கரோனா பேரிடரிலிருந்து மீள்வதற்கு உலகம் போராடிவரும் சூழலில்தான், பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (ஐ.பி.சி.சி.) தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை வெளி யிட்டது. புவி வெப்பமாதல், பருவநிலை மாற்றம், காடழிப்பு, காட்டுயிர் அழிப்பு, கடல்மட்ட உயர்வு போன்றவை குறித்து எச்சரிக்கை குரல்களை அது மேலும் வலுப்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி பசுங்குடில் வாயு உமிழ்வைக் குறைத்தாலும்கூட இனி நம்முடைய வாழ்க்கை, பேரிடர்களுக்கு நடுவில்தான் அமையும் என்பதே இந்த அறிக்கை கூறும் முக்கியச் செய்தி. அதாவது பருவ நிலை மாற்றத்திலிருந்து மக்கள் தப்பிக்கவே முடியாது. இயற்கை குறித்த தெளி வான புரிதல் இல்லாமல், மனித இனம் தன்னுடைய வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கும் முயற்சிகளே புவிவெப்பமாதலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் வழிவகுத்துள்ளன. இவை மனித இனத்தைப் பேரழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளன.
“வேறொருவர் வெளியிடும் கரியமில வாயுவால், எங்கள் உயிரை யும் எங்கள் நாட்டையும் இழக்க இருக்கிறோம்” என்று பருவநிலை மாற்றத்தால் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேதனையுடன் கூறியிருக்கிறார். அவரின் கருத்து மாலத்தீவுக்கு மட்டுமல்ல; நமக்கும் பொருந்தும். கைக்கு எட்டிய தொலைவில் இருக்கும் இந்தப் பேராபத்தைத் தணிப்பதற்கான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் உலக நாடுகள் பெரும் முன்னேற்றம் காணவில்லை. இந்தச் சூழலில், பாண்டிச்சேரி ஆரோவில்லில் செயல்பட்டுவரும் ‘ஆரோவில் கன்சல்டிங் குரூப்’ நிறுவனத்தின் செயல்பாடுகளும் அந்நிறுவனம் முன்வைக்கும் தீர்வுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
யார் காரணம்?
பருவநிலை மாற்றத்துக்கு யார் காரணம் என்பதற்கான தெளிவான விளக்கத்தை ஐ.பி.சி.சி. அறிக்கை அறிவியல்பூர்வ ஆதாரங் களின் அடிப்படையில் அளித்திருக்கிறது. அந்த அறிக்கையில், வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுங்குடில் வாயுக்களின் செறிவுக்குச் சந்தேகத்துக்கு இடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம் என்பதை அறிவியலாளர்கள் உறுதிப்படத் தெரிவித் துள்ளனர். இந்த அறிக்கை தந்த அதிர்ச்சியில் சில நாட்கள் எதிர்வினையாற்றிவிட்டுப் பின்பு அதை மறந்து சென்றால், அது மனித குலத்தின் அழிவைத் துரிதப்படுத்தும்.
அடுத்த பத்தாண்டுகளுக்குள் புவி வெப்ப மாதல் 1.50 செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துவிடும் என்றும் பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றும் அளவை, உடனடியாக, வேகமாக, பேரளவு குறைக்காவிட்டால் அது 20 செல்சியஸ் அளவைக்கூடத் தாண்டும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. இதன் காரணமாக அதிக மழைப்பொழிவு, கடுமையான வறட்சி ஏற்படும். புயல்கள், வெள்ளப்பெருக்கு, வறட்சி, காட்டுத்தீ, பனிப்பாறை உருகுதல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகரிக்கும். இதனால், மக்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படும் நிலை இனி வரும் நாட்களில் ஏற்படும்.
மின்னுற்பத்தியும் பருவநிலை மாற்றமும்
போக்குவரத்து, காடழிப்பு, அபரிமித தொழிற்சாலை உற்பத்தி, மின்னுற்பத்தி என நீளும் மனிதர்களின் சுயநல நடவடிக்கை கள் முடிவற்றுத் தொடர்கின்றன. புவி வெப்ப மாதலுக்குக் காரணமான மனிதர்களின் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு மின்னுற் பத்திக்கு உண்டு. நடைமுறை யிலிருக்கும் அனல் மின்நிலையங்கள், அணு மின்நிலையங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது காலத்தின் கட்டாயம். சூரிய மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கமாகத் திருப்புவதே நம் முன் இருக்கும் வழி. கொள்கைரீதியிலான இந்த மாற்றத்தை எப்படி அடைவது, அதற்கான வழிமுறைகள், நடைமுறைப்படுத்தும் வழிகள், அதன் சாதகங்கள், தேவைப்படும் திட்டங்கள், முன்னெடுப்புகள் ஆகியவற்றைப் பொது மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தெரிவிக்கும் நோக்கில் ‘ஆரோவில் கன்சல்டிங் குரூப்’ செயல்பாடுகளை வடிவமைத்துள்ளது.
சூரிய மின்னாற்றல்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில், குறிப்பாகச் சூரிய மின்னாற்றல் உற்பத்தி யில் முன்னோடியாக மாறும் முயற்சியில் ஈடுபட்டுவரும் இந்த நிறுவனம் 2009இல் தொடங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளில், நாடு முழுக்க சூரிய மின்னாற்றல் கொள்கைகள் வகுக்கப்படுவதில் இந்நிறுவனம் பங்கு வகித்துள்ளது. உதாரணத்துக்கு, நெட் மீட்டரிங் முறை கொண்டுவரப்பட்ட முதல் சூரிய மின் கொள்கையான ‘தமிழ்நாடு சூரிய மின் கொள்கை 2012’இல் இதன் பங்களிப்பு உண்டு. புதுச்சேரி, டெல்லி, ஒடிசா போன்ற மாநிலங்களின் சூரிய மின் கொள்கைகளைத் தீட்டுவதிலும் 2019ஆம் ஆண்டுக்கான சூரிய மின் கொள்கைகளை உருவாக்குவதிலும் இந்த நிறுவனம் பங்களித்துள்ளது.
ஸ்மார்ட் மினி-கிரிட்
தற்போது ஆரோவில்லுக்கான ஸ்மார்ட்மினி-கிரிட் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் இந்நிறுவனம் முழுமூச்சுடன் ஈடுபட்டுவருகிறது. இது வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் எங்கே வேண்டுமானாலும் இதை நிறுவ முடியும். சூரிய மின்னாற்றலைப் பொறுத்தவரை, பயன்படுத்தும் இடத்திலேயே அதை உற்பத்தி செய்துகொள்ளும் வகையிலிருப்பதே மிகுந்த பயனளிக்கும். உற்பத்தி, சேமிப்பு, விநியோக மேலாண்மை தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைப்ப தன் மூலம் ஸ்மார்ட் மினி-கிரிட் திட்டம் இதை எளிய முறையில் சாத்தியப்படுத்தும். சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் அது மாற்றத்தை ஏற்படுத்தும். இது போக, எதிர்கால புதுப்பிக்கத் தக்க ஆற்றல் திட்டங்களிலும் இந்நிறுவனம் முழு முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது.
அரசு என்ன செய்ய வேண்டும்?
சூரிய மின்னுற்பத்தி இதுவரை தமிழ்நாட்டு மக்களிடையே பெருமளவில் ஊக்குவிக்கப் படவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இழப்பு ஏற்படும் என்ற கணிப்பின் காரணமாகச் சூரிய மின் உற்பத்தியில் மின் வாரியம் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கிறது. ஆனால், சூரிய மின்னுற்பத்திக்கு ஆகும் செலவை நவீன தொழில்நுட்பம் பெருமளவு குறைத்துவிட்டது. இன்று நிலக்கரியைவிடச் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கு ஆகும் செலவு குறைவு என்பது நிதர்சனம்.
பொதுமக்களிடையே சூரிய மின்சாரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 30 சதவீத மானியத்துடன் வீடுகளில் சூரிய மின் கூரை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தைப் பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழ்நாட்டில் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாடு சூரிய மின் கொள்கை 2012இல் அறிமுகமான நெட் மீட்டர் முறையும் கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டு விட்டது. சூரிய மின் கூரை அமைப்பதற்கு அனுமதி வாங்குவதே சிரமம் என்கிற நிலை நிலவுகிறது. சூரிய ஆற்றல் பயன்பாட்டில் இருக்கிற இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைப் புதிய அரசு சீரமைக்க வேண்டும். மேலும் மின் வாகனங்கள், மின் அடுப்புகள் போன்றவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகப் புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.
இவை நடந்தால், நிலக்கரி பயன்பாட்டி லிருந்து முற்றிலும் வெளியேறும் நிலையைத் தமிழகம் எட்டுவது துரிதமாகும். தமிழ்நாட்டில் சூரிய மின்னுற்பத்தி சார்ந்த புதிய தொழில் வளர்ச்சியும் அதைச் சார்ந்த வேலைவாய்ப்பும் உருவாகும். முக்கியமாக, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய அரசு கொண்டிருக்கும் அக்கறையை அது உலகுக்கு உணர்த்தும்.
தொடர்புக்கு:mohamed.hushain@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago