முன்னத்தி ஏர் 20: ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர்

By பாமயன்

இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களுக்கு ஜப்பான் நாட்டின் மிகச் சிறந்த இயற்கை வேளாண் வல்லுநரான மசானபு ஃபுகோகாவைப் பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. உலகம் போற்றும் பெரும் வேளாண் அறிஞரான அவரிடம் பயிற்சி பெற்ற ஒரு தமிழர் நம்மிடையே இருப்பது பலருக்கும் தெரியாது. பொள்ளாச்சி அருகேயுள்ள மலையாண்டிப்பட்டணம் என்ற ஊரில் வாழும் அந்த இயற்கை வேளாண் முன்னோடி மது ராமகிருஷ்ணன். வேளாண்மையைச் சுலபமாகச் செய்யும் முறையைப் பற்றி இவர் எழுதியும் பயிற்சியளித்தும் வருகிறார்.

ஐம்பது ஏக்கர் மரங்கள்

பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் இவர். இவருடைய ‘சந்தோஷ் பண்ணை’ கோயம்புத்தூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனைமலை என்ற அழகிய சூழல் சிறப்புமிக்க இடத்தில் தனது பண்ணையை அவர் அமைத்துள்ளார். ஐம்பது ஏக்கர் பரப்பளவுள்ள இவருடைய பண்ணையில் பெரிதும் மரங்களே வளர்க்கப்பட்டுள்ளன. மலைவேம்பு, வாகை, தேக்கு, செம்மரம், சவுக்கு, குமிழ் போன்ற கட்டை மரங்களும், தென்னை மரங்கள், பாக்கு போன்ற கொட்டை மரங்களும், கோகோ, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழ மரங்களும் இவரது பண்ணையில் பரவிக் கிடக்கின்றன.

அடுக்குமுறை சாகுபடி

அடுக்குமுறை சாகுபடியாகத் தனது பண்ணையை இவர் மாற்றியுள்ளார். அதாவது ஒரு மரத்துக்கு இடையில், மற்றொரு மரப்பயிரை ஊடுபயிராக நடவு செய்துள்ளார். தென்னைக்கு இடையில் தேக்கு, அதற்கு இடையில் எலுமிச்சை என ஒன்றை ஒன்று சார்ந்து வளரும் வகையில் இவருடைய பண்ணை அமைந்துள்ளது. இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கான வருமானம் அதிகரிக்கிறது. நீரின் தேவை குறைந்துகொண்டுவருகிறது. உயர்ந்த மரங்களிலிருந்து விழும் இலைகள் மற்றப் பயிர்களுக்கு மூடாக்காகப் பயன்படும். இதன் மூலம் மண் வளம் அதிகரிக்கிறது; நுண் பருவநிலை உருவாக்கப்படுகிறது; அதன் மூலம் நல்ல குளிர்ந்த சூழல் உருவாகிறது.

உயிரிப் பன்மயம் அதிகமாவதால் பூச்சித் தொல்லைகள், நோய் தாக்குதல் குறைகின்றன; மண் அரிப்பு குறைகிறது; விளைச்சல் திறனும் பெருகுகிறது. அடுக்குமுறை சாகுபடி இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது.

உழவில்லா வேளாண்மை

ஜப்பானிய அறிஞர் மசானபு ஃபுகோகாவின் நுட்பங்கள், தமிழக உழவர்களின் இயற்கை வேளாண் உத்திகள் ஆகியவற்றை இணைத்து ‘சுலப வேளாண்மை’ என்ற ஒரு முறையை இவர் பரப்பி வருகிறார். வேளாண்மை மேற்கொள்வதற்குச் சுலபமாக இருக்க வேண்டும் என்பது இவருடைய கருத்து. இவருடைய பண்ணையில் பல பகுதிகள் உழவு செய்யாமல் விடப்பட்டுள்ளன. மண்ணை உழவு செய்யாமல் இருக்கும்போது, அதன் வளம் அதிகமாகும் என்ற ஃபுகோகாவின் கருத்தை இவர் பின்பற்றிவருகிறார்.

இத்துடன் வேறு பல இயற்கைவழி வேளாண் நுட்பங்களையும் இவர் பின்பற்றுகிறார். அமுதக் கரைசல், பஞ்சகவ்யம் போன்ற ஊட்டக் கரைசல்களையும், மூலிகை பூச்சிவிரட்டிகளையும் தயாரித்துப் பயன்படுத்துகிறார். மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார்.

இவர் தனது பண்ணையில் விளைந்த தேங்காயில் இருந்து எண்ணெய் எடுத்து, அதிலிருந்து சோப்பு தயாரித்துச் சந்தைப்படுத்துகிறார். தூய தேங்காய் எண்ணெய் சோப்பாக இருப்பதால், இது தரமுள்ளதாக விளங்குகிறது.

இயற்கை மாறுவதில்லை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல இயற்கைவழி வேளாண் பணிகளையும் ஆற்றியுள்ளார். பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.

பல்கலைக்கழகச் சிண்டிகேட் குழுவில் ஆறு ஆண்டுகள் பங்கேற்றவர். அகில இந்திய வானொலியில் ஊரக ஆலோசகராகப் பணியாற்றியவர்.

இவரும் இவருடைய நட்பு வட்டத்தினரும் இணைந்து ‘கோவை மரம் வளர்ப்போர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, மாதந்தோறும் கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

“மழை, மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது என்றும், இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும் என்றும், இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை; அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்துக்குக் காலம் மாறுகிறது” என்றும் கவிதையாய்ப் பேசுகிறார் மது ராமகிருஷ்ணன்.

இயற்கைக்குத் திரும்புங்கள்

“சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசுபடுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன” என்று உடல்நலம் பற்றியும் பேசுகிறார். இவரது பண்ணையில் பல இடங்களில் இதைப் பொறித்தும் வைத்துள்ளார்.

உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்க முடியும். `இயற்கைக்குத் திரும்புங்கள் அல்லது திருப்பப்படுவீர்கள்’ என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார் இவர்.

இயற்கை வேளாண்மைக்குள் நுழைந்தபோது பல்வேறு சோதனைகளை இவர் சந்தித்தார். அந்தச் சோதனைகளைத் தாங்கி ஒரு முன்னத்தி ஏராக நின்று, இன்று பலருக்கும் வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.

அடுத்த வாரம்: (பருத்திச் செடியும் பாரதக் கொடியும்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
மது ராமகிருஷ்ணன் தொடர்புக்கு: 94424 16543

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்