‘பாதுகாப்பு பற்றி பேசிக்கொண்டே இயற்கையைச் சீரழித்துக்கொண்டிருக்கிறோம்’ - சு. தியடோர் பாஸ்கரன் நேர்காணல்

By ஆசை, ஆதி வள்ளியப்பன்

பஞ்சாப்-ஹரியாணாவில் தொடங்கிக் கர்நாடகம்-தமிழ்நாடுவரை நதிநீர் பங்கீட்டு தகராறுகள், மறுபுறம் நதிநீர் இணைப்பே இதற்குத் தீர்வு எனும் குரல்கள், வளர்ச்சித் திட்டங்களை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தினால் நாடு பொருளாதார வல்லரசாகிவிடும் என்பதைப் போன்று அரசியல்வாதிகள் முன்வைக்கும் நம்பிக்கைகள் - இவை அனைத்துமே ஏதோ ஒரு வகையில் சூழலியலைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்தப் பின்னணியில் இப்பிரச்சினைகள் சார்ந்து மூத்த சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரனிடம் மேற்கொண்ட நேர்காணல்:

நதிநீர் இணைப்பு இன்றைக்கு உள்ள நீர் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவிடும் என்று பேசப்படுகிறது. இது சாத்தியம்தானா?

ஒரு நாட்டுக்கான அடையாளம் அதன் பொருளாதாரம், அதிகாரம், படை பலத்தால் உருவாவது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நதிகள், கடற்கரை, மலைகள், காடுகள் போன்ற இயற்கை அமைப்புகளாலும் அந்த அடையாளம் உருவாகிறது. வளர்ச்சி என்ற பெயரில் இன்றைக்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அரசு நினைக்கிறது. இதில் திருத்த முடியாத - திரும்பிச் செல்ல முடியாத தவறுகளும் இழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. நதிகள் இணைப்பை எடுத்துக்கொண்டால், நம் நாட்டில் எந்த நதியும் ஒரே தளத்தில் ஓடவில்லை. இயற்கை நிலவாகுக்கு ஏற்ப நதிகள் பாய்கின்றன; தாமாகவே இணைந்து கொள்கின்றன. காவிரியுடன் அமராவதியும், துங்காவுடன் பத்ராவும் இணைந்துள்ளது போல. நதிகள் தாழ்வான பகுதியை நோக்கியே பாயும். இயற்கையை மாற்ற முடியாது.

நதி என்பது பல்லூழி காலமாக உருவான ஒரு வாழிடம். அதை சீண்டக் கூடாது. ஏற்கெனவே, அணைகளைக் கட்டி பல நதிகளை நாம் கொன்று விட்டோம். நதிகள் இணைப்பு, அதை இன்னும் மோசமடையச் செய்யும்.

நதிநீர் இணைப்புத் திட்டங்கள் தோல்வியடையும் என்பதற்கு உதாரணங்கள் இருக்கின்றனவா?

நதிகளை இணைப்பது என்பது சாலை போடுவது போன்ற வேலையல்ல. நதி நீர் இணைப்பு என்பது போகாத ஊருக்கு வழிகாட்டுவது போன்றது.

ரஷ்யாவில் ஏரல் கடல் என்ற பிரம்மாண்டமான ஏரி, நதிகளை இணைத்த காரணத்தால் முழுமையாகச் சீரழிந்து விட்டது. 1937-ல் வைகை - பம்பை நதிகளை இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு, எதிர்விளைவுகளைக் கணக்கில் கொண்டு கைவிடப்பட்டது. தீபகற்ப இந்தியாவின் நதிகளை இணைப்பதற்காக ‘கார்லேண்ட் கேனால் ஸ்கீம்’ (Garland Canal Scheme) என்ற திட்டம் இந்திரா காந்தி அமைச்சரவையால் முன்வைக்கப்பட்டுக் கைவிடப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் நீர் மேலாண்மையைப் பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள் எப்படிக் கையாள முடியும்? தச்சர்கள் சிறப்பாக வேலை பார்க்கிறார்கள் என்பதற்காக, அவர்களை அறுவைசிகிச்சை செய்யச் சொல்ல முடியுமா? நீர் மேலாண்மையையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். அதைக் கையாள்வதற்குப் புவியியலாளர்களே கைதேர்ந்தவர்கள்.

அப்படியென்றால், நதிநீர் இணைப்பால் எந்தப் பயனுமே இல்லையா?

நதிகளை இணைப்பதால் கிடைக்கும் நன்மையைவிட, திட்டச் செயல்பாட்டுக்கு ஆகும் செலவு அதிகம். நதிகள் இணைப்பால் நாம் இழக்கப்போகும் இயற்கை அம்சங்கள், அரிய உயிரினங்களுக்கான விலையை மதிப்பிடவே முடியாது. இது தொடர்பாகச் சூழலியலாளர்கள் வந்தனா சிவா, டாரில் டிமாண்டே உள்ளிட்டோர் 1997-லேயே ஓர் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். நதிகள் இணைப்பை ஏதோ ஒரு ‘பிளம்பிங் வேலை‘ மாதிரிப் பேசுபவர்கள் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆவணம் அது.

தற்காலத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போதிய கவனம் பெற்றுவருவதாக நினைக்கிறீர்களா?

இன்றைக்குச் சூழலியலை, இயற்கையைப் பாதுகாப்பது பற்றி பேசுகிறோம். ஆனால், நிதர்சனத்தில் அவற்றைப் போட்டி போட்டு அழித்துக்கொண்டிருக்கிறோம். மரங்கள், காடுகள் நாள்தோறும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நகர்ப்புறங்கள், நெடுஞ்சாலைகளில் பெருமளவு மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. மூன்று ஆறுகள், ஒரு நீண்ட கடற்கரை, மலைகள், கடற்கரைக் காடு, கழிமுகம், சதுப்பு நிலங்கள் போன்ற பன்முகப் புவியியல் கூறுகளை உள்ளடக்கிய சென்னை நகரம் இன்றைக்கு எப்படிச் சீரழிந்து கிடக்கிறது?

வளர்ச்சி (Development) என்ற பெயரில் இயற்கை வளத்தை அழிப்பதால் - சூழலியலைச் சீரழிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளை இன்று நாம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சீரழிவுக்கும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி தெரிந்திருந்தாலும், சீரழிவை நிறுத்துவதைப் பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. சட்டப்பேரவைகளிலோ, அரசியல் கட்சிக் கூட்டங்களிலோ இந்த அழிவு விவாதிக்கப்படுவதில்லை. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அரசு ஏதாவது முன்னுரிமை அளிக்கிறதா என்று பாருங்கள்.

இதற்கிடையே நம்பிக்கை அளிக்கும் மாற்றமாக எதைப் பார்க்கிறீர்கள்?

சிக்கிம் மாநிலத்தைப் பாருங்கள். இயற்கையை எப்படியெல்லாம் அந்த மாநிலம் போற்றி பாதுகாக்கிறது. நாட்டிலேயே முதல் பசுமை மாநிலமாகத் திகழ்கிறது. அங்கே இமாலயக் காடுகள் பாதுகாக்கப்படுகின்றன; வெட்டுமரங்களுக்காகக் கண்மூடித்தனமாக அழிக்கப்படவில்லை. பார்க்கும் இடமெல்லாம் பிளாஸ்டிக் குவிக்கப்படுவதற்குப் பதில், தவிர்க்கப்படுகிறது. அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் ‘பசுமை முதல்வர்’ என்று போற்றப்படுகின்றார்.

இதனால் என்ன பலன் அல்லது பொருளாதார நலன் கிடைத்திருக்கிறது என்ற கேள்வி எழலாம். நிச்சயம் இருக்கிறது. நச்சில்லாத தூய்மையான காற்று சுவாசிக்கக் கிடைக்கும், நோய்கள் நம்மைச் சூழ்ந்து நெருக்காது. இப்படிப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இவற்றுக்கெல்லாம் விலை நிர்ணயிக்க முடியுமா?

அரசுகள் முன்னெடுக்கும் மாற்றம் ஒரு புறமிருந்தாலும், தனி மனிதர்களால் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற முடியுமா?

நம் வீட்டைச் சுற்றி, பணியிடத்தைச் சுற்றி என்னென்ன மரங்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் இருக்கின்றன என்பதைப் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. இது வருத்தம் தருவதாகவும் வியப்பாகவும் இருக்கிறது. நம்மைச் சுற்றிப் புறஉலகு என்ற ஒன்றே இல்லாதது போல வாழ்கிறோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் அம்சங்களை நெருங்கிக் கவனித்தால்தான், இயற்கையுடன் நமக்கு உள்ள நுணுக்கமான பிணைப்பைப் புரிந்துகொள்ள முடியும். நாம் ஒவ்வொருவரும் இயற்கையை எப்படிச் சீரழித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியவரும்.

நம்முடைய ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒரு பதிலடி உண்டு. அந்தப் பதிலடிகளைத் தடுக்கும் கூட்டுப்பொறுப்பும், அவற்றை மாற்றும் கூட்டுசக்தியும் நம் அனைவரிடமும்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்தால், மாற்றம் கண்ணில் தெரிய ஆரம்பிக்கும். இயற்கைதானே நம் ஒரே வாழ்வாதாரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்