வில்லியம் ராக்ஸ்பர்க் என்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் தாவரவியல் அறிஞர் பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில் அப்போதைய மதராஸ் மாகாணத்தின் உலர்முட்புதர் காட்டில், அந்த மரத்தை முதன்முதலில் கண்டபோது, அருகிலிருந்த கிராம மக்களிடம் அதன் பெயரைக் கேட்டிருக்கிறார்.
ஒதியன், ஒடியர், ஒதிய மரம் என்ற அதன் பெயர்களை மக்கள் கூற, ‘ஏன் இந்தப் பெயர்கள்?’ என்று மீண்டும் அவர் கேட்டார். இந்த மரத்தின் இளம் கொம்புகள் குறிப்பாக இலைகளை உதிர்ந்த இளம் கொம்புகள், ‘ஒடை’ (உடைந்துபோ) என்று பலமாகக் கூறினாலே ஒடிந்துவிடும் என்ற அளவுக்கு மென்மையானவை என்று மக்கள் கூறினர். இதைக் கேட்ட ராக்ஸ்பர்க் இந்த மரத்துக்கு Odina (ஒடைனா), Wodier (ஒடியர்) என்ற தாவரவியல் பெயரைக் கொடுத்தார்.
பெயரை மறக்காமலிருக்க
இந்தக் கதை உண்மையா என்று தெரியவில்லை என்றாலும், இளம் தாவரவியல் மாணவர்களுக்குத் தாவரவியல் பெயர்கள் எப்படிக் கொடுக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவும் எளிதில் மறக்காமல் இருப்பதற்கும் இச்சம்பவம் பயன்படுகிறது.
1963-ம் ஆண்டு சென்னை, அரசு கலைக் கல்லூரியின் (தற்போதைய காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்ள வளாகம்) இளநிலை தாவரவியல் மாணவனாக ஒரு களப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நான் எதிர்கொண்ட 25 மீட்டர் உயரமுள்ள ஓர் இலையுதிர் மரத்தைப் பற்றி வழிவழியாகக் கூறப்பட்டுவந்த இந்தக் கதையை என்னுடைய ஆசிரியர் எனக்குக் கூறினார். நானும் என்னுடைய மாணவர்களுக்கு இந்தக் கதையைக் கூறியிருக்கிறேன். தற்காலத் தாவரவியல் வகைப்பாட்டியல் விதிகளின்படி இந்த மரத்தின் சரியான தாவரவியல் பெயர் Lannea Coromandelica. அதேநேரம் இந்த மரத்தின் பழைய தாவரவியல் பெயர் தமிழ் சொற்களின் அடிப்படையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பண்டைய பெயர்கள்
தொல்காப்பியத்தில் உதி என்று குறிப்பிடப்பட்ட இந்த மரம் (உதி மரக்கிளவி மெல்லெழுத்து மிகுமே தொல்.1.7- 243) இதே சொல்லால் இதற்குப் பிந்தைய எந்தத் தமிழிலக்கியத்திலும் சுட்டப்படாமல் இருப்பது வியப்பளிக்கிறது (உதி, ஒதியன் என்று மாற்றுரு பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது).
சங்கக் காலம் தொடங்கி ஒடி என்ற சொல்லும், உலவை என்ற சொல்லும் (இந்தச் சொல் சங்க இலக்கியத்தில் மட்டும் 14 பாடல்களில்) இளம் மரக்கொம்புகளுக்கு, குறிப்பாக உதிர்ந்த இலைகளைக் கொண்ட மரக்கொம்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது; என்றாலும் இந்த மரத்தைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப் படவில்லை. பல தமிழ் நிகண்டுகளும் இந்தப் பயன்பாட்டை உறுதி செய்துள்ளன. கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டும், பிங்கல நிகண்டும் உலவை என்ற சொல்லுக்கு மரக்கொம்பைத் தவிர ஒடை மரத்தின் பெயரையும் ஒரு பொருளாகச் சுட்டுகின்றன. ஒடை என்ற மரப் பெயரும் ஒடி என்ற மரக்கொம்பு சார்ந்த பயன்பாட்டிலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.
(அடுத்த வாரம்: தீக்குச்சி மரத்தின் அறியாத பயன்)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago