் இருக்கும். அதையே எரித்தோமானால் ஏறத்தாழ 30 முதல் 70 கிராம் இருக்கும் (இது செடியைப் பொறுத்து மாறுபடும்). இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், செடி காய்ந்தபோது நீரானது ஆவியாகிப்போகிறது. எரிந்தபோது கரிப்புகையாகக் கார்பன்டைஆக்சைடு போகிறது, இரண்டிலும் எஞ்சியிருக்கும் சாம்பல் மட்டுமே மண்ணில் இருந்து எடுக்கப்பட்டது. அப்படியானால் மண்ணில் இருந்து எடுக்கப்பட்டது 30 கிராம் என்றால் அந்த மண் நமக்கு விளைச்சலாகக் கொடுத்தது 1,000 கிராம் ஆகும். அப்படியானால், இயற்கை நமக்கு எத்தனை மடங்காகத் திருப்பித் தந்திருக்கிறது.

படைப்பாற்றல் தேவை

இதிலிருந்து பண்ணைக் கழிவை நாம் எரித்துவிட்டோமானால், எவ்வளவு மடங்கு ஆற்றலை வீணாக இழக்கிறோம் என்பது தெளிவாகும். இப்படிப் பண்ணைக் கழிவை, குறிப்பாகத் தென்னந்தோப்புக்கு உள்ளேயே கால்வாய் போன்ற அகழிகளை அமைத்துத் தென்னை மட்டை உட்பட அனைத்தையும் போட்டதால் பயன்பெற்ற உழவர்கள் அதிகம்.

சத்தியமங்கலம் சுந்தரராமன் (98427 24778), பொள்ளாச்சி மது ராமகிருஷ்ணன் (94424 16543), சிவகாசி கஜேந்திரன் (99430 95750) என்று இந்தப் பட்டியல் நீளமானது. கழிவானாலும் சரி, நீரானாலும் சரி, வெயிலானாலும் சரி - அவையாவும் நமக்கு ஆற்றல் வடிவங்கள். நாம் எப்படியெல்லாம் படைப்பாற்றல் அறிவைப் பயன்படுத்தி அந்த ஆற்றலை அறுவடை செய்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் வெற்றி காண முடியும்.

(அடுத்த வாரம்: இயற்கையில் எதுவும் கழிவில்லை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

30 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்