மரபணுக் கடுகு: காரமும் இல்லை; சாரமும் இல்லை

By அனந்து

மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த தயாராகிவரும் மரபணு மாற்றப்பட்ட கடுகு மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அது தொடர்பான பரிசோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. அந்தப் பரிசோதனைகளுக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் அறிவியல் தரவுகளும் நம்பகமற்றவையாக இருக்கின்றன.

இந்நிலையில் மரபணுக் கடுகை ஆதரித்துப் பிரபலப் பத்திரிகையாளர் சேகர் குப்தா உள்ளிட்டோர் எழுதியிருக்கிறார்கள். மரபணுக் கடுகு சார்ந்து முன்வைக்கப்படும் வாதம் மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

மரபணு மாற்றப்பட்ட கடுகு தொடர்பாகச் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அம்சங்கள்:

கட்டுக்கதை: மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு முறைப்படி அனுமதி கிடைத்துவிட்டது.

உண்மை: இல்லை. மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு (GEAC), மரபணுக் கடுகுக்கு இன்னமும் அனுமதி அளிக்கவில்லை. துணைக் குழுதான் அனுமதி அளித்திருக்கிறது.

கட்டுக்கதை: மரபணுக் கடுகு டெல்லி பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு.

உண்மை: இல்லை. 2002-ல் பேயர் நிறுவனத்தின், துணைநிறுவனமான புரோ அக்ரோ ‘மரபணு கடுகு’க்கு அனுமதி கோரியது. ஆனால், ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்கலாம் என்ற அச்சத்தாலும், களைக்கொல்லிகளைத் தாங்கி வளரும் தன்மைகொண்டதாலும் அது நிராகரிக்கப்பட்டது. அதேதான் டெல்லி பல்கலைக்கழகம் வழியாக இன்றைக்கு வருகிறது. இந்தப் பயிரில் அதிகம் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ள குளுஃபோசினேட் என்னும் களைக்கொல்லியைத் தயாரிப்பது பேயர் நிறுவனம்தான்.

கட்டுக்கதை: மரபணுக் கடுகு அதிக மகசூல் தரும்.

உண்மை: அதைவிட அதிக மகசூலைத் தரக்கூடிய கடுகு ரகங்கள் நம்மிடம் உண்டு. அது மட்டுமல்லாமல் மரபணுக் கடுகு ரகத்தைத் தற்போது புழக்கத்தில் உள்ள கடுகு ரகங்களுடன் ஒப்பிடாமல், 40 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ரகங்களோடு ஒப்பிட்டு மரபணுப் பொறியியல் மதிப்பீட்டு குழுவுக்குத் தரவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை எப்படி ஏற்க முடியும்?

கட்டுக்கதை: இறக்குமதி செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் ரூ. 60,000 கோடி மதிப்புள்ள எண்ணெயின் அளவை குறைக்கலாம்

உண்மை: 1991-ல் உலக வர்த்தக நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலேயே எண்ணெய்க்கான தற்சார்பைத் தொலைத்துவிட்டோம். அது மட்டுமில்லாமல் இந்தியாவில் கடுகு எண்ணெய் நுகர்வோர் 10% -14% மட்டுமே. மரபணுக் கடுகு தருவதாகக் கூறப்படும் 25% அதிக உற்பத்தி மூலம் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க முடியாது.

கட்டுக்கதை: மரபணுக் கடுகுக்கு ஆதரவான முடிவுகளைச் சமர்ப்பித்த ஆராய்ச்சியாளர் பென்டல் பாராட்டப்பட வேண்டியவர்.

உண்மை: பென்டலுக்கு எதிராகக் கருத்துத் திருட்டு, மோசடி வழக்கு பதிவாகி, சிறைக்கும் அவர் சென்றிருக்கிறார்.

கட்டுக்கதை: மரபணுக் கடுகு பாதுகாப்பானது.

உண்மை: மரபணுக் கடுகு மீது உயிரிப் பாதுகாப்பு சோதனைகள் (biosafety) முழுமையாக நடத்தப்படவில்லை. மனிதர்கள், உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதா என்ற ஆராயும் உயிரிப் பாதுகாப்பு ஆய்வுகளில் சாதகமான முடிவுகளைப் பெறுவதற்காக ஆய்வுகளைத் திருத்தியும் மாற்றியும் உள்ளனர். அது தொடர்பான தரவுகள் வெளியிடப்படவில்லை.

கட்டுக்கதை: மரபணுப் பயிர்களில் சீனா தீவிரம் காட்டுகிறது. அந்த வாய்ப்பை நாம் தவற விடுகிறோம்.

உண்மை: இல்லை. தனது நாட்டில் தோன்றியதாகக் கருதும் பயிர்களில் மரபணு சோதனைகளுக்குச் சீனா அனுமதிப்பதில்லை. தங்களுடைய உயிரினப் பன்மையும் தாவர விதைகளையும் பாதுகாக்க வேண்டுமென இந்த முடிவை சீனா எடுத்துள்ளது.

கட்டுக்கதை: அமெரிக்கர்கள் ஏற்கெனவே மரபணு மாற்றப்பட்ட பயிரை உட்கொள்கிறார்கள், அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.

உண்மை: அப்படியென்றால் ஏன் ஐரோப்பா, ஜப்பான், மேலும் பல நாடுகள் மரபணுப் பயிர்களைத் தடை செய்திருக்கின்றன? உலக அளவிலான பல்வேறு ஆய்வுகள், அறிவியல் படிப்பினைகள், தரவுகள் மரபணு உணவு கேடு விளைவிக்கக்கூடியது என்கின்றன. ஏன் அமெரிக்க விவசாயிகளே super weeds எனும் ராட்சதக் களைகளால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்களே.

இந்த அம்சங்கள் தவிர, நாம் கவனிக்க வேண்டியவை:

புஷ்ப பார்கவா எதிர்ப்பு

இந்திய மரபணுப் பொறியியலின் தந்தை என்று கருதப்படும் டாக்டர் புஷ்ப பார்கவா, மரபணுக் கடுகைக் கடுமையாக எதிர்க்கிறார். மரபணுக் கடுகு தொடர்பான ஆய்வில் பல ஓட்டைகள் உள்ளன, உயிரிப் பாதுகாப்பு சோதனைகள் போதாது, ஒழுங்குமுறை/கட்டுப்பாடு சரியில்லை. அத்துடன் இது நிலையற்ற தொழில்நுட்பம், ஒருமுறை ஏதாவது ஒரு தாவரம் உயிரினத்தில் மரபணுப் பயிர் கலந்துவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எதையும் மீட்க முடியாது என்பது போன்ற காரணங்களாலேயே அவர் எதிர்க்கிறார்!

ஏன் பரிசோதனை இல்லை?

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் உள்ள பார்னேஸ் மரபணு, ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால், உலக வேளாண் அமைப்பு இந்த மரபணுவைத் தடை செய்துள்ளது. கடுகில் செலுத்தப்பட்டுள்ள பார்னேஸ், பார் ஸ்டார் ஆகிய மரபணுக்களுக்கு மட்டும்தான் உயிரிப் பாதுகாப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், களைக்கொல்லி தாங்கு திறனைத் தரும் பார் மரபணு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

மரபணுக் கலப்படம்

மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது உயிருள்ள தொழில்நுட்பம் என்பதால், அது சுயமாகவே மறுபதிப்பு செய்துகொள்ளக் கூடும். ஒரு உயிரினம்-தாவரத்தில் இந்த மரபணு ஒருமுறை கலந்துவிட்டால், பிறகு அதனால் ஏற்படும் கலப்படத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. காற்று, தேனீக்கள், பிற பூச்சிகள் மூலம் மரபணு கலப்படம் ஏற்படுவதைத் தடுக்கவும் வேறு எந்த வழியும் இல்லை. இந்த மரபணு மாற்றுக் கடுகில் இருக்கும் மரபணுக்கள் நமது பாரம்பரிய ரகங்களுடன் கலந்தால், அந்தப் பாரம்பரிய ரகங்கள் நிரந்தரமாக மரபணு மாற்றுக் கடுகு ரகங்களாக மாறிவிடும். அதனால், இயற்கை விவசாயச் சான்று கிடைப்பதில்கூடச் சிக்கல் ஏற்படும்.

மரபணுக் கடுகு தொடர்பான ஆராய்ச்சிக்காக டெல்லி பல்கலைக்கழகம், பல 100 கோடி ரூபாய் மக்கள் பணத்தைச் செலவழித்துள்ளது. ஆனால், அவர்கள் இதைப் பயிரிட அனுமதிக்கக் கோருவதற்கான காரணம்- 25% மகசூல் அதிகரிப்பு. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் அரசு வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கடுகு ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. அங்கு பல ஒட்டு ரகங்களும் பாரம்பரிய ரகங்களும் சோதனை செய்யப்பட்டதில் - செம்மைக் கடுகு சாகுபடியில் (செம்மை நெல் சாகுபடி போல) அதிக மகசூல் கிடைத்திருக்கிறது! அதுவும் வெவ்வேறு பழைய ரகங்களில் 58% முதல் 130% வரை! அரசு வேளாண் ஆய்வுக் கழகங்களின் தரவுகளே கூறும் முடிவுகள் என்பதால், வேறு ஆதாரம் இதற்குத் தேவையில்லை.

எல்லாம் சரி, மரபணுக் கடுகு வெளியாகி இன்றைக்குப் பி.டி. பருத்தியில் நடந்ததைப் போல் மகசூல் பொய்த்துப்போனால், அதற்கு யார் பொறுப்பேற்பது?

அது மட்டுமில்லாமல் உணவுப் பயிரான கடுகில் முதன்முறையாக மரபணுத் தொழில்நுட்பம் அனுமதிக்கப்பட்டால், அது கடுகுடன் நிற்காது. மரபணுக் கடுகைத் தொடர்ந்து பல மரபணு உணவுப் பயிர்கள் உள்ளே நுழைந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

கட்டுரையாளர், இயற்கை வேளாண் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com



சென்னையில் நாளை விதை சத்தியாகிரகம்

மரபணுக் கடுகுக்கு எதிரான ‘விதை சத்தியாகிரகம்‘ எனும் விதைத் திருவிழா சென்னை தி.நகர் தக்கர்பாபா வித்யாலயத்தில் நாளை (அக். 2) முழு நாள் நடைபெறுகிறது. பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய விதைகளின் கண்காட்சி நடைபெறுகிறது. இயக்குநர் வெற்றிமாறன், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 30 இடங்களில் விவசாயிகள் - நுகர்வோர் அமைப்புகள் மரபணுக் கடுகுக்கு எதிரான நிகழ்ச்சிகளையும், 11 மாவட்டத் தலைமையகங்களில் அரசுக்கு மனு கொடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன.

தொடர்புக்கு: 97890 94118

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்