வாலில்லா குரங்குகளின் ஆராய்ச்சியாளர், உயிரின நடத்தையியலாளர், மானுடவியலாளர் ஜேன் குடாலுக்கு சமீபத்தில்தான் 80 வயதானது. பொதுவாகப் பலரும் ஓய்ந்து உட்கார்ந்துவிடும் இந்த வயதில் சுறுசுறுப்புடன் இருக்கிறார். இன்றைய சுற்றுச்சூழல் சந்தித்து வரும் சவால்களைப் பற்றியும், வாழ்க்கை குறித்த தனது பார்வையைப் பகிர்வதற்காகவும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ‘‘ஒரு தனிநபரால் என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்போது இது குறித்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பது நான் மட்டுமல்ல. சுற்றுச்சூழல், சமூக அக்கறை சார்ந்து ஆயிரக்கணக்கானோர் விழிப்புணர்வு பெற்று, மாற்றத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார்கள்’’ என்கிறார்.
80 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி க்கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சியாளர், வருடத்தில் 300 நாட்களுக்கு உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது உடல் சக்தியையும், அறிவு சார்ந்த விருப்பங்களையும் பராமரிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லை என்கிறார்.
சிறு வயது காதல்
உயிரினங்கள் மீதான காதல் சிறு பெண்ணாக இருந்தபோது அவரிடம் துளிர்விட்டது. காடுகளில் சுற்றித் திரியும் டார்ஸான் கதாபாத்திரத்தை 10 வயதில் விரும்பினார். அதற்குப் பிறகு ஆப்பிரிக்கா சென்று உயிரினங்களுடன் வாழ்வதைப் பற்றியும், அவற்றைப் பற்றி புத்தகங்கள் எழுதுவதைப் பற்றியுமே கனவு கண்டுகொண்டிருந்தார்.
சிம்பன்சி குரங்குகளின் கருவிகளை உருவாக்கும் திறனைக் கண்டறிந்ததுதான், வாலில்லா குரங்கு ஆராய்ச்சியில் குடாலின் முக்கியப் பங்களிப்பு. டார்வினைப் போலவே பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்த அவர், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிம்பன்சி குரங்குகள் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்தினார். நமக்கும் வாலில்லா குரங்குகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை நேரடி கள ஆராய்ச்சி மூலம் தெளிவுபடுத்தினார்.
மனிதன் - குரங்கு வேறுபாடு
"நாம் மனிதர்களாக வரையறுக்கப்பட்டு இருக்கிறோம். அதாவது கருவிகளை உருவாக்கக்கூடியவர்கள் என்று. சிம்பன்சிகளை நான் கவனித்தபோது, அவை வெறும் புற்களை மட்டும் கையில் எடுக்கவில்லை, சில மரக்கிளைகளையும் எடுத்தன. அந்தக் கிளையில் இருந்த இலைகளை அகற்றி, தங்களுக்குத் தேவைப்படும் கருவி போல அதை மாற்றின. அதுதான் உலகை ஆச்சரியப்படுத்தியது" என்கிறார் டாக்டர் குடால்.
ஆனால், இந்த ஆராய்ச்சியை நடத்துவதற்குச் சிம்பன்சிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கு மட்டும் இவருக்கு ஒரு வருடம் ஆனது. “ஆனால், சிம்பன்சி சமூகத்தின் ஒரு பகுதியாக எந்தக் காலத்திலும் நான் மாறியதில்லை. அவர்களது சமூகத்தின் ஒரு பகுதியாக மாறுவதை நானும் விரும்பவில்லை. ஏனென்றால், அவை எப்படி நடந்துகொள்கின்றன என்பதைச் சற்று அருகேயிருந்து கவனிப்பதுதான் என் வேலையாக இருந்தது” என்கிறார்.
ஆராய்ச்சியாளர்களின் தவறு
குணாம்சங்கள் அல்லது ஆளுமைத்தன்மை, அறிவு, உணர்ச்சி போன்றவை மனிதர்களுக்கு மட்டுமே உரியவை, சிம்பன்சிகளுக்கு அவை இருக்க முடியாது என்று இவரது ஆராய்ச்சிக்குக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கருத்து கூறியது. ஆனால், அதிர்ஷ்டவசமாகக் குடாலுக்கு அற்புதமான ஆசிரியர் கிடைத்தார்.
"நல்லவேளையாக, நான் பட்டப் படிப்பு படிக்காமல் இருந்தது நல்லதுதான். ஏனென்றால், அப்போது இருந்த அறிவியல் கொள்கைகளின் குறுகிய பார்வை என் மனதை ஆக்கிரமிக்கவில்லை" என்கிறார் குடால்.
உயிரின நடத்தையியலில் முதுமுனைவர் பட்டம் பெற்ற அவர், கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச அளவில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொடரும் பணி
இப்படித் தனது வாழ்க்கையையே சிம்பன்சிகளின் பாதுகாப்புக்காக அர்ப்பணித்த குடால், "எனது பணி நிறைவடையவில்லை. இலக்கை எட்டுவதற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது.
ஏனென்றால் சிம்பன்சிகள், மற்ற வாலில்லா குரங்குகளைப் போலவே அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதனால்தான் அவை சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்லாமல் ஆப்பிரிக்காவில் வாழும் உயிரினங்கள், மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி போகும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறேன்" என்கிறார்.
1960-ல் 20 லட்சமாக இருந்த சிம்பன்சிகளின் எண்ணிக்கை, தற்போது வெறும் 3 லட்சமாகக் குறைந்திருக்கிறது. 21 நாடுகளில் இவை வாழ்கின்றன. அதிலும் பல சிம்பன்சிகள் துண்டாக்கப்பட்ட, சிறிய காடுகளில் வாழ்கின்றன.
"இதன் காரணமாகத்தான், ஜேன் குடால் நிறுவனம் காடுகளைச் சுற்றியுள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது. ஏனென்றால், அவர்களின் மூலம்தான் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், காடுகளை மீட்டெடுக்கவும் குறைந்தபட்ச வாய்ப்பாவது இருக்கிறது.
இந்தப் பூமிப் பந்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, மக்களிடம் பேசுதல், சுற்றுச்சூழலுடன் உறவாடுதல் என அனைத்து வகைகளிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மாற்றத்தை உருவாக்க முடியும்" 80 வயதிலும் பூமியைக் காக்க உலகை வலம் வரும் குடாலின் குரல் திருத்தமாக ஒலிக்கிறது.
நன்றி: ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago