கிழக்கில் விரியும் கிளைகள் 17: தேவலோக பவளமல்லி

By கு.வி.கிருஷ்ணமூர்த்தி

சங்க இலக்கியத்தில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் ஒரு பாடலில் ‘சேடல்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள தாவரம் (சேடல், செம்மல், சிறு செங்குரலி குறிஞ்சிப்பாட்டு 82) அதற்கு முன்போ, பின்போ, எந்தத் தமிழ் இலக்கியத்திலும் அந்தப் பெயரில் காணப்படவில்லை. இந்தப் பாடலுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் ‘சேடல்’ என்பதற்குப் பவளமல்லி என்றும், உ.வே. சாமிநாதய்யர், பாரிஜாதம் என்ற பவளமல்லி என்றும் பொருள் கொடுத்தனர். இந்தக் கருத்தைத் தமிழறிஞர் கோவை இளஞ்சேரனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், இரண்டு காரணங்களுக்காக இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒன்று, தமிழ்நாட்டில் பண்டைய தமிழகம் மற்றும் குறிஞ்சி நிலப்பகுதியையும் சேர்த்து, பவளமல்லி எங்குமே, எப்போதுமே இயல் தாவரமாகக் காணப்பட்டதில்லை. செம்மல், சிறு செங்குரலி போன்று இயல்பாக வளர்ந்திருக்கவில்லை. இரண்டாவதாக, பக்தி இலக்கியக் காலத்துக்குப் பின்புதான் (ஏறத்தாழ 7-ம் நூற்றாண்டு) இது வளர்ப்புத் தாவரமாகத் தமிழகத்தில் நுழையத் தொடங்கியது. கோயில்களிலும் நந்தவனங்களிலும், வீடுகளிலும் இது வளர்க்கப்படத் தொடங்கியது.

எப்போது வந்தது?

பாரிஜாதத்தின் மலர்கள் மல்லிகை போன்று வெண்மை நிறம் கொண்டிருப்பதாலும், பண்டைய தமிழரின் தாவரப் பெயிரிடுதல் அறிவியலின்படியும், ஏற்கெனவே இருந்த மல்லி என்ற பெயருடன் பவள (ஏனெனில் இதன் மலரின் அல்லிக் குழாய் இளம் ஆரஞ்சு நிறத்துடனும் அல்லி வெண்மை நிறத்துடனும் கலந்து பவளம் போன்று தோற்றமளிப்பதால்) என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்டது. வெளியிலிருந்து தமிழகத்துக்கு வந்த மலர் என்பதைச் சுட்டுவதாகவும் அப்பெயர் அமைந்தது. 7-ம் நூற்றாண்டுக்குப் பிறகு இது தமிழர்களின் ஆன்மிகப் பண்பாட்டுடன் ஐக்கியமாகிவிட்டது.

எனவே, குறிஞ்சிப் பாட்டில் சுட்டப்படும் சேடல் தமிழகத்தில் இயல்பாக வளரும் பல மல்லிகை இனங்களில் ஒன்று தானேயொழிய, பாரிஜாதம் என்ற பவளமல்லி அல்ல. குறிஞ்சிப் பாட்டுக்கு உரை எழுதப்பட்ட காலத்துக்குள் பவளமல்லிகை தமிழகத்துக்குள் நுழைந்துவிட்டதால் நச்சினார்க்கினியரும், பின்பு உ.வே.சாவும் சேடலைத் தவறாகப் பாரிஜாதம்/பவளமல்லி என்று அடையாளம் கண்டனர்.

தடையை மீறி

இன்றைக்குப் பாரிஜாதம் (பவளமல்லி) ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற ஒரு தாவரமாக உள்ளது. ஆண்டாளுக்குப் பிடித்த மரமானதால் ஸ்ரீவைகுண்டம் கோயிலின் தல மரமாக மாறியது. சிவனுக்கும் பிரம்மாவுக்கும் உரிய மரமாகக் கருதப்பட்டுச் சீர்காழி, திருநாரையூர், திருக்கடிகை, திருக்கோட்டாறு, திருக்களர், தென்குரங்காடு துறை, மரக்காணம் போன்ற இடங்களிலுள்ள கோயில்களிலும் தலமரமாயிற்று. பெண் தெய்வமான வருணியின் முத்திரையாக இதன் பூக்கள் திகழ்ந்தன. இந்தியாவில் மசூதிகளுக்கு அருகில் முஸ்லீம்களும் இந்தத் தாவரத்தை வளர்ப்பதாகத் தகவல்கள் உள்ளன.

பவளமல்லியின் மணமுள்ள, அழகான மலர்கள் ஒன்று கோக்கப்பட்டு மாலையாகக் கடவுளுக்கு அணிவிக்கப்பட்டுப் பூஜை செய்யப்பட்டன. மகளிர் இதனைத் தம்முடைய கழுத்திலோ, தலையிலோ அணியக் கூடாது என்ற ஆகமத் தடை பொதுவாக இருந்தபோதிலும் மகளிர் இதனை அணிவர் என்று கோவை இளஞ்சேரன் கூறுகிறார். இதன் மணத்தைக் காற்றோடு உள்ளீர்த்து சுவாசித்தால், குறிப்பிடத்தக்க யோகா ஆற்றலைக் கொடுக்கும் என்றும் கூறுகின்றனர். இந்த உள்ளீர்த்தலை இது பூக்கும் முன்னிரவு வேளையில் (இது பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது) செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

(அடுத்த வாரம்: சூழல் மாசை வடிகட்டும் தாவரம்)

> கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் - தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்