தமிழ்நாட்டின் மசாய் மரா கழுவெளி!

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டின் பதினாறாவது பறவை சரணாலயமாக கழுவெளி அறிவிக்கப் பட்டது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. அதே நேரம் சரணாலய அறிவிப்பு என்பது பெரும் மலையேற்றத்தின் முதல் அடி என்பதை மறந்துவிடக் கூடாது. மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் வேடந்தாங்கலுக்குக் கடந்த ஆண்டு வந்த பெரும் சோதனை நாம் அறிந்ததே. கழுவெளிக்கும் அது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க பறவை ஆர்வலர்கள், காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள், வனத்துறை இணைந்து மேலாண்மை திட்டத்தை வகுக்க வேண்டும்.

கென்யாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற ‘மசாய் மரா’வுக்குச் சென்று திரும்பியவர்கள் கழுவெளிப் பறவை சரணாலயத்துக்கு வந்தபோது உதிர்த்த வார்த்தைகள்: ‘கழுவெளி: தமிழகத்தின் மசாய் மரா’. மசாய் மராவையும் கழுவெளியையும் ஒப்பிடுவதற்கு இந்த இரண்டு இடங்களிலும் உள்ள பரந்த புல்வெளியும், ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் மரங்களும்தாம் காரணம்.

கண்களுக்கு எட்டிய தொலைவு வரை பல கி.மீ. தொலைவுக்குப் பரந்துவிரிந்த புல்வெளிகள் தமிழகத்தில் அற்றுப்போய்விட்டன. எஞ்சிய சிலவற்றில் ஒன்று கழுவெளி. புல்வெளி மட்டு மல்லாமல் நன்னீர் ஏரி, உப்பங்கழி, அலையாத்திக் காடு, கழிமுகம் போன்ற வாழிடங்களும், சரணாலயத்தைச் சுற்றியுள்ள உப்பளங்கள், நூற்றுக்கணக்கான குளங்கள், விவசாய நிலங்கள் என அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றதுதான் கழுவெளி பல்லுயிர்ப்பன்மைப் பகுதி.

சர்வதேச அங்கீகாரம்

கழுவெளி பறவை சரணாலயம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வானூர் தாலுகாவில் அமைந்துள்ளது. கழுவெளிக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட 15 பறவை சரணாலயங்களின் மொத்த பரப்பளவு 17,666 ஹெக்டேர். 16ஆவது பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கழுவெளியின் பரப்பளவு மட்டும் 5,151 ஹெக்டேர். இதன் மூலம் அதன் பரந்த நிலப்பரப்பைக் கற்பனை செய்துகொள்ளலாம்.

நீர்நிலை பாதுகாப்புக்கான உலகளாவிய அமைப்பு (Wetlands International) இந்தியாவி லுள்ள 554 பறவைகள், பல்லுயிர் பாதுகாப்புப் பகுதி களைக் கண்டறிந்துள்ளது. அதில் கழுவெளியும் ஒன்று. இச்சரணாலயத்தில் 1980களில் குளிர்கால வலசை பருவத்தில் 30,000 வாத்துகள், 20,000-40,000 கரைப்பறவைகள் (Waders), 20,000-50,000 ஆலாக்கள் போன்றவை வந்ததாகவும் ஒட்டுமொத்தமாக 40,000 நீர்ப்பறவைகள் கூடும் இடமாக விளங்கியதாகவும் அவ்வமைப்பின் தொடர் ஆராய்ச்சிக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. நம் சூழற்பகுதியிலுள்ள பறவையினங்களில் 1 சதவீதத்தைக் கொண்டிருத்தல், ஆண்டுக்கு 20,000 நீர்ப்பறவைகளைக் கொண்டிருத்தல், உலக அளவில் அருகிக்கொண்டிருக்கும் பறவையினங்களைக் கொண்டிருத்தல் ஆகிய காரணங்களால் கழுவெளி முக்கியமான இடமாகத் தெரிவுசெய்யப்பட்டதாக அறியமுடிகிறது. எனினும் அண்மைக் காலங்களில் இது போன்ற தொடர் கணக்கெடுப்பு ஆராய்ச்சிகள் இப்பகுதியில் நடத்தப்படவில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் உள்ளூர், விருந்தாளிப் பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதை அறிய முடிகிறது. கழுவெளியில் இதுவரை 226 பறவையினங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை ஒருநாள் மட்டும் பறவைக் கணக்கெடுப்பு நடத்துவதை விடுத்து, சீரான இடைவெளியில் அறிவியல் முறைப்படி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போது பறவைகளின் எண்ணிக் கையில் ஏற்படும் மாற்றத்தை அறிந்துகொள்ள முடியும். இப்பகுதியில் உள்ள மற்ற உயிரினங்கள் குறித்தும் முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, பட்டியலை வெளியிட வேண்டும்.

பாதுகாப்பு: சவால்களும் தீர்வுகளும்

நம்மூரில் நூற்றுக்கணக்கான பெரிய நீர்நிலைகள்கூட ஆக்கிரமிப்பினால் எவ்வாறு காணாமல் போயின என்பதை அறிவோம். அதுபோலவே கழுவெளியும் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. புதுப்புது எல்லைக் கற்களும் வேலிகளும் முளைத்து ஆக்கிரமிப்பு அரங்கேறுவதைக் காண முடிகிறது. எனவே, கழுவெளியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கழுவெளியில் பறவைகள் மட்டுமல்லாமல் நரி, காட்டுப்பூனை, மரநாய், முயல் முதலிய காட்டுயிர்களையும் சாதாரணமாகக் காணலாம். இரவாடிப் பறவையான பெருங்கண்ணி, முயல் முதலியவை நடமாட்டமுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பொறிகளைப் பிடுங்கி எறிவது பறவை ஆர்வலர்களின் வழக்கமாக ஒரு காலத்தில் இருந்தது.

இப்பகுதியில் கள்ளவேட்டை குறைந்திருந் தாலும்கூட, முற்றிலும் நின்றுவிடவில்லை. பறவை களும் காட்டுயிர்களும் எங்கே நடமாடுகின்றன, எங்கு அடைகின்றன, வனத்துறையினர் - பறவை ஆர்வலர்கள் - காட்டுயிர் ஆர்வலர்கள் எப்போது வந்து செல்கின்றனர் என்பது போன்ற தகவல்களைக் கள்ளவேட்டைக்காரர்கள் தெரிந்து கொண்டு வேட்டையில் ஈடுபடுகின்றனர். நிரந்தர வேட்டைத் தடுப்புக் காவலர்களை வனத்துறை பணியில் அமர்த்தினால் மட்டுமே, கள்ள வேட்டைகளைத் தடுத்து காட்டுயிர்களைப் பேண முடியும்.

நீடிக்கும் ஆபத்துகள்

வக்கா என்று சொல்லப்படுகின்ற இராக்கொக்குகள் அடையும் இடம் ஒன்று கழுவெளியில் இருக்கிறது. ஒருநாள் சரக்கு வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட ஞெகிழி, பெயர்ந்த காரைகள் முதலிய மக்காத குப்பைகள் இப்பகுதியில் கொட்டப்பட்டன. அதற்குப் பிறகு அந்த இராக்கொக்குக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. அதேபோல் மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துப்புட்டிகள் பெருமளவில் இங்கே கொட்டப்பட்டுக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. இப்பகுதியில் மது அருந்துபவர்கள் விட்டுச் செல்லும் மதுப்புட்டிகளும் ஞெகிழித் தாள்களும் அந்த இடத்தை மாசுபடுத்துகின்றன. இவற்றை எல்லாம் தடுப்பதற்கு ஏரிக்குச் செல்லும் வழித்தடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். மேலும், போர்க்கால அடிப்படையில் கழிவை அகற்றும் பணியில் மக்களையும் தன்னார்வலர்களையும் ஈடுபடுத்தி, இதுபோன்ற பசுமைவிரோதச் செயல்களுக்குக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது அவசியம்.

ஒருமுறை, கூனிமேடு பகுதியில் பரந்து விரிந்தி ருக்கும் புல்வெளிப் பகுதியில் பாராகிளைடிங் குழு பயிற்சி செய்ததைக் கண்டோம். இது போன்ற செயல்கள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலாகும். இப்பகுதி இந்திய அளவில் வேகமாக அருகிவரும் பெரும்புள்ளிக் கழுகுகள், பூனைப்பருந்துகளின் புகலிடமாகும். இது போன்ற செயல்கள், புல்வெளியை நாசம் செய்யும். அண்மைக் காலமாகக் கழுவெளியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவை ஒன்றுசேர்ந்து, வலசை வந்துள்ள வாத்துகளையும் மற்ற பறவைகளையும் வேட்டையாடுகின்றன. மறைமுகமாக இயங்கும் இறால் பண்ணைகளையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

கழுவெளியில் நிறைந்து காணப்படும் கோரை, விழல் உள்ளிட்டவற்றை வணிக நோக்கில் அறுவடை செய்வது தொடர்கிறது. அறுவடை செய்வது மட்டுமல்லாமல் எஞ்சியுள்ளவற்றைத் தீவைத்து எரித்து புதிய புற்களை முளைக்கவைக்க முயல்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் காட்டுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. சூழலியல் சமன்பாடும் குலைந்து சீரற்ற நிலை ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

திட்டுகளைச் சீர்குலைக்கக் கூடாது

கழுவெளியின் மையப்பகுதியில் கருவேல மரங்கள் நிறைந்த திட்டுகள் காணப்படுகின்றன. இத்திட்டுகளில் அழிந்துவரும் பறவைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாம்புத்தாரா, சங்குவளை நாரை, சாம்பல் கூழைக்கடா முதலிய பறவைகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன. நீர் நிறைந்தி ருக்கும்போது இத்திட்டுகளுக்கு யாராலும் செல்ல இயலாது. அதே நேரம் இப்பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து, பறவைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். அங்குள்ள மீனவர்களுடன் கலந்தாலோசித்து மீன்பிடிப்பதை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் அமைந்திருக்கும் ஊசுடு பறவை சரணாலயத்தில் படகுச் சவாரி ஏற்படுத்தப்பட்ட பின் அது உயிரினங்களுக்கு எதிராக முடிந்தது. ஏரியின் மையப்பகுதியில் இருக்கும் திட்டுகளில் இனப்பெருக்கத்துக்காகக் கூடியிருக்கும் பறவை களைக் காட்ட படகில் சுற்றிச் சுற்றி வருவதால் இனப்பெருக்கத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. அத்துடன் படகிலிருந்து வெளியேறும் எரிபொருள் கழிவு நன்னீரை மாசுபடுத்துகிறது. இது போன்ற நிலை கழுவெளிக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனிதர்களால் எந்த இடர்பாடும் உயிரினங்களுக்கு ஏற்படுத்தப்படக் கூடாது.

கழுவெளியைச் சார்ந்துள்ள மீனவர்கள், இப்பகுதி மக்கள், விவசாயிகள் ஆகியோருக்குக் கழுவெளியின் முக்கியத்துவம் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கையைக் காப்பாற்றுவது நமக்கு மட்டுமல்லா மல் எதிர்கால சந்ததிக்குமானதுதான் என்பதை மக்கள் உணர்ந்தால் கழுவெளியின் பாதுகாப்புக்கு இயல்பாகவே அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கட்டுரையாளர், புதுச்சேரி பள்ளி ஆசிரியர்

தொடர்புக்கு: sureboo@gmail.com

(இந்திய மொழிகளில் இயற்கை சார்ந்த எழுத்தை ஊக்குவிப்பதற்காக ‘Nature Communications’ என்கிற திட்டத்தின்கீழ் Nature Conservation Foundation (NCF) முன்னெடுத்துள்ள தொடர் இது. பறவைகள், இயற்கை குறித்து நீங்கள் எழுத நினைத்தால் NCF-India-வைத் தொடர்பு கொள்ளுங்கள்: https://www.ncf-india.org/contact-us)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்