கிழக்கில் விரியும் கிளைகள் 27: அரசனை நம்பி, கைவிடப்பட்ட புரசம்

By கு.வி.கிருஷ்ணமூர்த்தி

பலாச மரத்தின் காயம்பட்ட இடங்களிலிருந்து ரூபி சிவப்பு நிறச் சாறு கண்ணீர்த் துளி வடிவத்தில் வெளிப்பட்டுக் காணப்படும். பெங்கால் கினோ எனப்படும் இந்தக் கோந்து/பிசின் தொடக்கத்தில் ஒளிபுகும் தன்மை கொண்டிருக்கும். நாட்பட நாட்பட இதன் நிறம் மங்கி, ஒளிபுகாத தன்மையைப் பெறும்.

பலாசத்தின் மற்றொரு முக்கியப் பண்பு, இதைத் தாக்கும் அரக்குப் பூச்சியான கெர்ரியா லக்காவால் உருவாகிறது. இந்த மரத்தின் தண்டுப் பகுதியில் வளரும் இந்தப் பூச்சி அரக்கை உண்டாக்குகிறது. ஷெல்லாக் எனப்படும் இந்த அரக்கில் மணமுள்ள பிசின், நிறப் பொருள், மெழுகு, புரதங்கள், கனிம உப்புகள், மணப் பொருட்கள் போன்றவை காணப்படுகின்றன.

ஆப்பிள், ஆரஞ்சு பழங்களின்மேல் இந்த மெழுகு பூசப்பட்டு, அவற்றின் சேமிப்புக் காலம் அதிகரிக்கப்படுகிறது. அரக்கு உற்பத்திக்காகவே இந்தியாவின் மத்திய மாநிலங்களில் இந்தத் தாவரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது.

அரசனை நம்பி…

இந்தியப் புராணங்களிலும் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் முக்கியத்துவம் பெற்ற பலாசம் பிரம்மாவின் மரம் (பிரம்ம தரு) என்று கருதப்படுகிறது. இதன் புனிதத்தன்மை காரணமாக இந்திரப்பிரஸ்தாவிலும், த்வைத வனத்திலும் இது வளர்க்கப்பட்டதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது.

பலாசம் இல்லாமல் பல இந்தியச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லை எனலாம். சதபாத பிரம்மனா என்ற நூலின்படி வேள்வித் தீயைச் சுற்றிப் போடப்படும் புனிதக் குச்சிகளைத் தரும் மிக முக்கியமான மரங்களில் பலாசம் முதலிடம் பெற்றது.

குழந்தை இல்லாத தமிழகப் பெண்கள் பலாச மரத்தை ஒரு மண்டலம் சுற்றிவந்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை, பின்னர் மாறிப் பெண்கள் அரச மரத்தை வலம்வரத் தொடங்கினர். அதன் காரணமாகத் தோன்றியதுதான் பின்வரும் முதுமொழி என்பார்கள்: அரசனை நம்பிப் புருசனைக் கைவிடுதல் (அரச மரத்தை நம்பிப் புரசு மரத்தைக் கைவிடுதல்).

பிரிக்க முடியாத பிணைப்பு

திருமணத்தின்போது திருமண அறை அல்லது மேடையில் போடப்படும் தற்காலிக நுழைவாயிலுக்கான மர நிலைகளுக்கும் இந்த மரம்தான் பயன்படுத்தப்படுகிறது. மணப்பெண்ணை ஏற்றிச் செல்லும் வண்டிகள் இதன் மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன.

இறப்புச் சடங்குகளிலும் பலாசம் பயன்படுத்தப்படுகிறது. இறந்தவரின் உடல் எரிக்கப்பட்ட அடுத்த நாள் அவருடைய எலும்புகள் சேகரிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்பட வேண்டும். அந்த இடம் பலாச இலைக் கொத்தால் தூய்மைப்படுத்தப்பட்டு, எலும்புகள் புதைக்கப்பட்ட பின் அந்த இடம் ஒரு மண் மேடாக ஆக்கப்படுகிறது. இப்படியாக, இந்தியச் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் பலாசம் முக்கியத்துவம் பெற்றுவந்துள்ளது.

இந்துக்கள் மட்டுமின்றி, புத்த மதத்தினரும், சமண மதத்தினரும் பலாச மரத்தைப் புனித மரமாகக் கருதினர். மாகாளிக்கு உயிர்ப் பலி கொடுப்பதற்குப் பதிலாக மத்தியப் பிரதேசப் பகுதிகளில் ரத்தச் சிவப்பான பலாச மலர்கள் பலிப் பொருளாகப் படைக்கப்படுகின்றன.

சோழர் கோயில்களில்…

பக்தி இலக்கியக் காலத்திலிருந்தே (ஏறத்தாழ 7-ம் நூற்றாண்டு) பல தமிழகக் கோவில்கள் பலாச மரத்தோடு தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளன. சில கோவில்களின் தல மரமாகவும் பலாசம் திகழ்ந்துவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் பண்டைய சோழ நாட்டைச் சேர்ந்தவை; கிழக்கு கடற்கரைக்கு மிக அருகிலோ, ஓரளவு அருகிலோ அமைந்தவை. திருப்பேர் நகர், திருத்தலைசெங்காடு கோவில்களில் பழைய தலமரமான பலாசம் தொடர்ந்து காணப்படுகிறது.

ஏறத்தாழ அனைத்துத் தல மரங்களும் நல்ல மருத்துவப் பயன்பாடு கொண்டவை. இவற்றின் மருத்துவப் பயன்கள் கருதியே தல மரங்களாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஒருசிலர் கருதுகின்றனர்.

(அடுத்த வாரம்: நிலங்களை மீட்கும் மரம்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்