இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள்தான் நஞ்சுடையவையாக அறியப்பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (1.2 சதவீதம்) பாம்பினங்கள் (நல்ல பாம்பு, கட்டுவரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன்) மட்டும் மனிதர்களின் வாழ்விடங்கள் அருகில் பரவலாக வசிப்பதோடு அதிக மனித இறப்பை உண்டுபண்ணுபவை. இவை இந்தியாவின் முக்கிய நஞ்சுப் பாம்புகளாக உள்ளன. மீதமுள்ள அனைத்து நஞ்சுப் பாம்புகளும் அடர் காடுகள், கடல், குறிப்பிட்ட சில நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருவதால் நம் கண்ணில் படுவது அரிது. இவை இரவிலேயே நடமாடுகின்றன. ஆனால், இந்தியாவில் ஆண்டிற்கு சில லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள், பல ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம், கூலி வேலை செய்பவர்கள்.
பாம்புக்கடியின் பாதிப்பு என்பது பாம்பு உடலில் செலுத்திய நஞ்சின் அளவு, நஞ்சின் தன்மை, கடிபட்டவரின் உடல் ஆரோக்கியம், மனநிலை, முறையான உடனடி சிகிச்சை போன்றவற்றைப் பொறுத்து மாறும். பாம்பால் கடிபட்டவருக்குக் கடிவாயில் ரத்தம் கசிதல், வீக்கம், வலி என ஆரம்பித்து இறுதியில் மூச்சுத் திணறல், இதயக் கோளாறு, சிறுநீரகம் செயலிழத்தல் எனப் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இதற்கான மருந்தைத் தாண்டி பிரத்தியேக மருத்துவ வசதியும் அனுபவம் பெற்ற மருத்துவர்களும் அவசியம்.
பாம்பால் ஒருவர் கடிபடும்பொழுது முதலில் அவருக்கு ஏற்படுவது பயம், பதற்றம், எதிர்காலம் குறித்த கேள்வி போன்றவையே. பாம்புக்கடிக்கான மருந்து இருப்பதால் நாம் பிழைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கை முதலில் அவசியம். உடன் இருப்பவர் ஊக்கம் கொடுப்பவராக இருப்பது மிக முக்கியம்.
கடிபட்ட பாம்பிடமிருந்து முதலில் விலக வேண்டும். பாம்பு கடித்த இடத்தையும் நேரத்தையும் அறிந்திருக்க வேண்டும். மருத்துவத்தைப் பொறுத்தவரை உடலில் நஞ்சு இருக்கிறதா என்று அறிந்த பின்னரே சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, கடித்த பாம்பைத் தேடிக் கொல்வதும் அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனை செல்வதும் அவசியமற்றது. இது தேவையற்ற நேர விரயமே.
பாம்புக்கடியின்போது பாம்பின் நஞ்சு உடலில் பரவுவது நீரில் நீலம் கலப்பது போன்றதுதான். நஞ்சை மட்டும் உடலிலிருந்து பிரித்தெடுப்பது இயலாத காரியம். முதலுதவி என்ற பெயரில் கடிவாயை வெட்டி விடுதல், வாய் வைத்து உறிஞ்சுதல், கயிற்றால் கடிவாய் மேலே கட்டுதல் ஆகிய தவறான செயல்களைப் பலர் மேற்கொள்கிறார்கள். இது கூடுதல் பிரச்சினையை உண்டுபண்ணுமே தவிர, எந்தப் பலனும் தராது.
நேரம் தாழ்த்தாமல் உடனே அரசு மருத்துவமனையின் பாம்புக்கடி தீவிர சிகிச்சைப் பிரிவை அடைந்து, உரிய சிகிச்சையைப் பெற வேண்டும். ஓடுவதைத் தவிர்த்தல், இறுக்கமான ஆடைகளைக் களைவது, கடிபட்ட இடத்தில் ஆபரணங்கள் அணிந்திருந்தால் கழற்றிவிடுவது அவசியம்.
அரசு, சில தனியார் மருத்துவமனைகளில் பாம்புக் கடிக்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இன்று பாம்புக்கடிகளுக்கு எதிராக நஞ்சுமுறிவு மருந்து (Anti Snake Venom), கூட்டு முறை (Polyvalent) வடிவில் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் முக்கிய நான்கு நஞ்சுப்பாம்புகளுக்கு மட்டுமானது.
இந்த மருந்துகள் அறிமுகமாவதற்கு முன்பும் பாம்புக் கடிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இது சார்ந்த பல மருத்துவக் குறிப்புகள் வாய்மொழியாகவும் இந்திய மருத்துவ முறைகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசீலனை செய்து, கூடுதல் ஆராய்ச்சி மேற்கொண்டாக வேண்டும்.
இன்றைய உடனடித் தேவை பாம்புகளால் கடிபட்டு வருவோரை நஞ்சுப்பாம்புதான் கடித்திருக்கின்றதா, அது எவ்வகை பாம்பு எனச் சுலபமாகக் கண்டறியும் கருவியை (venomous snakebite detection kits) கண்டுபிடிப்பதும் அவசியம்.
முள்ளை நாம் பார்க்காமல் காலில் குத்திக்கொண்டு, காலில் முள் குத்திவிட்டது என்று முள்ளின் மீது பழிபோடுவது போலத்தான் பாம்பு என்னைக் கடித்துவிட்டது என்பதும். மக்கள்தொகை பெருக்கம், பாதுகாப்பற்ற குடியிருப்பு, மருத்துவத்திற்கான தொலைதூரப் பயணம், மருத்துவச் செலவு, அறியாமை, அலட்சியம் என எல்லாம் சேர்ந்து பாம்புக்கடியைத் தீவிர பிரச்சினையாக மாற்றியிருக்கின்றன. இது குறித்த அடிப்படை அறிவோடு நம் அனைவரின் பங்களிப்பும் சேரும்பொழுது பாம்புக் கடிகளைக் குறைப்பதோடு, இறப்பையும் தவிர்க்க முடியும்.
கட்டுரையாளர். ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago